Header Ads



சுமத்ரா தீவில் பெரிய நிலநடுக்கம்: இலங்கைக்கும் எச்சரிக்கை - சுனாமி ஏற்பட வாய்ப்பு குறைவு

-BBC-

இந்தோனீசியாவின் தென் மேற்கு சுமத்ரா தீவுகள் பகுதியில் பெரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

7.0 அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், 76 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வளி மண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவிக்கிறது.

இன்று வெள்ளிக்கிழமை மாலை 5.33 அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் சுமத்ரா தீவுக்கு அருகிலேயே இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் விடுத்துள்ள அறிக்கை.

இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தை அடுத்து, இலங்கை வளிமண்டலவியல் திணைக் களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் உடனடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மக்களுக்கு ஆரம்ப அறிவித்தலை வழங்குவதற்காகவே இது வெளியிடப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஆரம்ப கட்ட ஆய்வுகள்படி, இலங்கை மற்றும் இலங்கை அருகே உள்ள நாடுகளுக்கு சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க பி.பி.சி தமிழிடம் தெரிவித்தார்.

எனினும், இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் குறித்து தாம் சர்வதேச வானிலை மையங்களுடன் தொடர்புகளை பேணி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தியா இதுவரை எந்தவித அறிவித்தல்களையும் வெளியிடவில்லை என தெரிவித்த இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி, தாம் அறிவித்தல்களை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறினார்.

No comments

Powered by Blogger.