Header Ads



பொதுஜனப் பெரமுனவில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் அவசியமென்பதை முதலில் முஸ்லிம்கள் உணர வேண்டும்

முஸ்லிம் மக்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பது முதல், முஸ்லிம்களது அன்றாடப் பிரச்சினைகள் வரை அக்கறைடன் செயற்படக் கூடிய சரியான பொருத்தனமான தலைவர் பாரிஸ் ஹாஜியார் ஒருவரே.  கண்டி மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் நிச்சயமாக அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டதாகும் என்று  கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் அமைப்பாளரும் முன்னாள அமைச்சருமான வேட்பாளர் மஹிந்தானந்த அலுத்கம தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கண்டி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவில் வேட்பாளர் பட்டியலைத் தயார் செய்யும் வேளையில் அதில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில் பெரும் போட்டா போட்டி நிலவியது. கண்டி மாவட்டத்தில் 160000க்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக கண்டியில் பாரிஸ் ஹாஜியார் நிறுத்தப்படாவிட்டால் தான் பதவி துறப்பேன் என்ற பிரயத்தனதுடன் கடுமையான போராட்டம் நடத்தியே இத்தேர்தலில் அவர் களமிறக்கப்பட்டுள்ளார். இப்போராட்டத்தில் வெற்றி பெற்ற பாரிஸ் ஹாஜியார் நிச்சயம் முஸ்லிம், தமிழ், சிங்கள மூவின மக்களுடைய வாக்குகளைப் பெற்று நிச்சயமாக வெற்றி பெறுவது உறுதி என்று அவர் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் கண்டி மாவட்டத்தை விட பெரு எண்ணிக்கையிலான  முஸ்லிம் வாக்காளர்கள் இருந்த போதிலும் கூட அங்கு ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் நிறுத்தப்பட வில்லை. அது குருநாகல் மாவட்டத்திற்கும் வழங்கப்பட வில்லை. இவ்வாறான நிலையில் கண்டி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவில் ஒருவர் களமிறக்கப்பட்டுள்ளது தொடர்பில் முஸ்லிம்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் அவசியம் என்பதை முதலில் முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அவர் வெற்றி பெறச் செய்யா விட்டால் தோல்வியடைவது முஸ்லிம்களாகும். அவரல்ல. அவருக்கு நிறைய வசதிகள் இருக்கின்றன. ஜனாதிபதியுடன் நெருக்கமான உறவை வைத்திருக்கிறார். அவரது தொழிலைச் செய்து கொண்டு போக முடியும். இல்லையேல் தேசியப் பட்டியல் மூலமாவது அவரை பாராளுமன்றப் பிரதிநிதியாக உள்வாங்குவோம். கடந்த அரசாங்கத்தில்  எஸ். பி. திசாநாயக கூட தோல்வி அடைந்தவர். அவர் பாராளுமன்றம் வந்து ஓர் அமைச்சராக இருந்தார். 

கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி உள்ளிட்ட முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் என்னுடைய காலப்பகுதியிலேயே கூடுதலான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இருந்த போதிலும் அவர்களை விட என்னால் செய்யப்பட்ட அபிவிருத்திப் பணிகளே ஏராளம்.

உயிர்த்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற போது பல்வேறு இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன. இம்மாவட்டத்தில் ஒரு முஸ்லிம்களுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்று பிரதிப் பொலிஸ் மா அதிபரைத் தொடர்பு கொண்டு அச்சந்தர்ப்பத்தில் பாதுகாப்பை வழங்கியவர் யார் என்பதை இம்மாவட்ட முஸ்லிம்கள் நன்கறிவார்கள்.

முஸ்லிம் சமூகத்தின்; தேவைகளையும் பாதுகாப்புக்களையும் கருத்திற் கொண்டு பாரிஸ் ஹாஜியாரை வெற்றி பெறச் செய்வது முஸ்லிம் மக்களது பொறுப்பாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.