March 20, 2020

முஸ்லிம் சமூக ஒற்றுமைக்கு, வேட்டு வைப்போரை அடையாளம் காணுவோம்

- றிப்தி அலி -

சீனாவிலிருந்து உருவான COVID-19 எனும் நோய் கடந்த இரு மாத காலமாக முழு உலகையும் ஆட்டிக்கொண்டிருக்கின்றது. கொரோனா எனப்படும் வைரஸினால் பரப்பப்படும் இந்த நோயின் காரணமாக உலகளாவிய ரீதியில் ஆகக் குறைந்தது 10,000 பேர் உயிரிழந்துள்ளதுடன் 220,000 மேற்பட்டோர் இந்த நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த புதிய வகையான கொரோனா வைரஸ் கடந்த ஜனவரி 7ஆம் திகதி சீனாவின் வூஹான் மாநிலத்தில் அடையாளம் காணப்பட்டது. இதனால் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த வைரஸ் இத்தாலி, ஈரான், தென் கொரியா, எகிப்து, இந்தியா, பஹ்ரேன், ஆப்கானிஸ்தான் என சுமார் 140 நாடுகளுக்கு பரவியது.

இவ்வாறான நிலையில் இந்த வைரஸினால் இலங்கையில் பாதிக்கப்பட்ட முதலாவது நோயாளி கடந்த மார்ச் 10ஆம் திகதி அடையாளம் காணப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜயசிங்க அறிவித்தார். 52 வயதான இந்த நபர் ஒரு சுற்றுலா வழிகாட்டியாவார்.

இத்தாலி நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகளுடன் பணியாற்றிய நிலையிலேயே குறித்த வைரஸ் இவருக்கு தொற்றியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, உலக நாடுகளில் இந்த நோயின் பரவல் வீரியமடைந்ததினை அடுத்து இத்தாலி மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்த இலங்கையர்கள் நாடு திரும்ப ஆரம்பித்தனர்.

இவர்கள் அனைவரும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் மற்றும் கந்தக்காடு தடுப்பு நிலையம் ஆகியவற்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். இந்த நோய் நாட்டுக்குள் பரவுதனை தடுக்கும் வகையிலேயே இந்த செயற்பாடு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த செயற்பாடு உலகளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் கடந்த நேற்று வியாழக்கிழமை (18) மாலை வரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 56 பேர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார். இவர்கள் அனைவருக்கும் ஐ.டி.எச் உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்க  ஆரம்பித்தவுடன் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், அரபுக் கல்லூரிகள் மற்றும் தகம் பாடசாலைகள் ஆகியவற்றுக்கு கடந்த வாரம் முதல் விடுமுறை வழங்கப்பட்டது.

அது மாத்திரமல்லாமல் பொது நிகழ்ச்சிகள், விழாக்கள் மற்றும் பொது மக்கள் ஒன்றுகூடும் விதமாக நிகழ்வுகளை இரு வாரங்களுக்கு அரசு தடை செய்தது. இதனைத் தொடர்ந்து, கிஸ்தவ தேவாயலயங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில்  நடைபெறும் மத அனுஷ்டானங்களை உடனடியா நிறுத்துமாறு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சிதினால் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜும்ஆ மற்றும் ஜவேளைத் தொழுகை உட்பட அனைத்து ஒன்றுகூடல்களையும் மஸ்ஜித் மற்றும் பொது இடங்களில் தவிர்ந்துகொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிவித்தது.

எனினும், உரிய நேரத்திற்கு ஒவ்வொரு மஸ்ஜிதிலும் அதான் சொல்ல வேண்டும் எனவும் அதானின் முடிவில் 'ஸல்லூ பீ ரிஹாலிகும்' (நீங்கள் இருக்கும் இடங்களில் தொழுதுகொள்ளுங்கள்) என்று கூறுமாறும் ஜம்இய்யதுல் உலமா அறிவித்தது. இதற்கு மேலதிகமாக மஸ்ஜிதில் இருக்கும் இமாம் மற்றும் முஅத்தின் போன்றவர்கள் மஸ்ஜிதிலேயே ஜமாஅத்தாகத் தொழுதுகொள்ளுமாறும் அறிவித்தது.

இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாரகினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் இலங்கையில் இந்த அறிவிப்பு மேற்கொள்வதற்கு சில தினங்களுக்கு முன்னரே கொரேனா வைரஸினால் கடுமையாக பாதிக்கப்பட்ட அரபு நாடான குவைத்திலும் பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த செயற்பாட்டினை அந்த நாட்டின் இஸ்லாமிய விவகார அமைச்சு நேரடியாக கையான்டது. இதேவேளை, மலேசியாவில் இடம்பெற்ற தப்லீக் ஜமாதினரின் இஜ்திமாவில் கலந்துகொண்டவர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் கடந்த வார இறுதியில் அறிவித்திருந்தார்.  

சுமார் 16,000 பேர் பங்குபற்றிய இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் 95 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்தது. அது மாத்திரமல்லாமல் இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களை மலேசிய சுகாதார அமைச்சு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றது.

இதன் காரணமாகவே கொரோனா நோயினால் மலேசியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தீடிரென அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கு மேலதிமகமாக இந்த மாநாட்டில் கலந்துகொண்ட சிங்கப்பூர் மற்றும் புருணை உள்ளிட்ட பல அண்டை நாட்டவர்களுக்கும் இந்த நோய் பரவியுள்ளது.

அது மாத்திரமல்லாமல் இறை தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்து, வாழ்ந்த மக்கா நகரிலுள்ள புனித கஃபதுல்லாஹ்வில் மேற்கொள்ளப்படும் உம்ரா கடமையினை கொரேனா வைரஸ் தாக்கத்தினால் சவூதி அரேபியா அரசாங்கம் இடைநிறுத்தியது.

இதற்கு மேலதிகமாக கஃபதுல்லாஹ்வினை தவாப் செய்யும் பணிகள் ஒரிரு நாட்கள் இடைநிறுத்தப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட பின்னர் குறிப்பிட்ட எண்ணிக்கையான மக்கள் மாத்திரம் தற்போது தவாப் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், ஜூம்ஆ மற்றும் ஐங்கால தொழுகைகள் அனைத்தும்  இரு புனிதஸ்தலங்கள் தவிர்ந்த சவூதி அரேபியாவிலுள்ள ஏனைய பள்ளிவாசல்கள் எதிலும் தொழுவிக்கப்படமாட்டாது எனவும் அதான் மாத்திரம் ஒலிக்கப்படும் எனவும் சவூதி அரேபியாவின் மூதறிஞர்கள் சபை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தின் உத்தியோகபூர் டுவிட்டர் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறும் ஜும்ஆ தொழுகைகளை இடைநிறுத்துமாறு இரு வாரங்களுக்கு முன்னரே ஈரான் அறிவித்திருந்தது.

அதிகமான மக்கள் ஒன்றுகூடும் இடங்களினாலேயே இந்த வைரஸ் தீவிரமாக பரவுகின்றது என உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பினாலேயே அரபு நாடுகள் ஐங்கால தொழுகைகளை பள்ளிவாசல்களில் கூட்டாக தொழுவதை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனை ஒத்த வகையில், சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்கவும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையை கவனத்திற் கொண்டும், சர்வதேச உலமாக்களினதும், உலமா அமைப்புக்களினதும் தீர்ப்புக்களை அடிப்படையாகக் கொண்டும்  இலங்கையில் ஜும்ஆ மற்றும் ஜவேளைத் தொழுகை உட்பட அனைத்து ஒன்றுகூடல்களையும் மஸ்ஜித் மற்றும் பொது இடங்களில் தவிர்ந்துகொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அறிவித்திருந்தது. இதற்கமைய பல இடங்களில் பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன.

அத்துடன் இலங்கை வாழ் முஸ்லிம்கள் நேற்று வியாழக்கிழமை சுன்னத்தான நோன்பு நோற்று கொரோனா வைரஸ் பரவுவதினை கட்டுப்படுத்த பிரத்திக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிவித்திருந்தது. இந்த அறிவுறுத்தலினை இலங்கை வாழ் முஸ்லிம் ஏகமானதாக அங்கீகாரித்தனர். அத்துடன் இலங்கை வாழும் மாற்று சமயத்தவர்கள் இந்த அறிவிப்பினை வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதே போன்று இந்திய உலமா சபையும் இலங்கை உலமா சபையினைப் பின்பற்றி பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகைகளை இடைநிறுத்துமாறு அறிவித்தல் விடுக்க வேண்டும்.

