Header Ads



ஹுஸைன் (ரழி) அவர்களின் மரணமும், கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும்.


இஸ்லாமிய வரலாற்றில் ஹுஸைன் (ரழி) அவர்களின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒன்றாகும். பல மாற்றங்களுக்கும் பிழவுகளுக்கும் அது காரணமாக அமைந்துவிட்டது.


ஹுஸைன் (ரழி) அவர்கள் ஹிஜ்ரி 4ஆம் ஆண்டு மதீனாவில் பிறந்தார்கள் நபியவர்களின் அன்பு மகள் பாதிமா (ரழி) அவர்களுக்கும் அலி (ரழி) அவர்களுக்கும் இரண்டாவது மகனாப் பிறந்த ஹுஸைன் (ரழி) அவர்கள் தோற்றத்தில் நபி (ஸல்) அவர்களை ஒத்திருந்தார்கள். நபியவர்களின் மடியில் வழரும் வாய்ப்பும் அவரது பாசத்தைப் பெரும் பாக்கியத்தையும் பெற்றார்கள். நபி (ஸல்) அவர்களால் அதிகம் நேசிக்கப்பட்ட ஹுஸைன் (ரழி) அவர்கள் அவரது தொழுகையிலும் குத்பாக்களிலும் கூட அவரது மடியிலும் தோளிலும் விளையாடினார்கள். சுவனத்து இளைஞர்களின் தலைவர்களில் ஒருவராக நபியவர்களால் புகழப்பட்டார்கள். ஹி.61ஆம் ஆண்டு கர்பழாவில் மரணித்தார்கள். 


ஹஸன் (ரழி) அவர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் மூலம் முழு இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் தலைவரான முஆவியா (ரழி) அவர்கள் பல பிரச்சினைகள் நிறைந்திருந்த இஸ்லாமிய அரசை தன் மரணத்திற்கு முன்னர் ஸ்தீரப்படுத்தவும் மரணத்திற்கு பின்னர் தொய்வின்றி நிலைத்திருக்கவும் உழைத்தார்கள்.


ஷாம் வாசிகள் முஆவியா (ரழி) அவர்களை அதிகமாக நேசித்தார்கள். கிலாபத்தின் முக்கிய பாத்திரத்தை வகித்தவர்கள் அவர்கள் என்பதால் அவர்களின் விருப்பும் ஒன்றினைவும் அடுத்த ஆட்சியாலருக்கான தேர்வில் பிரதான இடத்தைப் பிடித்திருந்தது தனக்குப் பிறகு தனது மகனில்தான் அவர்கள் ஒன்றினைவார்கள் என்பதை அறிந்துகொண்ட முஆவியா (ரழி) அவர்கள். கிட்டத்தட்ட அறுபதிற்கும் மேற்பட்ட ஸஹாபாக்களிடம் தனது முடிவில் ஆலோசனை கோரினார்கள் எல்லோரும் அதற்கு உடண்பட்டதும் அடுத்த கலீபாவாக தன் மகனை அறிவித்தார்கள். எஸீதுக்கு இப்னு உமர் (ரழி) அவர்கள் உட்பட அநேகமான ஸஹாபாக்கள் பைஅத் செய்தார்கள்.


எஸீதை விடவும் மிகவும் சிறப்புக்குரிய பல ஸஹாபாக்கள் அக்காலத்தில் வாழ்ந்தார்கள் என்றாலும் எஸீதே அடுத்த தலைவராக தேர்வு செய்யப்பட்டார் அது அன்றைய ஆட்சியாலராலும் அவருக்கு ஆலோசனை வழங்கியவர்களாலும் தீர்மாணிக்கப்பட்ட ஒன்று அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் கால சூழ்நிலைக்கு ஏற்ப எடுத்துக்கொண்ட முடிவை நம்மால் கேள்விக்குட்படுத்த முடியாது. 


