December 08, 2021

நிறைய படிப்பினைகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கினூடாக நாம் கற்றிருக்கின்றோம் என்கிறார் ஹக்கீம், அவர் ஏற்படு செய்த விருந்துபசாரத்தில் சகல மு.கா. Mp க்களும் பங்கேற்பு

 

பல்லினங்கள் வாழ்கின்ற இந்நாட்டில் ஜனநாயக சூழலில் ஒரு சிறுபான்மை இனத்தின் உரிமைப் போராட்டத்தை எவ்வளவு பக்குவமாகவும், நேர்மையாகவும், வீரியமாகவும் முன்னெடுக்க முடியுமென்பதற்கான நிறைய படிப்பினைகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கினூடாக நாம் கற்றிருக்கின்றோம்.

இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

தற்போது இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் மற்றும் அவரது குழுவினர்,இங்குள்ள சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே.ஜேகப் ஆகியோருக்கு  பத்தரமுல்லை " வோடர்ஸ் எட்ஜ்" ஹோட்டலில் செவ்வாய்க் கிழமை (7)இராப்போசன விருந்துப

சாரமளித்து உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது, 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீனுடனான எங்களது நட்பு  நீண்ட நாட்களாக நிலவி வருகின்றது.இந்தியாவில் அவருடைய இயக்கம் நாடு தழுவியது. இந்திய துணைக் கண்டத்தில் வாழ்கின்ற முஸ்லிம்களின் சார்பில் அவர் முன்னெடுக்கின்ற மிக சாணக்கியமான அரசியல் நகர்வுகள் இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கும்  சிறந்த முன்னுதாரணங்களாக  இருக்கின்றன.  

பல்லினங்கள் வாழ்கின்ற இந்நாட்டில் ஜனநாயக சூழலில் ஒரு சிறுபான்மை இனத்தின் உரிமைப் போராட்டத்தை எவ்வளவு பக்குவமாகவும், நேர்மையாகவும், வீரியமாகவும் முன்னெடுக்க முடியுமென்பதற்கான நிறைய படிப்பினைகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கினூடாக நாம் கற்றிருக்கின்றோம்.

இஸ்மாயில் சாஹிப் தொடக்கம் மத்திய அமைச்சர் யஹ்யா அஹ்மட், அவருக்கு பின்னர் இங்கு வீற்றிருக்கின்ற பேராசிரியர் காதர் மொகிதீன் ஆகியோர் அனைவரும் இந்திய உப கண்டத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள் அனைவருக்கும் ஜனநாயக ரீதியில் எவ்வாறான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்த நல்ல வழிகாட்டுதல்களைத் தந்திருக்கிறார்கள்.

பேராசிரியர் காதர் மொகிதீன் திருச்சி மாவட்டம், புதுக்கோட்டையில் பிறந்து, ஒரு பத்திரிகையாளராக தன்னுடைய  தொழிலை  ஆரம்பித்து, சென்னை பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவில் மேற்படிப்பை முடித்த பின்னர் திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரியில் வரலாற்று துறைப் பேராசிரியராக நீண்ட காலம் கடமையாற்றியிருக்கின்றார். இலங்கையை சேர்ந்த மாணவர்கள் பலர் அவரிடத்தில் கற்றுத் தேறியிருக்கின்றார்கள்.

தன்னுடைய இளமைக் காலத்தில் அரசியலில் ஆர்வம் கொண்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குடைய இளைஞர் அணியின் முக்கிய தலைவராக இருந்து, அதன் பின்னரான  அரசியல் பயணத்தில் இந்திய லோக் சபா உறுப்பினராக வேலூர் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

பல்வேறு கால கட்டங்களில் தமிழ் நாட்டிலும், ஏனைய இடங்களிலும் இருக்கின்ற பள்ளிவாசல்களையும், ஜமாஅத்துகளையும் ஒன்றுபடுத்தி,அவற்றைப் பெரியதோர் அமைப்பாக அணி திரட்டி முன்னுதாரணமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் வெற்றிகண்ட தலைவராக அவரை நான் காண்கின்றேன். 

 நாங்கள் சென்னை செல்கின்ற போதெல்லாம் இன்முகத்துடன் எங்களை வரவேற்று அவர் அளிக்கின்ற விருந்துபசாரங்கள் மட்டுமல்ல,உயர் மட்டத்தில் எங்களுக்கு ஏற்படுத்தி தருகின்ற அரசியல் தொடர்பாடல்கள் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு நிறைய உதவியாக இருந்துவருக்கின்றன.

இன்று தமிழக முதலமைச்சர் தளபதி மு.கா.ஸ்டாலினின் ஆட்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முக்கிய பங்காளிக்கட்சிகளில் ஒன்றாகும்

நாட்டில் நெருக்கடியான இந்தச் சூழ்நிலையில் , அவருடைய வருகையையிட்டு அவசரமாக ஏற்பாடு செய்த இந்த விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும் என்றார்.

இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், மனோ கணேசன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், பைசல் காஸிம், எச்.எம்.எம் ஹரீஸ், எம்.எஸ்.தௌபீக், ஹாபிஸ் நசீர் அஹமட் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.அஸ்லம்,மூத்த ஊடகவியலாளர் என்.எம்.அமீன்,பாராளுமன்ற ஆய்வுப் பிரிவின் உயரதிகாரி அஜ்வதீன்  ஆகியோரும் கலந்துகொண்டனர். 


2 கருத்துரைகள்:

எப்படியெல்லாம் படம் ஓட்டுரானுகள்

முதலில் இந்திய முஸ்லிம் களை மோடியின் அராஜக ஆட்டத்தில் இருந்து விடுவித்து காட்டி விட்டு கற்றுக் கொள்ள வேண்டிய தை யோசிக்க வேண்டும்.

Post a Comment