Header Ads



ஏமாந்த சோனகிரிகளின் கதை,, தொட்டிலை ஆட்டிவிட்டு பிள்ளையை கிள்ளுதல்

Mujeeb Ibrahim 
சிங்கள பெளத்தர்களுக்கு பாதிப்பாக எதுவும் நடந்துவிடாமல் தடுப்போம் என்பதே இப்போதைய நவீன பெருந்தேசியவாத்தின் ( modern ultra nationalism) கோசம்.
சாய்ந்தமருக்கான தனியான உள்ளூராட்சி அதிகார சபை சிங்கள பெளத்த நலவுகளை எவ்வாறு பாதித்தது என்று நீங்கள் எவ்வளவு தலையை பிய்த்துக்கொண்டு யோசித்தாலும் பதில் கிடைக்கவில்லையா?
அதற்கு கனக்க யோசிக்க தேவையில்லை.
இலங்கை முஸ்லிம்களுக்கு அவர்களுக்கே உரியதான ஒன்றை, யாருக்கும் பங்கம் நேராத ஒன்றை வழங்கினாலும் அது பாவம், தெய்வ குற்றம் என்ற கட்டமைப்பை அவர்கள் பெரும்பான்மை சமூகத்திற்குள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
அந்த உருவாக்கம் சரியான உரமின்றி வளரமுடியாமல் தத்தளித்த போது ஈஸ்டர் தாக்குதல் நடந்தது. பின்னர் கட்டமைப்பு விஸ்வரூபமாக வளர்ந்தது.
கொத்து ரொட்டியில் கருத்தடை, டாக்டர் ஷாபி மீதான கருத்தடை குற்றச்சாட்டுகள், பெண்களின் உள்ளாடைகளில் கருத்தடை ஜெல் தடவுதல் போன்ற மோட்டு சித்தாந்தங்களை வடிவமைக்க தெரிந்தவர்கள் திடீரென நல்ல பிள்ளைகளாக ஆகி முஸ்லிம்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்தது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
MR & Co ‘இவ்வளவு நல்லவர்களா’ என்று அவர்களை அரசியல் ரீதியாக எதிர்ப்பவர்களும் மூக்கின் மேலே ஒரு கணம் கைவைத்து அதிர்ந்து போனார்கள்!
சாய்த்ததமருதுக்கான தனிச்சபை வாக்குறுதி என்பது வெறும் தேர்தல் வாக்குறுதி என்பதை ஆழமாக அறிந்து கொள்ளும் பக்குவம் நம்மில் பலருக்கு இருக்கவில்லை.
அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் விட்டிருந்தால் சாயந்தமருது மக்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்வார்கள்,தென்கிழக்கில் மொட்டுக்கு சார்பான ஆதரவு தளத்தில் அதிருப்தி ஏற்பட்டிருக்கும்.
இப்போது நடந்தது என்ன?
‘நாங்கள் உறுதியளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம்.
ஆனால் நாட்டில் சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்தது, ஏன் முஸ்லிம் மக்கள் வாக்குகளை அள்ளி வழங்கிய ஐக்கிய தேசியக்கட்சியே எதிர்த்தது! அதனால் அமைச்சரவை வர்த்தமானியை ரத்துச்செய்யும் இக்கட்டான முடிவுக்கு வந்தது’ என்று ஏலவே தயாரிக்கப்பட்ட கதையை ஓட்டி விடுவார்கள்.
இந்த இரட்டை நிலைப்பாடுகள் ( double standards) இந்த நாட்டு அரசியலில் புதுசா?
சாய்ந்தமருதில் கிடைத்த ஐயாயிரம் பத்தாயிரம் வாக்குகள் பெரிதா? அதற்கு சபை கொடுத்தால் இழக்க நேரும் இரண்டு மூன்று லட்சம் வாக்குகள் பெரிதா?
ராஜபக்‌ஷேக்கள் அறியாத கணக்கா?

1 comment:

  1. தவமா தவம் கெடந்தாலும் மரக் கட்சியால் எதுவும் செய்ய முடியாது என்பதும் மீண்டும் அதா கைதான் பெற்றுத் தரும் என்பதும் மருதூர் மட்டுமல்லாது கரவாகுப்பற்றும் கற்ற பாடம் என்பதை பத்தியாளரே இன்னும் ஓரிரு திங்களில் அறியவரும்.

    ReplyDelete

Powered by Blogger.