5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறந்தால், கட்டாயம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமா..?
- Dr அர்ஷாத் அஹமட் -
அண்மையில் நீதி அமைச்சினால் வெளியிடப்பட்ட ஒரு சுற்று நிருபம் நாட்டில் பேசு பொருளாகியிருக்கிறது. (தற்போது அதனை இடைநிறுத்தியுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது)
தலை எது? வால் எது? என்று தெரியாமல் பலரும், பற்பல கருத்துக்களை வழமை போல தெரிவிக்க தொடங்கி இருக்கின்றனர். கொரோனா ஜனாசா எரிப்பு, கோத்தா வழிமுறை, மனித உரிமை மீறல், முஸ்லிம்களை வேண்டும் என்றே இலக்கு வைக்கும் நடவடிக்கை .. இத்தியாதி இத்தியாதி என்று ஆளுக்காள் தங்களது கருத்துக்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த பிரேதப் பரிசோதனை குறித்த சுற்றுநிருபம் பற்றி கருத்து தெரிவிப்பதற்கு முதல் ஒரு சில அடிப்படைகளை அறிந்து கொண்டால் எல்லா விடயங்களையும் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம்.
1. U5MR- Under 5 year mortality.
இது ஒரு நாட்டின் சுகாதார நிலைமையை அளக்கின்ற சர்வதேச சுட்டி. இது எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அந்த நாடு சுகாதாரத் துறையில் நல்ல நிலையில் இருக்கிறது என்று அர்த்தம். 2022ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இலங்கையில் U5MR 6.5 per 1,000 live births. அதாவது இலங்கையில் உயிரோடு பிறந்த 1000 குழந்தைகளில் 6.5 குழந்தைகள் தங்களது ஐந்து வயதை பூர்த்தி செய்வதற்கு முன்னே இறந்திருக்கின்றன. இது ஐரோப்பிய நாடுகளுக்கு, கிட்டத்தட்ட இணையான ஒரு பெறுமானம். இந்த 6.5 குழந்தைகளும் ஏன் இறந்தன? என்ற காரணங்களை, சுகாதார அமைச்சு, குடும்ப சுகாதார பணியகம், உலக சுகாதார நிறுவனங்கள் கூடி ஆராய்ந்த போது, அவைகளில் அதிகமான குழந்தைகளின் இறப்பு, பிறப்பின் போது உள்ள குறைபாடுகள் (congenital disease) காரணமாக நிகழ்ந்திருக்கின்றன என்று அறியப்பட்டிருக்கிறது. ஆகவே, அவற்றை தடுப்பதற்காக இவ்வாறான குழந்தைகளை, வயிற்றில் இருக்கும் போதே, அபோர்சன் செய்வதற்கான அனுமதி வழங்கும் சட்ட ஏற்பாடுகள் அண்மையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
அதுபோல, வேறு சில இறப்புகளில் இறப்புக்கான காரணங்கள் என்ன என்று தெளிவாக இல்லை. இதுதான் இங்கே சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் இறப்புக்கான காரணங்கள் எவை என்று தெளிவாகத் தெரிகின்ற போது தான், அவற்றை எப்படித் தடுப்பது? என்பதை நாங்கள் கண்டறிந்து கொள்ள முடியும். அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இன்னும் சுகாதாரத் துறையை முன்னேற்ற முடியும்.
2. ஒரு இறப்பு ஏற்படுகின்ற போது அந்த இறப்பை எல்லா சந்தர்ப்பங்களிலும் வைத்தியர்கள் கொரோனருக்கு (தீடிர் மரண விசாரணை அதிகாரிக்கு) அறிவிக்க வேண்டிய எந்த தேவையும் இல்லை. அந்த இறப்புக்கான காரணத்தை வைத்தியர்கள் தெளிவாக அறிந்து கொண்டால், அவர்கள் cause of death (COD ) கொடுக்க முடியும். உடலை ரிலீஸ் பண்ண முடியும். தெளிவான காரணங்கள் தெரியாத சந்தர்ப்பத்தில், அதை கொரோனருக்கு அறிவிக்க வேண்டும். கொரோனர் இந்த உடலுக்கு போஸ்ட்மார்ட்டம் தேவையா இல்லையா என்பதை தீர்மானிப்பார். அல்லது, இது தான் COD என்று சந்தேகிக்கப்படும் ஏதாவது காரணம் ஒன்றை, COD ஆக உறுதிப்படுத்துவார். இது தான் பிரச்சினைக்குரிய இடம். ஏனெனில் பெரும்பாலான திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கு, மருத்துவம் குறித்த, அல்லது மரணம் குறித்த போதுமான தெளிவு இல்லாத காரணத்தால் பல்வேறு மரணங்களுக்கு வழங்கப்பட்டிருந்த COD சரியானதாக இல்லை. ஆதலால் அதை தவிர்ப்பதற்காக, மேற்குறித்த சுற்று நிருபம் நீதி அமைச்சினால் கொரோனர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அது வைத்தியர்களுக்கு அனுப்பப்படவில்லை. சுகாதார அமைச்சினால் வெளியிடப்படவும் இல்லை. ஆகவே சுகாதார அமைச்சில் ஏற்கனவே இருக்கின்ற எந்த நடைமுறையிலும், சேர்க்கூலரிலும் எந்த மாற்றமும் இதனால் ஏற்ப்படப்போவதுமில்லை. இது தான் அடிப்படை.
