Header Ads



கொரோனா பரவுவதை தடுப்பதற்கு அனைத்து, நடவடிக்கைகளையும் எடுக்க ஜனாதிபதி பணிப்புரை


கொரோனா அல்லது கொவிட்-19 வைரஸ் இலங்கையில் பரவும் ஆபத்து உருவானால் அதற்கு வெற்றிகரமாக முகம்கொடுப்பதற்காக அரசாங்கம் ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

கொரோனா வைரசினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவோரை சுகாதார பணிக்குழாமினால் பரிசோதனை செய்யவும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நோய்த் தொற்று தடைகாப்பு நிலையங்களை அமைத்துப் பேணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு அனைத்து நிவாரண நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவ அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று (06) அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ள செயலாளர் அவர்கள், இலங்கையை கொரோனா அச்சுறுத்தலில் இருந்து விடுதலை பெற்ற நாடாக ஆக்குவதற்கும் இயல்பு நிலையை பேணுவதற்கும் முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு ஏனைய தரப்பினருடன் இணைந்து வைரஸ் நாட்டில் பரவாதவாறு தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

இதில் சாதகமான விளைவுகளை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்க நிறுவனங்களும் பொது மக்களும் இணைந்து செயற்படவேண்டியது தேசிய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் எனக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர அவர்கள் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சுமுகமாக மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் மக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு மக்களின் மனோநிலையை மாற்ற வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான நாடுகளின் நிலைமை கட்டுப்பாட்டையும் மீறிச் சென்றிருப்பதால் இலங்கையும் இதற்காக தயாராக இருக்க வேண்டும் என்றும் செயலாளர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு நோய்த் தொற்றுத் தடைக்காப்பு, நோய் தவிர்ப்பு கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் செயற்படுவதற்கு அதிகாரம் உள்ளது.

No comments

Powered by Blogger.