ஆனாலும், இத்தேர்வு ஹுஸைன் (ரழி) அவர்களால் அங்கீகரிக்கப்படவில்லை. அவர் எஸீதுக்கு பைஅத் செய்யவில்லை. அதனால் முஆவியா (ரழி) அவர்களுக்கு செய்திருந்த பைஅத்தை முறித்துகொள்ளவுமில்லை. அவர்  மரணிக்கும் வரை பொறுமையாக இருந்த ஹுஸைன் (ரழி) அவர்கள் பின்னர் மக்காவுக்கு இடம்பெயர்ந்தார்கள். ஹுஸைன் (ரழி) அவர்கள் எஸீதுக்கு பைஅத் செய்யாமல் மக்காவில் இருக்கிறார்கள் என்ற செய்தியை அறிந்துகொண்ட அன்றைய ஷீஆக்களாகச் சொல்லப்படும் கூபாவாசிகள் ஹுஸைன் (ரழி) அவர்களை கூபாவிற்கு வருமாறு அழைப்புவிடுத்தனர். ஆரம்பத்தில் இவ்வழைப்புக்களை ஹுஸைன் (ரழி) அவர்கள் கண்டுகொள்ளவில்லை. 


இருந்தாலும் கூபாவாசிகள் விடுவதாக இல்லை அழைப்புக்கள் அதிகரித்தன ஹுஸைன் (ரழி) அவர்களுக்கு பைஅத்து செய்து கடிதங்கள் தொடர்ந்தது, தூதுவர்களும் அவ்வப்போது வந்துசென்றனர். கோரிக்கைகளும் பைஅத்துக்களும் அதிகரித்ததனால் அதன் உண்மை நிலையை தெரிந்துகொள்ள தனது நெருங்கிய உறவுக்காரரான முஸ்லிம் இப்னு அகீலை கூபாவிற்கு அனுப்பினார்கள். முஸ்லிம் இப்னு அகீல் கூபாவிற்கு வந்ததும்  மிகவும் சந்தோசத்தோடும் ஆரவாரத்தோடும் வரவேற்ற கூபாவில் வாழ்ந்த அன்றைய கால ஷீஆக்கள் கிட்டத்தட்ட 40ஆயிரம் பேர் ஹுஸைன் (ரழி) அவர்களை தலைவராக ஏற்று பைஅத் செய்தார்கள். நாளாந்தம் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது. 


தான் கூபாவில் வரவேற்கப்பட்ட செய்தியையும் ஷீஆக்கள் தங்களை தலைவராக ஏற்று பைஅத் செய்த செய்தியையும் முஸ்லிம் அவர்கள் தனது சகோதரன் ஹுஸைன் (ரழி) அவர்களுக்கு தெரியப்படுத்தினார்கள். இதனால் ஹுஸைன் (ரழி) அவர்கள் கூபாவிற்கு செல்ல முடிவு செய்தார்கள். இதைக் கேள்வியுற்ற ஆபு ஸஈத் அல் குத்ரி (ரழி), இப்னு உமர் (ரழி), இப்னு அப்பாஸ் (ரழி) போன்ற பல பெரும் ஸஹாபாக்கள் கூபாவிற்கு செல்ல வேண்டாம் என்று ஹுஸைன் (ரழி) அவர்களைத் தடுத்தார்கள், அஹ்லுல் பைத்தினருக்கு அது பாதுகாப்பான நிலமல்ல, அந்த மக்கள் அஹ்லுல் பைத்தினரைக் கொலை செய்தவர்கள், உன் தந்தையைக் கொலை செய்தார்கள், உன் சகோதரனுக்கு நஞ்சூட்டினார்கள், உன்னை அவர்கள் கொலை செய்துவிடுவதை நாங்கள் அஞ்சுகிறோம் என்று பல ஆலோசனைகளையும் சொன்னார்கள் பலரும் அவருடன் சன்டையிட்டனர்.  ஆனாலும் அல்லாஹ்வின் நாட்டம் வேறாக இருந்தது ஹுஸைன் (ரழி) அவர்கள் கூபாவை நோக்கி புறப்பட்டார்கள்.


