Header Ads



எந்த பயணியும் 2 மணித்தியாலங்களுக்கு மேல், விமான நிலையத்தில் நிற்க அனுமதிக்கப்பட மாட்டார்


(எம்.மனோசித்ரா)

விமான நிலையத்தில் வழமையான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் நாட்டை வந்தடையும் பிரயாணிகளை 2 மணித்தியாலங்களுக்குள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகளுக்கு ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே பணிப்புரை விடுத்துள்ளார்.

கொவிட்-19 கட்டுப்படுத்தல் தொடர்பில் பண்டாரநாயக்க சர்வதே விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் , மற்றும் எதிர்வரும் சில நாட்களில் சுற்றுலாத்துறை மற்றும் வழமையான விமான சேவைகளை ஆரம்பித்தல் என்பவற்றுக்கான சுகாதார பாதுகாப்பு முன்னேற்பாடுகள் என்பவை தொடர்பில் ஆராய்வதற்காக இன்று திங்கட்கிழமை விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட போதே அவர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது :

இதன் போது விமான நிலையத்தில் பயணிகள் உள்வருதல் மற்றும் வெளியேறல் பிரிவுகள் இராஜாங்க அமைச்சரினால் விசேட கவனத்தில் கொள்ளப்பட்டது. பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளும் இதன் போது கண்காணிக்கப்பட்டது. 

விமான பயணிகள் நாட்டை வந்தடைந்ததன் பின்னர் விமான நிலையத்தில் செலவிடும் காலம் குறித்து அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.

அதனையடுத்து எந்தவொரு பயணியும் 2 மணித்தியாலங்களுக்கு மேல் விமான நிலையத்தில் இருக்கக் கூடாதெனவும் அவர்களை 2 மணித்தியாலங்களுக்குள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகளுக்கு இதன் போது இராஜாங்க அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். விஜயத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் திருப்தியளிக்கவுள்ளதாகக் கூறினார்.

No comments

Powered by Blogger.