October 25, 2020

75 வயதில் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்..? பிரான்ஸ் ஜனாதிபதிக்கு மர்யம் எழுதிய உணர்வுமிகு கடிதம்


மாலியின் கிளர்ச்சிக் குழுவினரின் பிடியில் சுமார் நான்கு வருடங்கள் பணயக் கைதியாக இருந்து கடந்த 09.10.2020 வெள்ளிக் கிழமை விடுதலையான பிரான்ஸ் நாட்டு வீரப் பெண்மணி மர்யம் (75 வயது) இஸ்லாத்தை ஏற்ற பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரானுக்கு எழுதிய  கடிதம் பல்வேறு இலத்திரனியல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இது அதன் தமிழ் வடிவம்.

மர்யம் பெத்ரோனினிடம் இருந்து பிரான்ஸ் ஜனாதிபதி திரு மெக்ரோன் அவர்களுக்கு,

சத்தியப் பாதையில் பயணிப்பவர்களுக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

நீங்கள் பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் உள்ளதாக எனக்கு அறியக்கிடைத்தது. உங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி நியாயமானதே. எப்படி ஒரு தூய வெள்ளை இனத்தைச் சேர்ந்த, கத்தோலிக்க மதத்தை பின்பற்றும் சோபியா பெத்ரோனின் என்ற பிரெஞ்சு பெண்மணி 75 வயதை தாண்டியதன் பின்னர் இஸ்லாத்தை தழுவ முடியும்! அதுவும் நான்கு வருடங்கள் முஸ்லிம்களின் பிடியில் கைதியாக இருந்து விடுதலை அடைந்த போது இது நிகழ்ந்திருக்கிறது. இதுதான் உங்களுக்கு மிகப் பெரிய ஆச்சரியமாக இருந்திருக்கும். இது எப்படி நடந்தது?

திரு மெக்ரோன் அவர்களே!

அந்த ரகசியத்தை நான் கொஞ்சம் விபரமாக சொல்றேன் கேளுங்கள். நான் முஸ்லிம்களின் பிடியில் பணயக் கைதியாக இருந்தது உண்மைதான். ஆனால் அவர்கள் என்னுடன் ஒருபோதும் மோசமான முறையில் தரக்குறைவாக நடந்து கொள்ளவில்லை. மிகுந்த மரியாதை தந்து கண்ணியத்தோடும் பண்பாட்டோடும் தான் நடந்து கொண்டார்கள். எனக்கு உரிய முறையில் சாப்பாடு தந்து கவனிப்பதில் எந்தக் குறையும் வைக்க வில்லை. அவர்களிடம் போதிய அடிப்படை வளங்கள் இருக்கவில்லை. பல்வேறு பற்றாக்குறைகள் அவர்களுக்கு இருந்த போதிலும் கூட விட்டுக்கொடுப்புடன் எனது தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டினார்கள்.

அவர்கள் ஒருபோதும் நான் மானபங்கப்படும் வகையில் நடந்து கொள்ளவில்லை. யாரும் என்னை வார்த்தையாலோ அல்லது உடல் ரீதியாகவோ சீண்டவுமில்லை. எனது தனிப்பட்ட அந்தரங்க விஷயங்களை மிகவும் மதித்து மரியாதையோடு நடந்து கொண்டார்கள். அவர்கள் எனது மதத்தை குறை கூற வில்லை. ஈஸா (அலை) அவர்களையோ அல்லது அவர்களின் தாயார் மர்யம் (அலை) அவர்களையோ, நீங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்களை கொச்சைப்படுத்தி அவமானப் படுத்துவது போன்று அவர்கள் நிந்தித்து பேசவில்லை.

அவர்கள் என் மீது இஸ்லாத்தை திணிக்கவுமல்லை, இஸ்லாத்தை தழுவுமாறு நிர்ப்பந்திக்கவுமல்லை. ஆனாலும் நான் இஸ்லாத்தை அவர்களின் பண்பாடுகளிலும் அன்றாட வாழ்க்கையிலும் கண்டு கொண்டேன். அவர்கள் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து ஐவேளை தங்களது ரட்சகனுக்காக தொழுவதை கண்டேன். ரமழான் மாதத்தில் நோன்பு வைப்பதையும் கண்டேன்.

