"ஸுப்ஹானல்லாஹ்...!''
- Nooh Mahlari -
அப்துர் ரஹ்மான் அஸ்ஸுமைத். குவைத்தைச் சார்ந்த அழைப்பாளர். ஆஃப்ரிக்காவில் இவர் மூலம் பல்லாயிரம் பேர் இஸ்லாத்தில் இணைந்துள்ளனர். Direct Aid Africa என்ற தொண்டு நிறுவனம் மூலம் 1980 முதல் அழைப்புப் பணி செய்கிறார்.
ஆஃப்ரிக்காவில் தமக்கு நடந்த நிகழ்வை அவர் பதிவு செய்துள்ளார்:
அங்கு எங்களுடைய தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் மருத்துவரிடம் ஓர் ஆஃப்ரிக்கப் பெண், தமது குழந்தைக்கு உதவி கேட்டு அழுது கெஞ்சுவதைக் கேட்டேன்.
அந்தப் பெண்மணியின் அழுகை என்னை என்னவோ செய்ய, என்னவென்று விசாரித்தேன்.
டாக்டர் கூறினார்: "அவளுடைய மகன் கிட்டத்தட்ட இறந்துவிட்டான். ஒருபோதும் சுய நினைவு திரும்பாது. ஆனால் இங்குள்ள பிள்ளைகளுடன் அவனையும் சேர்த்துக்கொள்ளுமாறு அவள் வற்புறுத்துகிறாள். அவன் இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ்வான். அவனுக்கு செலவிடும் பணம் பயனற்றது''.
"அந்தக் குழந்தையைக் கவனிக்க தினமும் எவ்வளவு பணம் தேவை?'' என்று டாக்டரிடம் கேட்டேன். அவர் ஒரு தொகையைச் சொன்னார்.
அது எங்கள் ஊரில் ஒரு குளிர்பானம் வாங்கும் காசுக்கு சமம். நான் சொன்னேன்: "பரவாயில்லை, என் சொந்தப் பணத்தில் இருந்து செலவு செய்கிறேன். அவனை அனுமதியுங்கள்''.
உடனே அந்த ஆஃப்ரிக்கப் பெண் என் கரத்தை முத்தமிட விரும்பினாள். ஆனால் நான் அதை அனுமதிக்கவில்லை.
அவளிடம், "இன்னும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் என்னிடம் வாருங்கள்'' என்று கூறி, காசோலையில் கையெழுத்திட்டு ஒரு தொகையைக் கொடுத்தேன்.
அவள் புதிதாக இஸ்லாத்தை ஏற்றிருந்தாள். எனவே அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்பதற்காகவே நான் உதவினேன்.
மாதங்களும் ஆண்டுகளும் கடந்தன. உண்மையைச் சொன்னால் அந்தக் குழந்தை மரணித்திருக்கும் என்று நினைத்து அந்த நிகழ்வை நான் மறந்துவிட்டேன். 12 ஆண்டுகள் கடந்தன.
ஒருநாள் என் அலுவலகத்தில் நான் இருக்கும்போது என் உதவியாளர் வந்து, "ஓர் ஆஃப்ரிக்க பெண் உங்களை சந்திக்க வேண்டும் என்று பலமுறை வந்தார். இதோ இப்போதும் இங்கேதான் இருக்கிறார்'' என்றார்.
"அவளை அழைத்து வா'' என்றேன். அங்கே வந்த பெண்ணை என்னால் அடையாளம் காண முடியவில்லை. அழகான முகத்தோற்றத்தில் இருந்த ஒரு சிறுவனும் அவளுடன் இருந்தான்.
அவள்: "இது என் மகன். பெயர் அப்துர் ரஹ்மான். குர்ஆன் மனப்பாடம் செய்திருக்கிறான். நிறைய நபிமொழிகளும் மனப்பாடமாகத் தெரியும். அழைப்பாளராக வேண்டும் என்று விரும்புகிறான்''.
நான் ஆச்சரியத்துடன் கேட்டேன்: "அதை ஏன் என்னிடம் கூறுகின்றாய்? என்னால் என்ன செய்ய முடியும்?''
அந்தச் சிறுவனை பார்த்தேன். என்னோடு அரபு மொழியில் அழகாகப் பேசினான்.
அவன்: "அல்லாஹ்வுக்கு அடுத்து உங்கள் கருணை மட்டும் இல்லையென்றால் இப்போது நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன். என் அம்மா உங்கள் கதையையும், குழந்தைப் பருவத்தில் நீங்கள் எப்படி எனக்கு உதவினீர்கள் என்பதையும் என்னிடம் கூறியுள்ளார். நான் உங்கள் பராமரிப்பில் இருக்க விரும்புகிறேன். என்னால் ஆஃப்ரிக்க மொழியிலும் சரளமாகப் பேச முடியும். எனவே உங்களைப் போன்று அழைப்பாளராக விரும்புகிறேன். எனக்கு நீங்கள் உணவு மட்டும் தந்தால் போதும்''.
அதிர்ச்சியில் அந்தப் பெண்ணிடம் கேட்டேன்: "அன்று அந்தக் காப்பகத்தில் ஏற்றுக்கொள்ள மறுத்த பிள்ளையா இது?''
அவள், "ஆம்.. ஆம்..'' என்று கூறவும், அந்தச் சிறுவன், "அதனால்தான் உங்களைச் சந்திக்க வேண்டும் என்று அம்மா விரும்பினார். எனக்கு உங்கள் பெயரான அப்துர் ரஹ்மான் என்று பெயரிட்டார்'' என்றான்.
அஸ்ஸுமைத் சொல்கிறார்: "என் கால்கள் நடுங்கின. என்னால் நிற்க முடியவில்லை. கிட்டத்தட்ட தரையில் விழுந்தேன். மகிழ்ச்சியாலும் அதிர்ச்சியாலும் ஏறக்குறைய செயலிழந்தேன். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த அங்கேயே ஸுஜூதில் விழுந்தேன்''.
ஒரு குளிர்பானத்தின் விலை கொடுத்துகூட ஓர் ஆன்மாவை உயிர்பிக்க முடியுமா? சமூகத்துக்கு உயிரூட்டும் ஓர் அழைப்பாளரை உருவாக்க முடியுமா? "ஸுப்ஹானல்லாஹ்!'' என்று என்னை அறியாமல் கூறினேன்.
இப்போது அந்தச் சிறுவன் ஆஃப்ரிக்க பழங்குடியினரிடையே பிரபலமான அழைப்பாளராக மாறிவிட்டான்.
எத்தனையோ சின்னச் சின்னத் தொண்டுகள் பலரின் வாழ்க்கையையே மாற்றியுள்ளது.
நாமும் எவ்வளவு பணத்தை அர்த்தமற்றதாகவும் பயனற்றதாகவும் செலவிடுகிறோம். அவை நமக்கு சோதனையாகவும் வேதனையாகவும் மட்டுமே மாறுகிறது.
யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

Post a Comment