August 21, 2019

சமூகம் நிம்மதியாக வாழ, மாற்றம் அவசியம் - முஸ்லிம் தாய் எதிர்பார்ப்பு

- நஜீப் பின் கபூர் -

நமது நாட்டில் எந்தவொரு அரசியல் கட்சியும் தனது கூட்டங்களை கொழும்பு காலிமுகத்திடலில் நடாத்த முன்வருவதில்லை. காரணம் சமுத்திரம் போன்ற அந்த மைதானத்தை நிரப்புவது என்பது சாத்தியமில்லலாத விடயம். அங்கு கூட்டம் போட்டு மூக்குடைபடுவதை விட வேறு ஏதாவது இடத்தை தேடுவதில்தான்  கட்சிகள் கவனமாக இருந்து வருந்திருக்கின்றன.

எமக்குக்குத் தெரிந்த அரசியல் வரலாற்றில் இந்த சவாலை இதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஸ தரப்பு ஏற்று அதில் வெற்றியும் பெற்றிருந்தார் என்பது வரலாற்றுப் பதிவு. ஒரு அரசியல் ஆய்வாலன் - ஆர்வலர் என்ற வகையில் அந்தக் கூட்டத்தை நாமும் நேரடியாக பார்த்து அது பற்றிய விமர்சனங்களை அப்போது சொல்லி இருந்தோம்.

அந்த வகையில் ஜேவிபி தனது வேட்பாளர் அறிமுகத்திற்கான கூட்டத்தை காலி முகத்திடலில் நடத்தப்போகின்றது என்ற போது, எமக்கு என்னடா இவர்கள் ஒரு விஷப் பரீட்டைசியில் இறங்குகின்றார்களோ என்று சற்றுச் சிந்திக்க வைத்தது. ஆனாலும் ஜேவியின் ஒழுங்கமைப்புக்களை பார்க்கின்றபோது இந்த ஏற்பாட்டை அவர்கள் நம்பிக்கையில்லாமல்  பண்ணி இருக்க மாட்டார்கள் என்றும் புரிந்தது.

இலங்கை அரசியல் கட்சிகள் தமது கூட்டங்களுக்கு ஆட்களைச் சேர்த்துவதற்காக சமகாலத்தில் சில உத்திகளைக் கையாண்டு வருவதும் தெரிந்ததே. பிரைட் ரைஸ்-புர்யாணி, குடிவகை, 1000 முதல் 2000 வரை காசு, சமூர்தி என்று சொல்லித்தான் ஆட்களைத் தேடிப் பிடிப்பது வழக்கம். அப்படி மந்தைகள் போல் இழுத்து வரப்பட்டவர்கள் கொழும்புக்கோ அல்லது அழைத்து வரப்பட்ட இடத்திற்கோ போய் இறங்கிய பின்னர், வந்தவர்களில் பாதிப்பேர் ஸ்கெப்பாகி ஊர் பார்க்க அல்லது சொப்பிங் போய்விடுவார்கள். 

பின்னர் திரும்பி வருகின்ற போது மந்தைகளை ஒன்று சேர்ப்பது போல எல்லோரையும் தேடிப்பிடிக்கின்ற ஒரு நிலை அங்கு இருக்கும். என்றாலும் பிரதான துரும்புச்சீட்டு என்று பணத்தை புத்திசாலித்தனமான ஏற்பாட்டாளர்கள் பயண முடிவில் கொடுப்பதால் கூலிக்கு மார் அடிக்கின்ற கூட்டம் வந்துதான் ஆகும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். இவை நமது அரசியலில் பகிரங்கமாக நடக்கின்ற உண்மைகள்.

இப்படிக் கூட்டத்துக்கு அழைத்து வரப்படுகின்றவர்கள் எந்த விதமான அரசியல் உணர்வுகளுமின்றி குடித்துக் கும்மலமடிக்கின்ற பட்டாளமாகத்தான் இருக்கும். மேலும் அந்தப் பயணம் துவங்கி முடிகின்ற வரை தெரு ஓரங்களில் உள்ள கல்லுக்கடைகளில் ஈக்களைப்போல் இந்தக் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருக்கும். அவர்களை அழைத்து வருகின்ற வாகனங்களால் வீதிகள் தடைப்பட்டுப் போயிருக்கும். இதனைச் சமளிப்பதற்கு  பொலிசார் பெரும் பேராட்டங்களை அங்கு நடத்திக் கொண்டிருப்பதனையும் நாம் பார்த்திருக்கின்றோம்.  அன்றாடத் தேவைகளுக்காகப் பயணிப்போர் 8-10 மணிநேரம் வரை வீதி நெரிசலில் சிக்கித் தவிக்க வேண்டி வரும்.

