November 21, 2020

மனோ கணேசன் ஒரு முட்டாள் என, சீறிப்பாய்ந்த விமல் வீரவன்ச

​கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொழும்பு முடக்கப்பட்டுள்ளமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, கொழும்பு மாவட்ட எம்.பியான மனோ கணேசன், சபையில் இன்று (21) குரல் எழுப்பினார்.

மக்களுக்காக வழங்கப்பட்டிருக்கும் 5,000 ரூபாய் போ​தாது, அதனை அதிகரிக்கவேண்டும். இல்லையேல் இன்று ஆர்ப்பாட்டம் செய்ததைப் போல, இன்னும் சில நாட்களில் மக்கள் வீதிக்கு இறங்குவர் என எச்சரித்தார்.

இதன்போது கடும் கோபமடைந்து பதிலளித்த அமைச்சர் விமல் வீரவன்ச,

5,000 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். அந்த 5,000 ரூபாயை ஒருவாரத்தில் செலவழிப்பதற்கு வழங்கவில்லை எனக் கூறினார். இதன்போது, மனோ கணேசன் ஏதோ கூறுவதற்கு முயன்றார்.

அதற்கு இடமளிக்காத அமைச்சர் விமல், “ உட்காரு மனோ கணேசன், நீ முட்டாள், இதுதான் பதில், 5,000 ரூபாயை ஒருவாரத்துக்குள் செலவழித்து விட்டால் நாங்கள் என்ன செய்வது, இதுதான் பதில், இதுதான் பதில், என்றார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட, கொழும்பு, அளுத்மாவத்தை, இப்பஹவத்த பகுதியில் இன்றுக்காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தமது பகுதி தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால்,  தமது வாழ்வாதாரம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ் சுமத்துகின்றனர்.

5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ள போதிலும், ஒரு மாதத்துக்கு  மேலதிகமாக தமது பிரதேசம் முடக்கப்பட்டுள்ளது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில், கொழும்பு மாவட்ட எம்.பி. மனோ கணேசன் சபையில் உரையாற்றினார்.


அவர் தனதுரையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் பெரிதும் துன்பப்படுகின்றனர். அவர்களின் பிரச்சினைகளை சபைக்கு கொண்டுவருவது மக்கள் பிரதிநிதிகளாகிய எங்களுடைய கடமையாகும்.

“இது அரசியலுக்கு அப்பாற்பட்ட பிரச்சினையாகும். கொவிட்-19, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி​ என பிரித்து பார்க்கவில்லை. சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் என பார்க்கவில்லை. கொழும்பு, கம்பஹா என பிரித்தும் பார்க்கவில்லை” என்றார்.

கொழும்பில், வடகொழும்பு, பொரளை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்குளிய, மோதரை, ஜிந்துப்பிட்டி, கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளமையால் அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டள்ளனர்.

அங்கிருப்போரில் பெரும்பாலனவர்கள் அன்றாடம் உழைத்து சாப்பிடுபவர்கள், அவர்களுக்கு சாப்பிடுவதற்கு கூட இல்லை. கி​ராமங்களில் இருக்கும் ஏழைகளை விடவும் இந்த நகரத்துக்கு ஏழைகள் பெரும் சிரமப்படுகின்றனர்.

ஒரு துளி தண்ணீர் வாங்குவதற்கு கூட காசு வேண்டும். நகரத்து ஏழைகளுக்கு அதுசாத்தியப்படாது.  பணம் இல்லாவிடின் வாழமுடியது. 5,000 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது நல்லது. ஆனால், அந்த தொகை அதிகரிக்கப்படவேண்டும்.

முதல்நாள் கூலிக்குச் சென்று சம்பாதிக்கும் பணத்தில்தான் அன்றைய நாளை கடத்தவேண்டும். மறுநாளும் வேலைக்குச் செல்லவேண்டும். அவர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரியுள்ளேன். மாவட்ட ஒழுங்கிணைப்பு குழுக்கூட்டத்திலும் பேசினேன் எனத் தெரிவித்த மனோ கணேசன், கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தை நாங்கள் முன்​னெடுத்துகொண்டிருக்கிறோம் என்றார்.

மனோவின் ​ஆதங்கத்துக்கு பதிலளிக்கும் வகையில் எழுந்த அமைச்சர் விமல் வீரவன்ச, “ மனோ கணேசன் ஒரு முட்டாள், முட்டாள், இதுதான் பதில்” என்றார்

1 கருத்துரைகள்:

5000 is nothing against living cost in Colombo. it's nit enough even for a week. Is it imaginable to live over the month with this amount?
Govt. should consider the pathetic situation of those people, at the same time the people also realise the importance of the savings and should cut off the unwanted expenditures...

Post a comment