திரு மெக்ரோன் அவர்களே!

மாலி மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள  ஒரு வறிய நாடு. அங்குள்ள முஸ்லிம்கள் வறுமையில் வாழ்கின்றனர். அங்கு அவர்களுக்கு ஈபிள் கோபுரம் இல்லை. எமது நாட்டில் உள்ளது போல் உயர்ந்த ரக வாசனைப் பொருட்களை அவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனாலும் அவர்கள் மிக நல்ல முறையில் உடலை சுத்தமாக வைத்திருப்பார்கள். அவர்களின் உள்ளமும் பரிசுத்தமாக இருப்பதை காண முடிந்தது. அவர்களிடம் ஆடம்பர வாகனங்கள் கிடையாது. அவர்களுக்கு சொந்தமாக நட்சத்திர ஹோட்டல்களும் இல்லை. அவர்கள் மாட மாளிகைகளில் வசிப்பவர்களும் அல்ல. ஆனாலும் அவர்களின் நெஞ்சுறுதி வானளாவியது. அவர்களின் நம்பிக்கை மலையை விட உறுதியானது. அவர்களின் உள்ளங்கள் எப்பொழுதும் எல்லாம் வல்ல இறைவனையே நாடி நிற்கும்.

திரு மெக்ரோன் அவர்களே!

நீங்கள் உங்கள் வாழ்நாளில் அல்குர்ஆனை ஓதக் கேட்டதுண்டா? அவர்கள் அல்லும் பகலும் அல்குர்ஆனை ஓதுவார்கள். இரவு நேர தொழுகைகளிலும் ஓதுவார்கள். அது என்ன அழகான ஓதல்! அதன் ஒசை நயம் தான் என்ன! அது வசீகரிக்கும் சக்தி வாய்ந்தது. பொருள் விளங்கா விட்டாலும் மேனி நடுங்கும். உடல் சிலிர்க்கும். உள்ளத்தில் பூரிப்பை ஏற்படுத்தும்.

அவர்கள் குர்ஆனை மனனம் செய்து இதயத்தில் இருந்து ஓதுவார்கள். நீங்கள் அதனை செவிமடுக்கும் போதே உள்ளுணர்வு இது மனிதன் வார்த்தை அல்ல என்பதை உணர்த்தும். அது வானத்தில் இருந்து இறங்கிய தெய்வீக வாசகங்கள் என்பதை உணர்வீர்கள். காலை மாலை அவர்கள் ஓதும் குர்ஆனிய வசனங்களை கேட்கும் போது அதன் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற தீராத ஆசை உங்கள் உள்ளத்தில் பீரிட்டு பாயும்.

திரு மெக்ரோன் அவர்களே!

நீங்கள் அந்த முஸ்லிம்களைப் போன்று என்றாவது ஒரு நாள் உங்கள் வாழ்நாளில்  குனிந்து பணிந்து மண்ணில் நெற்றியை வைத்து வணங்கியதுண்டா? உங்கள் கவலைகளை படைத்த இறைவனிடம் சொன்னதுண்டா? இறையருட் கொடைகளுக்கு நன்றி சொன்னதுண்டா? என்றாவது ஒரு நாள் இறை நெருக்கத்தை உணர்ந்ததுண்டா? அவர்கள் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் இப்படித்தான் இறை தொடர்பை பேணுகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்வில் இருப்பதைக் கொண்டு திருப்தியோடு காண்பதை பாருங்கள். உங்கள் வாழ்வில் ஆயிரம் இருந்தும் நீங்கள் நிம்மதி இழந்து நிற்பதை பாருங்கள்.

திரு மெக்ரோன் அவர்களே!