“அப்படியானால் COD குறிப்பிடப்பட்டிருந்தாலும் போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும்” என்று இந்த சேர்க்குலரில் சொல்லப்பட்டிருக்கிறதே என்று நீங்கள் கேட்கலாம். அங்கேதான் பிரச்சினை இருக்கிறது. ஏற்கனவே வைத்தியர் மரணத்திற்கான உறுதியான காரணம் தெரிந்திருந்தால் அந்த உடலை கொரனருக்கு அனுப்பி இருக்க மாட்டார். அந்த உடல் மரண சான்றிதழ் DC கொடுக்கப்பட்டு ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருக்கும். கொரோனருக்கு மரணித்த உடல் அனுப்பப்படும் சந்தர்ப்பங்களில் அதில் ஏதாவது ஒரு COD குறித்து சந்தேகம் இருக்கும். அல்லது தெரியாமல் இருக்கும். சந்தேகம் இல்லையென்றால் அதை கொரனருக்கு அனுப்ப வேண்டிய எந்த தேவையும் இல்லை. அப்படி சந்தேகத்திற்குரியதாக ஏதாவது COD கொடுக்கப்பட்டிருந்தாலும் அதை உறுதிப்படுத்தி DC கொடுக்காமல், அந்த உடல்களை போஸ்ட்மோர்டம் செய்ய அனுப்ப வேண்டும் என்பதுதான் இந்த சேர்க்குலர் சொல்லும் செய்தி. இதை புரிந்து கொண்டால் எந்த குழப்பமும் இல்லை. இதுகுறித்து தெளிவாக சுகாதார அமைச்சு இன்னும் ஒரு சுற்று நிருபம் வெளியிட வேண்டும். அதுவும் விரைவில் வெளியிடப்பட வேண்டும். அப்போதுதான் இந்த சிக்கல்கள் தீரும்.
உண்மையில் இவ்வாறான நிலைமைகளில் சரியான COD தெரியாத போது போஸ்ட்மார்ட்டம் செய்வதுதான் மிகச்சிறந்த வழிமுறை. எல்லா நாடுகளிலும் பின்பற்றப்படுகின்ற சர்வதேச வழிமுறை. இதில் எந்த வேறுபாடும் இனவாதமும் இல்லை. நாம் ஓவராக பில்ட் அப் கொடுக்க வேண்டியதில்லை.
ஆகவே மரணம் ஒன்று நிகழ்ந்தால் வைத்தியர் உறுதியாக ஒரு COD தெரிந்திருந்தால் அந்த உடலை டெத் சர்டிபிகேட் கொடுத்து வழமை போலவே அவர் ரிலீஸ் பண்ண முடியும். அதை அவர்கள் கட்டாயம் செய்ய வேண்டும். சட்ட ரீதியில் அணுகுவதற்காக/ சட்டப் பிரச்சினையிலிருந்து தப்புவதற்காக கொரனருக்கு அனுப்ப வேண்டியதில்லை. அதற்கு எந்தவிதமான போஸ்ட்மோர்ட்டமும் தேவை இல்லை. இதை சிறுவர்களுக்கு வைத்தியம் செய்யும் வைத்தியர்கள் கட்டாயம் விளங்கிச் செயற்பட வேண்டும். அப்படி இல்லையென்றால், கொரோனர் பார்த்துக் கொள்வார் என்று அவருக்கு அனுப்பினால் இனி தேவை இல்லாமல் அந்த உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யப்படும். சந்தேகமான ஏதாவது காரணங்கள் அல்லது உறுதி இல்லாத COD இருந்தால் அதை கொரோனருக்கு அறிவித்தால், முன்னைய காலங்களை போல, கொரோனர் தனக்கு விரும்பிய ஒரு COD கொடுத்து அந்த உடலை இனிமேல் விடுவிக்க பண்ண முடியாது. COD உறுதிப்படுத்துவதற்காக கட்டாயம் போஸ்மோட்டம் செய்ய JMO ற்கு அனுப்ப வேண்டும்.
இப்படி இந்த சேர்க்குலரை சரியான முறையில் விளங்கினால் இதில் எந்த குழப்பமும் இல்லை. வழமை போல உணர்ச்சிவசப்பட்டு இதை அணுக வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. கால் எது? தலை எது? என்று அறிந்தால் மாத்திரமே, நேர் எது, தலைகீழ் எது, என்பதை சொல்ல முடியும்.- Vidivelli
Post a Comment