Header Ads



காஸா பகுதியில் உள்ள, நிலைமை மனதை நொறுங்கச் செய்தது - மலேசியப் பிரதமர்


ஹமாஸ் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) தொலைபேசி வழி தம்மைத் தொடர்பு கொண்டு பேசியதாக பிரதமர் மொஹைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.

தற்போது கத்தார் நாட்டுத் தலைநகர் தோஹாவில் உள்ள இஸ்மாயில் ஹனியே, தொலைபேசி மூலம் தம்மைத் தொடர்புகொண்டு பாலஸ்தீனத்தின் தற்போதைய நிலைமை குறித்து விவரித்ததாக மலேசியப் பிரதமர் கூறியுள்ளார்.

ஹமாஸ் தலைவர் பாலஸ்தீன பகுதியில் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை விவரித்தபோது தன் மனம் வேதனைப்பட்டதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மொஹைதீன் யாசின், குறிப்பாக காஸா பகுதியில் உள்ள  நிலைமை மனதை நொறுங்கச் செய்ததாகத் தெரிவித்தார்.

பாலஸ்தீன மக்கள் மனவுறுதியுடன் இருப்பதாக இஸ்மாயில் தம்மிடம் தெரிவித்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

"இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கைகளில் காயமடைந்த மற்றும் உயிரிழந்துள்ள பாலஸ்தீனியர்களுக்கு மலேசிய மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களையும் வேதனையையும் நான் தெரிவித்துள்ளேன். பாலஸ்தீனியர்களுக்கு மலேசிய மக்கள்  தொடர்ந்து வழங்கிவரும் வலுவான ஆதரவுக்கும் அக்கறைக்கும் இஸ்மாயில் என்னிடம் நன்றி தெரிவித்தார்," என்று மலேசியப் பிரதமர் கூறியுள்ளார்.

பாலஸ்தீனிய போராட்டத்துக்கு மலேசியாவின் ஆதரவை மறு உறுதி செய்ததாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மொஹைதீன், பாலஸ்தீன மக்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதற்காக மலேசியா தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.

கடந்த ஒரு வார காலமாக பாலஸ்தீனப் பகுதிகள் மீது இஸ்ரேலிய துருப்புக்கள் கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதில் ஏராளமான அப்பாவிப் பொதுமக்கள்  பலியாகி உள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் தனது அராஜகப் போக்கை நிறுத்தவேண்டும் என மலேசியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

1 comment:

  1. இது காலவரை யிலும் தொடர்ச்சியாக மலேசிய மக்கள் மட்டுமன்றி தலைவர்கள் ஐப் போல முஸ்லிம் உம்மா பற்றி தைரியமாக முன்வந்து கருத்து சொன்ன நாடு மக்கள் தலைவர்கள் இல்லவே இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.