அவர்களின் மேனி கரியைப் போன்று கருப்பு நிறமானது. ஆனால் பாலைப் போல வெண்மையான உள்ளம் கொண்டவர்கள். எளிமையான உடையை உடுத்துவார்கள்.  பெண்கள் அவர்களுடைய கணவர்களுக்கு மாத்திரமே அழகு ராணிகளாக திகழ்வார்கள். அந்நிய ஆண்களோடு தனித்திருக்கவோ, அந்நியோன்யமாக பழகவோ மாட்டார்கள். கணவன் இல்லாத நேரத்தில் பிற ஆடவர்களை வீட்டிற்குள் நுழைய அனுமதி தரமாட்டார்கள்.கற்பை பாதுகாப்பார்கள். தன் கணவனுக்கு துரோகம் செய்யவும் மாட்டார்கள். தங்கள் வாழ்க்கை துணைகளை புறந்தள்ளி விட்டு நாய்களோடு சல்லாபம் கொள்ளவும் மாட்டார்கள். அவர்கள் விபச்சாரம் செய்வதில்லை, மது அருந்துவதும் இல்லை. சூது விளையாடுவதும் இல்லை. தன்னினச் சேர்க்கை என்றால் என்னவென்றும் அவர்களுக்கு தெரியாது.

திரு மெக்ரோன் அவர்களே!

அங்குள்ள முஸ்லிம்கள் அனைத்து நபிமார்களையும் விசுவாசம் கொண்டுள்ளார்கள். ஈஸா (அலை)  அவர்களையும் தான். எங்களை விட அவர்கள் ஈஸா மீதும் அவர்கள் தாயார் மர்யம் மீதும் அன்பு வைத்துள்ளார்கள். மர்யம் (அலை) அவர்களை நபியின் மகள் பாத்திமா மற்றும் மனைவி கதீஜா (ரழி) அவர்களின் தரத்தில் வைத்து மதிக்கிறார்கள். மர்யம் (அலை) அவர்கள் மீது அவர்கள் காட்டும் அன்பு, பாசம் என்னை நெகிழ வைத்தது. அதனால் தான் நான் எனக்கு அந்த பெயரை சூட்டிக் கொண்டேன்.

திரு மெக்ரோன் அவர்களே!


அவர்கள் எங்களை விட எப்படி ஈஸாவின் மீது அன்பு செலுத்த முடியும் என நீங்கள் கேட்கலாம்? ஆம். அவர்கள் ஈஸாவின் மீது காட்டும் அன்பு எங்களை விட அதிகமாகவே உள்ளது. நாம் இயேசுவின் பெயரால் அப்பாவி ஏழை மக்களின் உயிர்களை குடித்துள்ளோம். அவர்களின் நாட்டை ஆக்கிரமிப்பு செய்து சொத்துக்களை சூறையாடியுள்ளோம். அவர்கள் மத்தியில் கலவரங்களை உண்டாக்கி ஆயுதங்களை விற்பனை செய்துள்ளோம். அவர்களின் அமைதியான வாழ்வை கபளீகரம் செய்துள்ளோம். அத்தனையும் செய்து விட்டு அவர்களை பயங்கரவாதிகள் என உலகிற்கு காட்டுகின்றோம். உண்மையில் நாம் தான் உண்மையான பயங்கரவாதிகள். அது அவர்களுக்கும் தெரியும்.

இருந்தாலும் அவர்கள் என்னுடனும் ஏனைய பணயக் கைதிகளுடனும் இயேசுவின் மனித நேயப் பண்புகளுடன் நடந்து கொண்டார்கள். வேதங்களில் இருந்து அந்த உண்மைகள் எங்களுக்கு போதிக்கப்பட்டன. ஆலயங்களில் அந்த பண்பாடுகளை நாம் கற்றோம். ஆனால் நடைமுறை வாழ்வில் அது எங்களிடம் இருக்கவில்லை. முஸ்லிம்களிடம் உள்ளது.

திரு மெக்ரோன் அவர்களே!