ஹுஸைன் (ரழி) அவர்களின் வருகையையும் கூபாவாசிகளின் நிலையையும்  தெரிந்துகொண்ட எஸீத்  கூபாவின் கவர்னரான உபைதுல்லாஹ் பின் ஸியாதிற்கு விடயத்தை விளக்கியும் ஹுஸைன் (ரழி) அவர்களின் வருகையைத் தடுக்குமாறு உத்தரவிட்டும் கடிதம் எழுதினார். ஹுஸைன் (ரழி) அவர்களைக் கொலை செய்யுமாறு கடிதம் எழுதியதாக ஆதாரபுர்வமான எந்த வரலாற்று நூலிலும் காணப்படவில்லை. ஆனாலும் கடும்போக்காலனான உபைதுல்லாஹ் பின் ஸியாத் வேகமாகச் செயற்ப்பட்டு கூபாவின் நிலையை கட்டுக்குள் கொண்டுவந்ததோடு ஹுஸைன் (ரழி) அவர்களையும் கர்பலா எனும் இடத்தில் முற்றுகையிட்டு கொலை செய்தான். 


‘அல்கூபி லா யுபி’ (அதாவது கூபா வாசி வாக்குரியதை நிறைவேற்றமாட்டான்)என்பது வரலாற்றில் சொல்லப்படும் பிரபல்யமான பழ மொழிகளில் ஒன்றாகும். ஹுஸைன் (ரழி) அவர்களுக்கு பைஅத் செய்து அவர்களை கூபாவிற்கு வருமாறு அழைத்த அவரதும் அவரது தந்தையான அலி (ரழி) அவர்களதும் ஷீஆக்கள் என்று அறியப்பட்டவர்களே களத்தில் நின்று ஹுஸைன் (ரழி) அவர்களுக்கு எதிராக போரிட்டார்கள். அவர்களைக் கொலை செய்தவர்களில் பிரதானமானவர்களாக அறியப்பட்ட  ஷிம்ர் பின் தில் ஜவ்ஸன், ஷிப்ஸ் பின் ரிப்ஈ, ஸஹ்ர் பின் கைஸ் அர்ரிப்ஈ, கைஸ் இப்னு அஸ்அத் இப்னில் கைஸ், எஸீத் இப்னு ஹாரிஸ் அல் எஸீத், ஹிஜார் இப்னு அப்ஜர், அம்ர் இப்னுல்  ஹஜ்ஜாஜ் அஸ்ஸுபைதி, உர்வதுப்னு கைஸ் போன்றோர் ஷீஆக்களாக அறியப்பட்டவர்களாகும். 


இவர்களைப் பார்த்து ஹுஸைன் (ரழி) அவர்கள் அவர்களின் பெயர் சொல்லி அழைத்து நீங்கள் எங்களை ஏமாற்றிவிட்டீர்கள் என்று குறிப்பிடுகிறார்கள் மேலும் தனக்கு எதிராக வந்திருந்த ஷீஆக்களைப் பார்த்து சொல்கிறார்கள்  ~~என்னை இங்கு வருமாறு எனக்கு நீங்கள் கடிதங்கள் எழுதவில்லையா? நான் வந்தால் என்னுடன் சேர்ந்து போரிடுவதற்காக படைகளை தயார் செய்துள்ளோம் என்று நீங்கள் சொல்லவில்லையா?...  உங்கள் மீது நாசமுண்டாகட்டும் எங்களை இங்கு வருமாறு அழைத்தீர்கள் நாங்கள் இங்கு வந்ததும் எங்களை நிராயுதபானியாக்கி  எங்களுக்கு எதிராக போராடுகிறீர்கள். மேலும் சொன்னார்கள் நீங்கள் உங்கள் உடன்படிக்கையை முறித்துக்கொண்டீர்கள் எனக்கு நீங்கள் பைஅத் செய்திருந்தபோதும் அதை நீங்கள் முறித்துக்கொண்டீர்கள் இது ஒன்றும் உங்களுக்கு புதிதல்ல இதற்கு முன்னர் என் தந்தையுடனும் என் சகோதரனுடனும் என் சிறிய தந்தையின் மகனுடனும் அப்படித்தான் நடந்தீர்கள் நிச்சயமாக உங்களால் ஏமாந்தவனே உண்மையாக ஏமாந்தவனாகும்.


