Header Ads



சிறைக்குள் இருந்தபடி குற்றங்களை திட்டமிடுபவர்களின் நடவடிக்கை முறியடிக்கப்படும் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்


போதைப்பொருள், பாதாளஉலக கும்பல்கள்,திட்டமிட்ட குற்றங்கள் இல்லாத, அனைத்து சமூகத்தினரும் நீதியுடனும் பாதுகாப்புடனும் வாழும் நாடு எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.

பாதாள உலகத்தினர் செயற்படுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இவர்களை ஒடுக்குவதற்காக ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள முக்கிய நபர்களும் ஏனைய குற்றவாளிகளும் சிறைச்சாலைகளிற்குள் இருந்தவாறு கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி வெளியில் முன்னெடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளையும் முடிவிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள அவர் இவ்வாறான சட்டவிரோத தொடர்பாடல் வலையமைப்பினைகண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

புதிய சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தினை நியமித்துள்ளதை தொடர்ந்து சிறைச்சாலைகளில் இருந்து பல கையடக்க தொலைபேசிகள் சிம்காட்கள் மீட்கப்படடுள்ளன எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சிறைச்சாலைகள் போதைப்பொருள் குற்றங்களின் பிரதான சூத்திரதாரிகளினதும் பாதாள உலக குற்றவாளிகளினதும் புகலிடமாக மாறியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறைக்குள் இருந்தவாறு பாரியளவு போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்,மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன எனவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.