Header Ads



சிறுபான்மை மக்களை அச்சுறுத்தி தேர்தல், பிரச்சாரங்களை முன்னெடுக்கும் பொதுஜன பெரமுன

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச்  சேர்ந்தோர்  சிறுபான்மை மக்களை அச்சுறுத்தி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக   குற்றஞ்சாட்டியிருக்கும் திறன்கள்  அபிவிருத்தி  மற்றும்  தொழிற்பயிற்சி  பிரதி அமைச்சர்  கருணாரத்ன  பரணவிதான   தாம்   ஜனநாயக  ரீதியிலேயே தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்கப்போவதாகவும்  குறிப்பிட்டார்.

நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோக பூர்வ இல்லத்தில் இன்று -30- இடம் பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு  தெரிவித்த அவர்  தொடர்ந்து  கூறியதாவது  ,  

அடுத்தவாரம் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இடம் பெறவுள்ளது. அரசியல் கட்சிகள் அவற்றின் வேட்பாளர்களை நியமித்தவண்ணம் இருக்கின்றார்கள். ஐக்கியதேசியக் கட்சி  அதன் பிரதித்தலைவர் சஜித்  பிரேமதாசவை   நியமித்திருக்கின்றது.   

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைளை ஜனநாயக விதி முறைகளுக்கு இணங்க நாம் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கவுள்ளோம். 

 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி  தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான  அரசாங்கத்தினால் தேர்தலின் போது   சட்டத்திற்கு  புறம்பான சென்ற செயற்பாடுகள் பல இடம் பெற்றன.நாம் தற்போது அவ்வாறான நிலையை மாற்றியமைத்துள்ளோம். ஆகவே, அவ்வாறான  ஊழல்  மிகுந்த தேர்தல் பிரச்சாரங்கள்  இடம்  பெற  மாட்டாது மாறாக ஜனநாயக ரீதியாகவே தேர்தல் பிரச்சாரங்கள்   ஐக்கிய  தேசிய  கட்சியினால்  முன்னெடுக்கப்படும்.  

மேலும்,ஜனாதிபதி தேர்தலில்  போட்டியிடுவதற்கு அனைவருக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.அனைவருடைய எண்ணங்களுக்கும்  சுயாதீனத்துவம்  வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் எமது கட்சியின்  ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேம தாசவும் ஜனநாயக  ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன்,தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் முறையான  விதத்திலேயே  எதிர்காலத்தில்  இடம் பெறவுள்ளன. தேசப்பற்றுள்ள மக்கள் யார்பக்கம்  உள்ளார்கள் என ஜனாதிபதிதேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளின் போது கண்கூடாக பார்க்க முடியும் என அவர் தெரிவித்தார். (ஆர்.விதுஷா ) 

No comments

Powered by Blogger.