Header Ads



"வீரவங்சவின் வீட்டில் நடந்த பேச்சுவார்த்தையில், வெளிநாட்டு உளவுப் பிரிவினர் பங்கேற்பு"


கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிராக அமைச்சர் விமல் வீரவங்சவின் வீட்டில் நடத்திய பேச்சுவார்த்தையில் வெளிநாட்டு உளவுப் பிரிவுகளிடம் சம்பளம் பெறும் இரண்டு பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா தகவல் வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் விமல் வீரவங்சவின் தலைமையில் அவரது வீட்டில் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தினார். நாங்கள் உன்னிப்பாக இது குறித்து அவதானித்து வருகின்றோம். இந்த பேச்சுவார்த்தையின் பின்னணியில் இரண்டு மருத்துவர்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் வெளிநாட்டு உளவுப் பிரிவுகளிடம் சம்பளம் பெறும் நபர்கள். இதனை பொறுப்புடன் கூறுகின்றேன். தேவையானால் வரும் காலத்தில் இதனை வெளியிட முடியும்.

இந்த அரசியல் விவகாரத்தை நாங்கள் விரிவாக ஆராய்ந்த பின்னர், நடத்தை விதத்தை விரிவாக ஆராய்ந்த பின்னரே இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்துகின்றோம். இதனால், நாட்டு மக்களை மீண்டும் அதளபாதாளத்திற்கு கொண்டு செல்ல வழியை ஏற்படுத்த வேண்டாம் என நாங்கள் அமைச்சர் விமல் வீரவங்சவிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இதனால், கட்சி என்ற வகையில் அவர் வெளியிட்ட கருத்துக்களை திருத்திக்கொள்ளுமாறு கோருகின்றோம். பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் செயற்பாடுகளை விமர்சித்து விட்டு அமைச்சரவையில் தொடர்ந்தும் இருக்க தார்மீக உரிமை இருக்கின்றதா என மனசாட்சியிடம் கேட்குமாறு கூறுகின்றோம் எனவும் ரேணுக பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு உளவுப் பிரிவுகள், டொலர் காகங்கள் குறித்து குற்றம் சுமத்தி வந்த விமல் வீரவங்சவுக்கே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரின் வீட்டில் இருந்தவாறு வெளிநாட்டு உளவுப் பிரிவின் பிரதிநிதிகள் அரசாங்கத்திற்கு எதிராக சதித்திட்டம் தீட்டி, வெளிநாடுகளுடன் இருக்கு ராஜதந்திர உறவுகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்த சூழ்ச்சி செய்தால், அமைச்சர் விமல் வீரவங்ச கடந்த காலங்களில் கூறி வந்தது போல் தேசிய பாதுகாப்புக்கு தெளிவான அச்சுறுத்தல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

Powered by Blogger.