November 01, 2019

"அனுரகுமாரவின் ஆதரவாளர்கள் 2 ஆம் விருப்பத் தேர்வினை இடுவதன் அவசியம்"

- Raazi Muhammeth Jabir -

சஜித் பிரேமதாச அல்லது கோத்தாபய வெல்வதும் தோற்பதும் தற்பொழுது ஜே.வி.பி தரப்பினரின் கைகளில் இருக்கிறது.அதனை எப்படி அணுகுவது என்பது காங்கிறஸ்காரர்களின் கைகளிலே இருக்கிறது.

அனுரகுமாரவிற்கு முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆதரவு காங்கிறஸ்காரர்களை பயம் கொள்ளவைத்திருக்கிறது. அதனால் ஜேவிபினரை விமர்சிக்க ஆரம்பித்திருக்கின்றனர் காங்கிறஸ் கட்சியினர்.அந்த விமர்சனம் சஜித்தின் வெற்றியை இன்னும் தூரமாக்கும்.

அனுர குமாரவிற்கு வாக்களிக்க விரும்புபவர்கள் கொள்கை அரசியலால் ஈர்க்கப்பட்டவர்கள்.தோற்றாலும் பரவாயில்லை ஒரு கொள்கையை ஆதரித்த திருப்தி இருக்கும் என்ற நிலைப்பாட்டில் இருப்பவர்கள்.பாரம்பரிய அரசியல் கலாச்சாரங்களை விட்டு விலகி, பணம் வாங்கி வாக்குப் போடும் கலாச்சாரத்திற்கு அப்பால் நின்று ஒரு மாற்று அரசியல் தேவைக்காக மூன்றாம் சக்தியை ஆதரிக்கின்றனர்.இவர்களிடம் சென்று ஜேவிபி தவறானது,அது 89ல் செய்த விடயங்களைக் காட்டி விமர்சிக்கும் அரசியல் எடுபடப்போவதில்லை.உண்மையைச் சொல்லப் போனால் ஜே.வி.பியின் தவறுகள் என்று சொல்பவைகளையும் ஏனையவர்களின் அட்டூழியங்கள் என்று சொல்பவர்களையும் தராசில் வைத்துப் பார்த்தால் ஹக்கீமின் அரசியல் தராசு பாரம் தாங்காமல் பிய்ந்து விழுந்துவிடும்.ஆகவே கொள்கை ரீதியான ஆதரவை விரும்பும் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களை விமர்சன அரசியல் ரீதியாக அணுகுவது அவர்களை உங்களை விட்டு இன்னும் தூரமாக்கும்.

இனி கள நிலவரத்திற்கு வருவோம்.

அனுர குமாரவிற்கு ஏற்பட்டிருக்கும் ஆதரவால் வாக்கு ரீதியாக அதிகமாகப் பாதிக்கப்படுவது சஜித் பிரேமதாச.இது காங்கிறஸ் தரப்புக்கும் அனுரவின் ஆதரவாளர்களுக்கும் தெரியும் என்று நம்புகிறேன்.

ஏனெனின் கோட்டாபயவின் ஆதரவுத் தளம் சிங்கள தேசியவாத, பேரினவாத,சிறுபான்மையினருக்கு இடமில்லாத,இனவாத அரசியல் கொட்டிலாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.நல்லாட்சியில் இருந்த ரதன தேரர், விஜேதாச ராஜபக்‌ஷ கூட இக் கொட்டிலுக்கு சென்றுவிட்டார்கள். இனவாதத்தை மாத்திரம் கக்கிக் கொண்டு அரசியல் செய்கிறது கோட்டாவின் தரப்பு.

