Header Ads



கிண்ணியா மக்களின் தாராள மனசு - காசாவுக்காக 5.3 மில்லியன் ரூபா நிதி சேகரிப்பு (படங்கள்)


பாலஸ்தீன காசா சிறார்களுக்கான நிதி சேகரிக்கின்ற இலங்கை அரசாங்கத்தின் திட்டத்திற்கு கிண்ணியா பிரதேச மக்களினது பூரண பங்களிப்பினை பெற்றுக் கொடுக்க, கிண்ணியா மஜ்லிஸ் சூரா முன்னெடுத்த வேலைத் திட்டம் வெற்றிகரமானதாக நிறைவடைந்துள்ளது.


காஸா பிரதேசத்தில் கடும் துயரை எதிர் நோக்கும் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவுவதற்காக “கிண்ணியாவில் இருந்து காசா குழந்தைகளுக்கு..” என்னும் தொனிப் பொருளில் அமைந்த நிதி சேகரிப்பு நிகழ்ச்சி திட்டம் ஒன்று கடந்த 2024.04.14 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.


கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபை, பள்ளிவாசல்கள் சம்மேளனம், இளைஞர் அமைப்புகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட குடும்ப அங்கத்தவர் என்று பல அமைப்புக்கள் இந்தத் திட்டம் வெற்றி அடைவதற்கு தங்களுடைய முழுமையான பங்களிப்புகளை செய்திருந்தன.


நிதியை முறையாக சேகரிப்பதற்கு, பல்வேறு முறைகள் உருவாக்கப்பட்டிருந்தன.


அனைத்து பள்ளிவாசல்களிலும் நிதி சேகரிப்பு நடவடிக்கை அந்தந்த பள்ளிவாசல் நிர்வாகம் பொறுப்பெடுத்து, இதற்கான சிறந்த பங்களிப்பினை பள்ளிவாசல் நிர்வாகங்கள் மேற்கொண்டிருந்தன.


பாடசாலை மாணவர்கள் இந்த விடயத்தில் அதிக அக்கறையுடன் இருந்ததனால், பாடசாலை மாணவர்கள் நிதியை பாடசாலை அதிபர்கள் மூலம் அதனை உரிய கருமபீடத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.


மேலும், பொது நிறுவனங்கள் மற்றும் குழுக்கள் இதற்கான நிதியினை சேகரித்து ஒப்படைப்பதற்கு பல்வேறு குழுக்களும் நியமிக்கப்பட்டிருந்தன


இந்த நிதியை பெற்றுக் கொள்வதற்கான விசேட கருமபீடம் 19.04.2024 தொடக்கம் 23.04.2024 வரை மாலை 4.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரை கிண்ணியா ஜம்மியத்துல் உலமா காரியலத்தில் திறக்கப்பட்டிருந்தது. இந்த காலை எல்லைக்குள் 53 இலட்சம் ரூபா நிதி சேகரிக்கப்பட்டிருந்தது.


இது தொடர்பில் கிண்ணியா மஜ்லிஸ் சூராவின் செயலாளர் எம். எஸ். முகம்மது நியாஸ்,


காஸா சிறுவர் நிதியத்திற்கு கிண்ணியாவிலிருந்து பங்களிப்பு செய்யும் எமது முயற்சிக்கு பல்வேறு வகையிலும் ஒத்துழைப்பு வழங்கி, எமது பணிகளும் நோக்கங்களும் வெற்றி அடைவதற்கு கிண்ணியாவில் இருந்தும் ,கிண்ணியாவுக்கு வெளியில் இருந்தும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எங்களுடைய உளம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் அருள் புரிய வேண்டுமென பிரார்த்தித்தும் கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.


 கியாஸ்







No comments

Powered by Blogger.