July 24, 2020

86 ஆண்டுகளுக்குப்பின் ஹாஜியா_சோஃபியாவில் இன்றுமுதல் தொழுகை ஆரம்பம்


- M S Abdul Hameed -

ஏற்கனவே அறிவித்தபடி இன்று ஜூலை 24 முதல் இஸ்தான்புல்லிலுள்ள புகழ் பெற்ற ஹாஜியா சோஃபியா மஸ்ஜிதில் தொழுகை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகையுடன் ஆரம்பமாகும் இந்த மஸ்ஜிதின் உள்கட்டமைப்பு மராமத்துப் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

மஸ்ஜிதின் தரையில் அற்புதமான நீலக் கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. துருக்கி முழுவதிலுமிருந்து பெருந்திரளாக மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் மஸ்ஜிதிற்குள்ளே மக்கள் குறைவாகவே அனுமதிக்கப்படுவார்கள்.

2

துருக்கிய நகரமான இஸ்தான்புல்லில் உள்ள ஒரு நீதிமன்றம் ஜூலை 10ம் தேதி வெள்ளிக்கிழமை வரலாற்றுச் சிறப்புமிக்க ஆயா சோஃபியா என்றழைக்கப்படும் ஹாஜியா சோஃபியா அருங்காட்சியகத்தை மஸ்ஜிதாக மாற்றுவதற்கு சட்டரீதியான தடை இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பைத் தொடர்ந்து, துருக்கிய அதிபர் ரஜப் தய்யிப் எர்துகான் மஸ்ஜிதைக் கட்டுவதற்கான நிறைவேற்று ஆணையில் கையெழுத்திட்டார், ஆயா சோஃபியா இப்போது துருக்கிய மத விவகாரத் துறையான 'தியானாட்'டின் சொத்து என்று அறிவித்தார்.

அதன் பிறகு, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு அந்த மஸ்ஜிதில் மீண்டும் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தக் காட்சி துருக்கியின் ஹேபர் டிவி உள்ளிட்ட பிற தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பப்பட்டது.

எர்துகான் பின்னர் நடத்திய தொலைக்காட்சி உரையில், "ஜூலை 24 முதல் ஆயா சோஃபியாவில் தொழுகை நடத்தப்படும்" என்று அறிவித்தார். "இருப்பினும், முழுமையான மஸ்ஜிதுக்கான பணிகள் முடிவதற்கு ஆறு மாதங்கள் ஆகும்" என்றார்.

"ஆயா சோஃபியாவை என்ன செய்வது என்று தீர்மானிப்பது துருக்கியின் இறையாண்மை உரிமை" என்றும் "இது ஒரு மஸ்ஜிதாக மாறினாலும், அது எல்லா மத மக்களுக்கும் திறந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

"எங்கள் மற்ற மஸ்ஜித்களைப் போலவே, ஆயா சோஃபியா உள்ளூர், வெளிநாட்டு, முஸ்லிம் அல்லது முஸ்லிம் அல்லாத அனைவருக்கும் திறந்திருக்கும்" என்றும் எர்துகான் கூறினார்.

ரோமானியப் பேரரசின் முதல் கிறிஸ்தவ மன்னரான கான்ஸ்டான்டினோபிள் என்பவரால் கி.பி 360ல் முதன்முதலில் ஆயா சேரஃபியாவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போதைய கட்டமைப்பை மன்னர் ஜஸ்டினியன் உருவாக்கினார்.

அதன் தொடக்கத்திலிருந்து கிபி 1204ம் ஆண்டு வரை, ஆயா சோஃபியா கிழக்கு ஆர்த்தடாக்ஸ் கதீட்ரலின் கீழ் இருந்தது. கிபி 1204 முதல் 1261 வரை ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கீழ் இருந்தது. கிபி 1261ல் அது கிழக்கு ஆர்த்தடாக்ஸ் கதீட்ரலுக்குத் திரும்பியது, இப 1453 வரை ஆர்த்தடாக்ஸ் தேவாலயம் ஆயா சோஃபியாவால் பராமரிக்கப்பட்டது.

கிபி 1453ல் உதுமானிய கலீஃபா சுல்தான் முஹம்மது அல் ஃபாத்திஹ் கான்ஸ்டான்டினோபிளைக் (இஸ்தான்புல்) கைப்பற்றிய பின்னர், அங்குள்ள கிறிஸ்தவர்களிடம் உரிய அனுமதி பெற்று அது மஸ்ஜிதாக மாற்றப்பட்டது.

வரலாற்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி அல் ஜஸுரா கூறுகையில், இஸ்தான்புல்லைக் கைப்பற்றிய பின்னர் ஆயா சோஃபியாவை விற்குமாறு மதகுருக்களிடம் சுல்தான் முஹம்மது அல் ஃபாத்திஹ் வேண்டுகோள் விடுத்தார். அவர்கள் அதற்கு சம்மதித்த பின்னர் தன் சொந்தப் பணத்தில் அதனை வாங்கினார்.

அவர் ஒரு வெற்றியாளராக தேவாலயத்தைப் பறித்திருக்கலாம். அல்லது அவர் அதை அரசாங்கப் பணத்தில் வாங்கியிருக்கலாம், ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. தேவாலயத்தைத் தனது சொந்தப் பணத்தில் வாங்கினார். அந்த வரலாற்று ஒப்பந்தம் இன்னும் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: அல் ஜஸீரா

0 கருத்துரைகள்:

Post a comment