சம்பிக்க போன்ற முஸ்லிம் எதிர்ப்பு முகாம்களின் சூத்திரதாரிகள் சஜித்தின் தரப்பில் இருக்கிறார்கள்.அது வேறு கதை.ஆனால் சிறுபான்மையினரின் வாக்குகள்தான் சஜித்தின் வெற்றியைத் தீர்மானிக்கப் போகின்றன என்பதனால் ஒரு இனவாத நிலைப்பாட்டை சஜித்தால் இப்பொழுது எடுக்க முடியாது.வெற்றி பெற்றதன் பின்னர் என்ன செய்வார்கள் என்று சொல்ல முடியாது.சிறுபான்மை வாக்குகளைக் கொண்டு வெற்றி பெற்று விட்டு நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்களுக்கு அநீதிகள் நடந்தபோது அமைதியாக இருந்தது போல இருப்பாரோ சஜித் என்பதும் தெரியாது.தென் கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் கிரகலவில் ஏறிய போது சஜித்தின் கருத்துக்கள் அவரின் இனவாத அரசியல் நிலைப்பாட்டுக்கான ஆதாரங்கள்.

சிறுபான்மையினரின் எந்த ஆதரவும் இல்லாமல் இருக்கும் கோத்தபாய வெற்றி பெற்றால் பேரினவாதத்தின் மீளெழுச்சி கற்பனைக்கு எட்டாதவாறு பயங்கரமாக இருக்கும்.முஸ்லிம்களின் இருப்பை அதள பாதாளத்திற்கு கொண்டு செல்லும். புலிகளை இல்லாமல் ஆக்கி அந்த வெற்றியை ஒரு தேர்தல் கோஷமாக மாற்றி மஹிந்த 2005 தேர்தலில் இறங்கி வெற்றி பெற்றது போல 2024 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற ‘இல்லாத ஒரு இஸ்லாமியத் தீவிரவாதம்’ உருவாக்கப்பட்டு அதனைக் கொண்டு முஸ்லீம்கள் அழிக்கப்பட்டு 2024 தேர்தலுக்கான முதலீடுகள் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆக இரண்டு தரப்பும் முஸ்லிம்களின் அரசியல் இருப்புக்கு உத்தரவாதம் தர முடியாத தரப்புக்கள்.அதாவுல்லாஹ், ஹிஸ்புல்லாஹ் போன்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் அவர்களின் சுய நலனுக்காக கோத்தாபயவையும், ஹக்கீம்,ரிஷாட் போன்றவர்கள் அவர்களின் சுநலனுக்காக சஜித்தையும் ஆதரிக்கிறார்கள்.மக்களாகிய நாம் பக்க சார்பில்லாமல் நிதானமாக களத்தை அவதானிப்பது சிறந்தது.

கோத்தாபயவின் ஆதரவு சிங்கள அடிப்படை வாதத்தின் மீது கட்டியிருப்பதால் அவர்கள் அனுர குமாரவை ஆதரிக்கப்போவதில்லை. அவர்கள் கோத்தாபயவையும் அனுர குமாரவையும் ஒப்பிடப் போவதுமில்லை.சிங்கள பேரினவாதத்தின் ஆதரவாளர்கள் கோத்தாவை விட்டு மாறப்போவதுமில்லை.ஆனால் சஜித்தின் வாக்கு வங்கியில் உள்ள பல தரப்பட்ட,மட்டங்களில் உள்ள வாக்காளர்கள் அனுரவையும் சஜித்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்.சென்ற தேர்தலில் நல்லாட்சிக்கு வாக்களித்த  தொங்கும் வாக்களர்கள் எல்லாம் அனுரவின் பக்கம் திரும்புவார்கள்.முஸ்லிம் அரசியலில் வெறுப்புற்ற இளைஞர்களும் அனுரவின் பக்கம் திரும்பி இருக்கிறார்கள்.ஆகவே அனுர குமாரவிற்கு கிடைக்கும் ஆதரவு என்பது சஜித் இழக்கும் ஆதரவே.அதனால்தான் எந்த அரசியல் மேடையிலும் பொது ஜன பெரமுண ஜே.வி.பியினரை விமர்சிப்பதை தவிர்ந்து கொள்வதை அவதானிக்கலாம்.