இந்த நான்கு வருடங்களில் இஸ்லாத்தின் மனித நேய பண்புகளையும் எளிமையான வாழ்வொழுங்கையும் நிதர்சனமாக கண்டதன் பிறகும் கூட சிறைவாசம் அனுபவித்த மாலி நாட்டில் நான் காதலித்த இஸ்லாத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை. காரணம் வாளுக்கு பயந்து நிர்ப்பந்த நிலையில் இஸ்லாத்தை தழுவியதாக பலர் எண்ணக் கூடும் அல்லவா. அதனால் தான் எனது தாயக மண்ணில் சுதந்திரமாக இருக்கும் நிலையில் நான் ஒரு முஸ்லிம் என்பதை பிரகடனம் செய்ய தீர்மானித்தேன். அதன் மூலம் மில்லியன் கணக்கான பிரஞ்ச் மக்களுக்கும் ஐரோப்பா வாழ் கிறிஸ்தவர்கள் மற்றும் நாத்திகர்களுக்கும் இஸ்லாத்தின் தூதை அறிமுகம் செய்ய முடியும் என தீர்மானித்தேன்.

திரு மெக்ரோன் அவர்களே!

இது தான் நான் அறிந்த இனிய இஸ்லாம் மதம். நீங்கள் அதற்கெதிராக இரவும் பகலும் பல சதிகள் செய்து போராடுகிறீர்கள். நீங்களும் மேற்குலக நாடுகளின் தலைவர்களும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் முஸ்லிம்கள் வாழும் மண்ணில் ஆக்கிரமிப்பு செய்கிறீர்கள். அதற்காக பல போலியான நியாயங்களை பரப்புரை செய்கிறீர்கள். இஸ்லாத்தை பூண்டோடு அழிப்பதற்கு கனவு காணும் இஸ்ரேலின் சதித் திட்டங்களுக்கு உதவுகிறீர்கள். ஆனால் இஸ்லாத்தின் தூய்மை என்னை கவர்ந்தது. இஸ்லாத்தின் மனித நேயம் என் உணர்வுகளில் பகுத்தறிவில் கிளர்ச்சி ஊட்டியது.

கண்கவரும் பிரான்ஸ் நாட்டின் இயற்கை அழகை விட வறிய நாடான மாலியின் எளிமையை நான் அழகாக காண்கிறேன். மீண்டும் அங்கு சென்று வாழ வேண்டும் என ஆவலாக உள்ளேன். எனது குடும்பம், உற்றார் உறவினர்கள், அன்பர்கள் நண்பர்கள், நாட்டு மக்கள் யாவரும் நான் பெற்ற இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். உங்களையும் அந்த தூய்மையான இஸ்லாத்தின் பால் வருமாறு அழைப்பு விடுக்கிறேன். இஸ்லாம் மதம் பற்றிய உங்கள் பிழையான புரிதல்களை  மீள்பார்வை செய்யுமாறு அன்பாய் வேண்டுகிறேன். நாளை இஸ்லாம் எனும் உதய சூரியனின் பார்வையில் உலகம் விழித்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அது எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு கஷ்டமானதும் அல்ல முடியாத காரியமும் அல்ல. நான் அந்த அல்லாஹ்வின் பால் முழுமையான ஈமான் கொண்டு மீளுகிறேன்.

சத்தியத்தை நேசித்து அந்த பாதையில் பயணிப்பவர்களுக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

இப்படிக்கு

இஸ்லாத்தின் நிழலில் மீண்டும் புதிதாய் பிறந்தவள்

மர்யம் பெத்ரோனின்


தமிழ் வடிவம் : முஹம்மத் பகீஹுத்தீன்

14 கருத்துரைகள்:

Allah aven virumpeyavarkalai kondu theeneuku pavipaan. alhamthulliha

சுப்ஹானல்லாஹ்

Masha Allah. Very clear message in a ploite manner. It makes me to thank Allah (swt) mor and more; Alhamdulillah.

AllahuAkbar.. What a great letter for all Aragon animals/people.

CC: திரு. ஜெயபாலன்
Mr. Kumar
Mr. Ajan
Mr. Anush...

Good promoter but hell is sure

Attn: Jaffna muslim Administrator
இஸ்லாத்தினதும் முஸ்லிம்களதும் எதிரிகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க இக்கடிதம் அடிக்கடி பயன்படலாம். ஆதலால், இதனை இம் முதல் பக்கத்திலேயே வைத்திருக்குமாறு அன்பாய் வேண்டுகின்றோம்.

Post a comment