முஸ்லிம்களின் முக்கிய வரலாற்று நூல்களும், ஷீஆக்களின் நூல்களும், ஷீஆ அறிஞர்களும், அஹ்லுல் பைத்தின் முக்கியஸ்தர்களும், சில ஸஹாபாக்களும் ஹுஸைன் (ரழி) அவர்களின் கொலையில் நேரடியாக பங்கெடுத்துக் கொண்டவர்கள் கூபாவில் வாழ்ந்த ஷீஆக்கள்தான் என்பதை தெளிவாக விபரித்துள்ளனர். 


வரலாற்றில் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக கருதப்படும் ஹுஸைன் (ரழி) அவர்களின் கொலை பாரதூரமானதும் அநீதியானதுமாகும் என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை அவரை அல்லாஹ் ஷஹீதாக ஏற்றுக்கொள்வானாக. ஆனால் இதில் நாம் புறிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன. 


வரலாற்றில் ஹுஸைன் (ரழி) அவர்கள் மாத்திரம் இப்படிக் கொலை செய்யப்படவில்லை அவரது தந்தை கொலை செய்யப்பட்டிருக்கிறார், அவரது சகோதரன் கொலை செய்யப்பட்டார், அவரை விடவும் பன்மடங்கு சிறப்புக்குரிய உஸ்மான் (ரழி) அவர்கள் மிகக் கொடூரமான முறையில் ஷீஆக்களின் மூதாதையர்களான ஸபஇய்யாக்களினால் கொலை செய்யப்பட்டார்கள், இவர்கள் அனைவரை விடவும் சிறப்புக்குரியவர்களான பல நபிமார்கள் ரஸுல்மார்கள் கொலை செய்யப்பட்டார்கள். 


இது அல்லாஹ்வின் நியதி அதை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் இவ்வாரான சந்தர்ப்பங்களில் அல்லாஹ்வும் அவனது தூதரும் எவ்வாறு எங்களை நடந்துகொள்ளச் சொன்னார்களோ அவ்வாரே நாம் நடந்துகொள்ள வேண்டும். ஒருவரின் மரணத்திற்காக உலகம் அளியும்வரை துக்கம் அனுஸ்டிப்பதும் அதற்காக பகைமைகளை உருவாக்குவதும் இஸ்லாமிய முறை கிடையாது. ஒரே நாளில் மரணமும் சந்தோசகங்களும் வெவ்வேறானவர்களுக்கு நடப்பது அல்லாஹ்வின் வழிமுறை. முஹர்ரம் மாதம் பத்தாம் நாளில் ஹுஸைன் (ரழி)அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அதே நாளில் மூஸா (அலை) அவர்களும் அவரது கூட்டத்தினரும் பிர்அவ்னின் கொடுங்கோலிலிருந்து பாதுகாக்கப்பட்டார்கள். இது அல்லாஹ்வின் ஏற்பாடாகும். 


ஹுஸைன் (ரழி) அவர்களும் அவர்களைக் கொலை செய்தவர்ளும் மரணித்துவிட்டார்கள் அவர்களுக்கு அல்லாஹ் எதை கொடுத்தானோ அதை அடைந்துகொண்டார்கள். அதை வைத்து  கிளர்ச்சிகளைத் தூண்ட முயற்சிப்பது முட்டால்தனமான செயற்பாடாகும். கூபாவில் அன்று வாழ்ந்த பெரும் பங்களிப்பில் நடைபெற்ற கொடுஞ்செயலை முழுவதுமாக அஹ்லுஸ்ஸுன்னாக்களின் தலையில் தினித்து வசைபாடுவதும் ஏற்புடையதல்ல. 


மேலதிக வாசிப்புக்காக.:


 அல்பிதாயா வந்நிஹாயா, தாரீஹுத்தபரி, முகத்திமதுப்னு ஹல்தூன், அல்காமில், ஸியரு அஃலாமின் நுபலா போன்ற அஹ்லுஸ்ஸுன்னா அறிஞர்களின் நூல்களையும் அல் இஹ்திஜாஜ், பிஹாருல் அன்வார், அஃயானுஷ்ஷீஆ, ஆஷுரா, மஆலிமுஸ் ஸிப்தைன் போன்ற ஷீஆக்களின் நூல்களையும் வாசிக்க முடியும்..


ஆக்கம்:

கலாநிதி. எம்.பி. எம். இஸ்மாயில் (மதனி)

No comments

Powered by Blogger.