இது தொடர்பில் இந்தியாவிலுள்ள முஸ்லிம் வைத்தியர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளமை இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு சகல தரப்பினரும் உலமா சபையின் தீர்மானத்திற்கு கட்டுப்பட்டு வரவேற்ற நிலையில்  சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் எனும் சிறிய அமைப்பொன்று மாத்திரம் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டதுடன் அவர்களது பள்ளிவாசல்களில் தொடர்ந்து தொழுகைகளில் ஈடுபட்டனர்.

அது மாத்திரமல்லாமல் சமூக ஊடகங்களில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கு எதிராக கடும் விமர்சங்களை முன்வைத்தனர். ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅதிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களினால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஆர். அப்துர் ராசிக் கடந்த 16ஆம் திகதி விசேட அறிக்கையொன்றினையும் வெளியிட்டிருந்தார்.

குறித்த அறிக்கையில், "பள்ளிகளில் ஐவேளை தொழுகை நடத்துவதையோ, ஜும்ஆ நடத்துவதையோ கொரோனாவை காரணம் காட்டி அரசாங்கம் தடை செய்யவில்லை.

இஸ்லாமிய மார்க்க விதிமுறைகளின்படி தொழுகை என்பது கட்டாய கடமையாகும். தொழுகையை வேண்டுமென்றே புறக்கணிப்பது குப்ரை ஏற்படுத்துமளவு உள்ள குற்றமாகும் என்பதை ஆதாரபூர்வமான நபிமொழிகளில் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

அதேபோல் யுத்த களமாக இருந்தாலும் கூட ஜமாஅத் தொழுகையை புறக்கணிப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் சலுகையளிக்க வில்லை. மாறாக அங்கும் தொழுவதற்குறிய முறைமையை தெளிவாக கற்றுத் தந்துள்ளார்கள்.

இப்படி ஜமாஅத் தொழுகையை கட்டாயக் கடமையாக இஸ்லாம் வலியுறுத்தி கூறியுள்ள நிலையில் கொரோனா வைரஸை காரணம் காட்சி தேவையற்ற அச்சத்தை செயற்கையாக உருவாக்கி பள்ளிகளை மூடி, ஜும்ஆ மற்றும் ஐங்கால தொழுகைகளுக்கு தடை விதிப்பது என்பது உச்சகட்ட மடைமையும், மார்க்கம் அறியாத தன்மையும் ஆகும்.

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் மர்கஸ்களில் ஜும்ஆ மற்றும் ஐவேலைத் தொழுகை உள்ளிட்ட மார்க்க கடமைகளை வழமை போன்று எவ்வித மாற்றமும் இன்றி செயல்படுத்துமாறு தலைமை நிர்வாகம் கிளைகளை வேண்டிக் கொள்வதுடன் சட்ட ரீதியாக இவற்றுக்கு எவ்வித தடைகளும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நினைவூட்டிக் கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் மார்ச் 18ஆம் திகதி தமது கிளைகளுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள மற்றொரு கடிதத்தில், "தற்போது கொரோனா தொற்று காரணமாக இதுவரை புத்தளம் மாவட்டம் மற்றும் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.

அதேபோல் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளில் ஐங்கால தொழுகை மற்றுமு; ஜும்ஆ தொழுகைகளை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாலும், அங்கீகாரம் கொண்ட அமைப்பான முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் அறிவுறுத்தியுள்ளதனாலும், கிளை நிர்வாகங்கள் தமது பகுதிகளில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியுடன் நேரடிக் கலந்துரையாடலை நடத்தி ஜும்ஆ தொழுகைக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தலைமை நிர்வாகம் வேண்டிக்கொள்கின்றது.

