Header Ads



இலங்கையில் 24 மணி நேரத்தில் 14 கொரோனா தொற்றாளர்கள்

(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா வைரஸ்  குடும்பத்தின் கொவிட் 19 தொற்று காரணமாக இன்று இரவு 9 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 14 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இந் நிலையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று இரவு 9.00 மணியாகும் போது 217 ஆக அதிகரித்திருந்தது.  

புதிதாக அடையாளம் காணப்பட்ட அனைவரும் மட்டக்களப்பு, புனாணையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்  அவர்கள் அனைவரும் களுத்துறை மாவட்டம் - பேருவளை பகுதியில் இருந்து தனிமைப்படுத்தலுக்காக அங்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் எனவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர். 

பேருவளையில் இருந்து புனாணை தனிமைப்படுத்தல் முகாமுக்கு 219 பேர் அழைத்து செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொடர்பில் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந் நிலையிலேயே அந்த பரிசோதனைகளின் முடிவுகளின் படி தற்போது அங்கு  கொரோனா தொற்றாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

 இந் நிலையில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக உள்ள கொழும்பு தொற்றாளர்கள் எண்ணிக்கையை களுத்துறை மாவட்டம் நெருங்கியுள்ளது. 

இரவு 9.00 மணி வரையிலான காலப்பகுதியில் கொழும்பில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 45 ஆக இருந்த நிலையில் களுத்துறை மாவட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கை 44 ஆக இருந்தது. மேல் மாகாணத்தில் மொத்தமாக இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்கள் எண்ணிக்கை 113 ஆகும். இதில் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 24 பேரும் உள்ளடங்குகின்றனர்.

இந் நிலையில் கம்பஹா மாவட்டத்தின் ஜா-எல பகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த அப்பகுதியைச்  சேர்ந்த மேலும் 32 பேர்  திருகோணமலை, நாச்சிக்குடா  கடற்படை முகாமின் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு கடற்படையினரால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். 

இவர்கள் அப்பகுதியில் மறைந்திருந்த நிலையில் கடற்படை உளவுப் பிரிவினர் இவர்களை கண்டறிந்து இவ்வாறு அழைத்துச் சென்றனர். இவ்வாறு அவர்கள் அழைத்துச் செல்லப்பட முன்னர், கொரோனா வைரஸ் சோதனைகளுக்காக அவர்களது சளி மாதிரிகள் பெறப்பட்டன. 

ஏற்கனவே அப்பகுதியின் 80 பேர் இரு கட்டங்களாக கடற்படையினரால் ஒலுவில் கடற்படை முகாமின் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டிருந்த பின்னணியிலேயே 32 பேர் அழைத்து செல்லப்பட்டனர்.

 இந் நிலையில் இரவு 9.00 மணி வரையிலான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து இலங்கையில்  217 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் 7 பேர் மரணமடைந்துள்ளனர். 

No comments

Powered by Blogger.