எனவே இலங்கை அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய உணர்வுபூர்வமானதும் கட்டுக்கோப்பானதுமான  அரசியல் பேரணியை நடத்தி இருக்கின்ற ஜேவிபி பற்றி சில வார்த்தைகள் சொல்லித்தான் ஆக வேண்டும்.

நாம் முன்பு சொன்ன இந்த அநாகரிகமான சம்பிரதாயங்களையெல்லாம் தகர்த்தெரிந்து, மிகவும் கட்டுக்கோப்பாக நடந்த இந்தப்  பேரணியை  கட்டுரையாளனால் நேரடியகப் பார்க்க முடிந்தது. 100 கிலோ மீற்றர் வரையிலான கட்டுரையாளனின் இந்தப் பயணத்தின் போது, பயணம் துவங்கிய இடம் முதல் காலிமுகத்திடல் வரை, வழியில் எந்த விதமான தங்கு தடைகளுமின்றி வாகானங்கள் அங்கு வந்து போய்க் கொண்டிருந்தது. கூட்டத்திற்குப் போவோருக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் எந்த ஒரு இடத்திலும் நெருக்கடிகலோ சிரமங்கலோ ஏற்படவில்லை என்பதனை அவதானிக்க முடிந்தது. அத்துடன் எந்த ஒரு இடத்திலும் மதுக்கடைகள் முன்னே இவர்களது ஒரு வாகனமேனும் தப்பித் தவறியாவது நிறுத்தப் பட்டிருக்கவில்லை.

பி.ப. 3.30 மணி அளவில் நாம் மைதானத்தை அடைகின்ற போது அது மக்கள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப் பட்டிருந்தது. கொழும்பு - காலி பிரதான வீதியில் வாகானங்கள் வழக்கம் போல் அங்கு ஓடிக் கொண்டிருந்தது. கூட்டத்திற்கு வருவோர் நேரே  மைதானத்திற்கு முன் வந்திறங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இது கடைசி நேரம் வரை நடந்து கொண்டிருந்தது. அந்த மாபெரும் மைதானச் சுற்று வட்டாரத்தில் வீதிப் போக்குவருத்தை ஜேவிபி செயல்பாட்டளர்களே நெறிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

அங்கு மிகப் பிரமாண்டமான மேடை போடப்பட்டிருந்தது. 27 அமைப்புக்கள் ஒன்றிணைந்த நாம் (அபி) என்ற அமைப்பின் வேட்பாளர் அறிமுகத்திற்காகத்தான் இந்த மேடை அமைக்கப்பட்டிருந்தது. கூட்டம் ஆரம்பமாகும் முன்னர் இந்த 27 அமைப்புக்களின் செயல்பாட்டுக்காரர்கள் மேடையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள்.  

பேச்சாளர்களுக்கு வழங்பப்பட்ட நேரத்தைக் கடந்து எவரும் ஒரு நிமிடமாவது மேலதிகமாக பேச அனுமதிக்கப்படவில்லை. இந்த அமைப்பை பிரதிநித்துவம் செய்கின்ற வடக்கை சேர்ந்து ஒரு பொறியியலாளர் ஆங்கிலத்தில் சிறப்பாக சில கருத்துக்களை முன்வைத்ததுடன், தனது பேச்சில் தாய் மொழியான தமிழிலும் சகோதர மொழியான சிங்களத்திலும் ஒரிரு வார்த்தைகள் பேசுவதாக முன் கூட்டியே அறிவித்தார். 

சொன்ன படி ஆங்கிலத்திலும் தமிழிழும் அவர் பேசினார். சிங்கள மொழியில் பேசுவதற்குள் அவருடன் நேரம் முடிவுற்றதால் அவருக்கு சிங்களத்தில் எதிர்பார்த்த சில வார்த்தைகளைச் சொல்ல முடியாமல் போனது. அவருக்கு அந்த வாய்ப்பை வழங்கி இருக்கலாமே என்று எண்ணினாலும் ஏற்பாட்டாளர்களின் கட்டுக்கோப்பை நாம் பாராட்ட வேண்டும். முன் கூட்டியே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் பேச்சாளர்களுக்குச் சொல்லி வைத்துத்தான் இருந்தார்கள். 