ஜே.வி.பி ஆதரவாளர்களின் அரசியல் மனநிலை கொள்கை அடிப்படையிலானது.அதனால் ஒரு உறுதியான மூன்றாம் தரப்பை உருவாக்கவும்,ஏனைய பாரம்பரிய அரசியல் தலைமைகள் மீது அதிருப்தியைக் காட்டவும் நினைக்கிறார்கள். வரவேற்கத்தக்க விடயம்.இதனை இன்னும் ஆக்க பூர்வமாகச் செய்வதென்றால் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு அளிக்கும் வாக்குகள் மிகப் பெரிய இழப்பையும் செய்தியையும் முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு சொல்லும்.

இது ஜனாதிபதித் தேர்தல்.அவர்கள் எல்லோருக்கும் தெரியும் நிதர்சனத்தில் ஜே.வி.பி வெல்லப் போவதில்லை.ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பியினருக்கு அளிக்கும் வாக்குகள் ஒரு ஜனாதிபதியை கொண்டுவரப்போவதில்லை.எமது அதிருப்தியை மாத்திரம் பதிவு செய்யலாம்.ஒரு கொள்கைக்காக நின்ற திருப்தி கிடைக்கும் தோற்றாலும் இல்லாவிட்டாலும்.

இந்தத் தேர்தல் முஸ்லிம்களின் அரசியல் இருப்பு சம்பந்தமான தேர்தல்.இரண்டு பிழையானவர்களில் ஓரளவு சரியானவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இது.தேர்தல் முடிவில் சஜித் பிரேமதாச அல்லது கோத்தாபயதான் ஜனாதிபதியாக வரப்போகிறார்கள். அனுரவின் தரப்பு ஜனாதிபதியாவதற்கு இன்னும் 10 வருடங்களாவது ஆகலாம்.அதுவரைக்கும் பொறுத்து இருப்போம்.

ஒரு மாற்று சக்தியை ஆதரிக்கும் அதே வேளை ஜே.வி.பி ஆதரவாளர்கள் மேற் சொன்ன இருவரின் எவரை ஆதரிப்பது என்ற ஒரு முடிவையும் எடுக்க வேண்டும்.அதாவது தங்கள் முதலாவது விருப்பத் தேர்வை கொள்கை அரசியலுக்கும் மாற்று அரசியலும் இடும் வேளை முஸ்லிம்களின் இருப்பு சம்பந்தமான கேள்விகளுக்குப் பதிலாக தங்கள் இரண்டாம் விருப்பு வாக்கை அளித்தே ஆகவேண்டும்.

இரண்டாம் விருப்பு வாக்கை அளிக்காமல் ஜே.வி.பியினர் முதலாம் விருப்பு வாக்கோடு நிறுத்திக் கொள்வார்களாக இருந்தால் கோத்தபாய ராஜபக்‌ஷ மிகவும் இலகுவாக வெற்றி பெறுவார்.தப்பித் தவறி இரண்டாம் விருப்பு வாக்கு எண்ண அவசியமில்லாத ஒரு நிலை ஏற்பட்டால் அதாவது முதல் சுற்றிலே ஒருவர் வெல்வதற்கான வாய்ப்பு இருக்குமாக இருந்தால் ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி யினருக்கும் இடும் வாக்குகளே  ஒரு இனவாத அபேட்சகரை வெல்லவைக்க காரணமாகி எமக்கு ஆபத்தாகத் திரும்பலாம்.இந்தத் தேர்தலில் யாரும் 50 சதவீதம் எடுக்காமாட்டார்கள் என்ற எடுகோளில் ஜே.வி.பினருக்கு போடப்படும் முஸ்லிம் வாக்குகளில் இரண்டாம் வாக்கு இரண்டு அபேட்சகரில் ஒருவருக்குப் போடப்படாவிட்டால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

