Header Ads



’வேட்பு மனுக்கள் செல்லுப்படியாகாது’ - தீர்ப்பு வரும் வரையிலும் காத்திருப்பதே உசிதம்

விடுமுறை தினங்களில் மேற்கொள்ளப்பட்ட எந்தவோர் அரச செயற்பாடுகளும் செல்லுபடியாகாது. அதில், சட்டபூர்வமான தன்மை இல்லை என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் சட்ட வல்லுநர்கள், ஆகையால், நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரையிலும் காத்திருப்பதே உசிதமானதென, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது வீட்டில், ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், நேற்று (06) கூடி, மேற்படி விவகாரம் தொடர்பிலும் நாட்டின் தற்போதைய நிலைமை, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவால் அலரி மாளிகையில் நடத்தப்பட்ட முன்னாள் எம்.பிக்களுடனான சந்திப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.

அதில், அரச விடுமுறை தினத்தில் முன்னெடுக்கப்படும் அரச செயற்பாடுகள் செல்லுபடியாகுமா? என்பது தொடர்பிலான வாத-விவாதங்களும் முன்வைக்கப்பட்டன.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை, திகதியை ஒத்திவைத்தமை மற்றும் நாடாளுமன்றத்தைக் கூட்டாமை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையால், நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர் அடுத்தகட்ட நகர்வு குறித்துக் கலந்துரையாடுவதற்கு இந்தக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது. இதில், ஐக்கிய தேசிய கட்சியின் சட்டவல்லுநர்கள் சிலரும் பங்கேற்றிருந்தனர்.

“வேட்புமனுக்கள், பொறுப்பேற்றல் பிரச்சினையை ஒரு சட்டத்துக்குள் மட்டுமே வரையறுத்துப் பார்க்க முடியாது. நாடாளுமன்றத் தேர்தல் சட்டம், விடுமுறைச் சட்டம் ஆகிய இரண்டையும் ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் விடுமுறை தினத்தில் வேட்பு மனுக்களைக் கையளித்தல், பொறுப்பேற்றல் ஆகியவற்றுக்கு எவ்விதமான இடையூறுகளும் உள்ளதெனக் குறிப்பிடப்படவில்லை” என்று, அதன்பொது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

“எனினும், விடுமுறைச் சட்டத்தின் 364ஆவது அத்தியாயத்தின் 5ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள 'Dies non' எனும் இலத்தீன் வசனத்தை, சட்ட அகராதியின் பிரகாரம் மொழிபெயர்த்துப் பார்க்கவேண்டும் என்றும் அதில், விடுமுறை தினத்தின் போது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு செயற்பாடும் சட்டரீதியானதாக அமையாதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று, சட்டவல்லுநர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

இந்நிலையில், “மார்ச் 16ஆம் திகதியன்று அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர், மார்ச் 17, 18 மற்றும் 19 ஆகிய தினங்கள் விடுமுறை தினங்களாகுமென விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர், வேட்பு மனுக்களைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் அறிவித்தலொன்றை விடுக்கின்றார். அவ்வாறாயின், விடுமுறை தினங்களில் மேற்கொள்ளப்பட்ட எந்தவோர் அரச செயற்பாடுகளும் செல்லுபடியாகாது. அதில், சட்டபூர்வமான தன்மையே இல்லை. ஆகையால், நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரையிலும் காத்திருப்பதே உசிதமானது” என, ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.

இதேவேளை, “ஓய்விலிருக்கும் எம்.பிக்களை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அழைத்தமையானது, அரசாங்கம் மட்டுமே இச்செயற்பாட்டை முன்னெடுக்கிறதென்ற படத்தை மக்களுக்குக் காட்டுவதற்காகும். ஆகையால்தான், இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி பங்கேற்கவில்லை” என ரணில் விக்கிரமசிங்க விளக்கியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான கூட்டத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் பங்கேற்றிருந்ததை முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன, ரணில் தலைமையிலான இக்கூட்டத்தில் வைத்துப் பாராட்டியுள்ளார்.

அத்துடன், “புலி... புலி... என்றவர்களுக்கு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தற்போது பூனையாகிவிட்டது” என்றும் இன நல்லுறவுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் தமிழர் பிரதேசங்களில் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை அரசாங்கத்தின் நேரடிக் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்கு நல்லதொரு சந்தர்ப்பமும் கூட்டமைப்புக்குக் கிடைத்துள்ளதென, அபேவர்தன தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-அழகன் கனகராஜ்

No comments

Powered by Blogger.