பாதுகாப்பு தரப்பினர் ஜும்ஆ தொழுகைக்கான அனுமதியை தர மறுக்கும் பட்சத்தில் 'எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்தமாட்டான்' என்ற திருமறைக் குர்ஆனின் (2:286) வசனத்தின் அடிப்படையில் நிர்பந்த நிலையை கருத்தில் கொண்டு வணக்க வழிபாடுகளை அமைந்துக் கொள்ளுமாறும் தலைமை நிர்வாகம் கிளைகளை வேண்டிக் கொள்கின்றது" எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, "கொரோனா வைரஸ் பரவுவதனை தடுக்கும் முகமாக வக்பு சபையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் ஐங்கால தொழுமைகயினை கூட்டாக தொழுவதனையும் ஜும்ஆ தொழுகையினையும் இடைநிறுத்துமாறு வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

எனவே, பள்ளிவாசல் நிர்வாகிகள் ஜும்ஆ தொழுகையையும் கூட்டாக ஐவேளை தொழுகையினை நடத்துவதனையும் மறு அறிவித்தல் வரை முற்றாக தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்" என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரப் கடந்த மார்ச் 17ஆம் திகதி அறிவித்தார்.

திணைக்களத்தின் இந்த அறிவிப்பு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் வேண்டுகோளினை அடிப்படையாகக் கொண்டே வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் "உலமா சபை சொன்னால் கேட்கமாட்டோம்; முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் பொலிஸாரும் கூறினால் கட்டுப்படுவோம்" எனக் கூறுவது ஒரு விதண்டாவாதமாகும்.

ஓர் அறிவித்தலையோ அல்லது ஆலோசனையையோ யார் விடுகிறார்கள் என்பதை பார்க்கிலும் அதன் அவசியம் மற்றும் அதற்கான பின்னணி குறித்தே கவனம் செலுத்த வேண்டும். கடந்த காலங்களில் இவ்வாறான விதண்டாவதங்களைச் செய்து இளைஞர்களை தவறான வழியில் திசை திருப்பியவர்கள் தான் கடந்த  ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதலினால் ஏற்பட்ட அனர்த்தத்திற்கு காரணமாகி ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் தலைகுனிவை ஏற்படுத்தினார்கள்.

இன்று அதைவிடவும் பாரிய சிக்கலொன்றுக்கு நாடு முகங்கொடுத்துள்ள இத்தருணத்தில் முழு நாட்டு மக்களையும் முஸ்லிம் சமூகத்தினையும் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காகவே முஸ்லிம்கள் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதையும் விமர்சித்து வைரஸ் பரவலுக்கு காரணமாகும் வகையில் செயற்படத் தூண்டுகின்ற சக்திகளுக்கும் ஏப்ரல் 21 இல் வெடித்துச் சிதறிய சக்திகளுக்கும் இடையில் எந்தவித வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை.

எனவேதான், முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு வேட்டுவைக்கின்ற, எல்லாவற்றிலும் முரண்படுகின்ற சக்திகள் இனங்காணப்பட்டு ஒரங்கட்டப்பட வேண்டும். இனிமேலும் இவ்வாறான சக்திகள் தோற்றம் பெற ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.

7 கருத்துரைகள்:

This writer has difference up and down in his article.
He says the closure of masjid and jumma is baseless then he finished we should follow for the good shake of country...
So which point you want to say to the public...?
Don't write anything with half knowldge

நிச்சயமாக கொரோனாவுடன் சேர்த்து இப்படிப்பட்ட முஸ்லிம் விரோத முனாபிக் வைரஸ்களையும் அரசாங்கத்துடன் சேர்ந்து இல்லாதொழிக்க அனைவரும் முன்வரவேண்டும்.

இவர்கள் இனியும் அறிவுரைகளை புறக்கணித்து நடந்தால் பொலிஸ் நிலையத்தில் புகார் அளியுங்கள். இவர்களின் விதண்டாவாதம் அங்கு பலிக்காது.

Iwanwal ennawo imam jamaththagha vidaamal yholuravanpola kadhaikiraanval oru wakththukkum wara maattanval ippo ennavo jamamathval pattri pesuraanval.

The article is absolutely correct and clearly explains what he has to tell the Muslims of this country and the CTJ.
The one who comments in a sarcastic way must be having lack of understanding in Tamil language.
My humble advice is to read it carefully.
My comment is not to put down anyone please.

They are ignorant who inferior to religion, they should be rejected by the community

This SLTJ was a paid coolie..what qualifications this nut radio has to explain from Holy Quran..if he and his paid cookies think that he is more knowledgeable than all the Muslim scholars in the world he should be admitted to IDH to check his brain infection or Angoda for brain overall.

Post a comment