அதனால் ஜே.வி.பி ஆதரவாளர்கள் இந்த இரண்டாம் வாக்கை இடுவது பற்றி நன்றாக சிந்திக்க வேண்டும்.இது ஜனாதிபதித் தேர்தல் அல்லாத வேறு ஒரு தேர்தலாக இருந்தால் நீங்கள் ஜே.வி பிக்கு இடும் வாக்குகள் மாற்று அரசியல் பிரதிநிதி ஒன்றை உங்கள் பிரதேசத்தில் உருவாக்கும்.அது வேறு கதை.இது ஜனாதிபதித் தேர்தல்.இதன் தத்துவே வேறு.அதற்காக முதலாவது வாக்கை சஜித்து இடுங்கள் என்று கூறக் கூடாது.ஏனெனில் இந்த அரசியல் தலைமைகளின் மீதான அதிருப்தியையும்,வெறுப்பையும் மாற்றரசியலுக்கான தேவையும் நாட்டிற்கும் முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும் நாம் காட்ட முதலாவது விருப்பத் தேர்வை மூன்றாம் சக்திக்கு இட வேண்டும்.அரசியல் அகங்காரம் பிடித்த முஸ்லிம் அரசியல் தலைமைகளின் அரசியல் கொடுப்புப் பல்லை அது கழற்றிவிடும்.

முஸ்லிம் காங்கிறஸ் போன்ற கட்சிகள் ஜனாதிபதித் தேர்தல் முடிவில் இரண்டாம் வாக்குப் போடாமல் இருப்பது  என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அடிப்படையிலேயே ஜேவிபி ஆதரவாளர்களிடம் இரண்டாம் வாக்கை இடுமாறு கேட்க வேண்டுமே ஒழிய விமர்சன அரசியல்,கொள்கை விளக்க அரசியல்,அல்லது முதலாம் வாக்கைக் கேட்கும் நாடகம் ஜே.வி.பி ஆதரவாளர்களிடம் பலிக்கப் போவதில்லை.மாற்றத்தை விரும்பி நிற்கும் மூன்றாம் சக்தியினரிடம் ஒரு கோரிக்கையாக இரண்டாம் விருப்பு வாக்கை கேட்பதை சஜித்தின் அரசிய முகாம் அமுல் படுத்த வேண்டும் அந்த மாற்று சக்தியை விமர்சிப்பதை விடுத்து.

ஆனால் சஜித்தும் கோத்தாபயவும் ஒரே இனவாதப் புத்தகத்தின் இரண்டு பக்கங்களே.ஒன்று கழுத்தை வெட்டும்.இன்னொன்று கையை வெட்டும் அவ்வளவுதான்.

அனைவரும் சிந்தித்து செயற்படுங்கள்.

7 கருத்துரைகள்:

Muslim's votes to the JVP in this election is definitely betrayal,
some selfish fools misguiding society to achieve their parliamentary dreams through begging for national list from JVP. why we have to waste our votes while the majority still refusing them?

அல்லாஹ் தான் ஆட்சியாளன் அவனிடம் பிரார்த்தித்து விட்டு இதுவரையும் களவெடுக்காத ஒருவரை தெரிவு செய்வோம் நஷ்டத்தில் இயங்கிய milk-board ஐ இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றி சாதித்த ஒருவர் தான் அனுர., ஒவ்வொரு மூச்சிக்கும் கேள்வி உண்டு என்றார் ரசூலுல்லாஹ் ஆகவே பிழையானவர்களை தெரிவு செய்வதின் மூலம் நாளை மறுமையில் கேள்வி இருக்கும் என்று நினைக்கிறன்,

Very useful thoughts. Need of the hour.... And eye opening article.... Thank you Brother... Jazakhallah khairan for your kind concern... And thoughtful analysis..

One to Sajith, two to Anura and three to Mahesh Senanayake. Please don’t waste your second and third opinions.

Well said and constructive.

http://www.jaffnamuslim.com/2019/11/blog-post_39.html?m=1

Post a Comment