நாங்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் அவர் எதை சொல்லப்போகின்றார் என்பதை எதிர்பார்த்திருந்திருப்பார்கள் என நாமும் கருதுகின்றோம். இந்த இடத்தில் எஞ்ஜினியர் ஐயா நிர்மனப்பணிகளைச் செய்கின்றபோது துல்லியமாக அளவீடுகளைக் வகுப்பது போல் இங்கும் திட்டமிட்டு வேலை பார்த்திருந்தால் அந்த சில வார்த்தைகளை சிங்களத்தில் சொல்லி காரியத்தை கச்சிதமாக முடிந்திருக்கலாம்.

இந்த கூட்டத்தில் சிரமப்பட்டு உள்நுழைந்து பார்த்த போது வடக்கு, கிழக்கு மட்டுமல்லாது மலையகத்திலிருந்தும் குறிப்பிடத்தக்க சிறுபான்மை மக்கள் வந்திருந்தார்கள். அப்படி வந்திருந்த ஒரு சிலரிடம் நாம் பேச்சுக் கொடுத்த போது அவர்கள் இந்த கூட்டத்திற்கு மந்தைகள் போல் இழுத்து வரப்பட்டவர்கள் அல்ல உணர்வுபூர்வமாக வந்தவர்கள் என்று தெளிவாகத் தெரிந்தது.

நந்த கோபல் பதுளை - பசறையைச் சேர்ந்தவர். நடுத்தர வயதுக்காரர். இவ்வளவு தூரமிருந்து வந்திருக்கின்றீர்களே இவர்களால் ஏதாவது உங்களுக்கு நன்மைகள் கிடைத்திருக்கின்றதா? அல்லது ஏதாவது தந்து உங்களை அழைத்து வந்திருக்கின்றார்களா என்று அவரிடம் பேச்சைக் கொடுத்த போது, அந்த மனிதனின் முகத்திலிருந்து நெருப்புத் தெரிப்பது போல் இருந்தது. 

அவரோ நம்மைத் திட்டுவது போல் வார்த்தைகளைக் கொட்டத் துவங்கினார். என்ன இப்படி அசிங்கமா பேசுரீங்க சோத்துப் பார்சலுக்கும் அடுத்தவன்ட 1000 ரூபா நோட்டுக்காவும் போதை ஆர்வத்தில் கூட்டத்துக்கு போர ஆள் நானில்லீங்க...! 

நான் அவ்வப்போது கொஞ்சம் போட்டுக் கொள்பவன்தான். இந்தக் கூட்டத்துக்கு போகின்ற போதே குடித்துப்போட்டு எவரும் வரக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவு எங்களுக்கு போடப்பட்டது. வந்தவர்களில் நாங்க ஊத்திக்கிர ஆளுகள் சிலபேர் இருக்காங்க ஒருவர் கூட இன்னிக்கு அப்படிப் பண்ணல்ல.! என்று யதார்த்தமாக பேசினார் அந்த மனிதன். 

ஏன் இந்த கூட்டத்துக்கு வந்திருக்கின்றீர்கள்? என்ன எதிர்பார்ப்பு: என்று கேட்டதற்கு கள்வர்களுடனும், சுரண்டுபவர்களுடனும் கொலைகாரர்களுடனும் இருந்து அரசியல் செய்வதை விட தொழிலாளர்களுடன் இருப்பதுதான் எங்களுக்கு நல்லது. இத நம்ம ஆளுகள் உணரனும் என்று, அவர் சொன்ன போது மனிதனுக்கு விசயம் புரியுது நாம்ம தள்ளிப்போக வேண்டும் என்று தெரிஞ்சுது.

ஆங்காங்கே சில முஸ்லிம்களும் கூட்டத்தில் இருப்பதைப் பார்க்க முடிந்தது. அதில் சில பெண்களும், இளசுகளும் இருந்தார்கள். என்ன அரசியல் கூட்டத்தில் அதுவும் ஜேவிபி அரசியல் கூட்டத்தில் பர்தாவுடன் முஸ்லிம் பெண்கள்.! அவர்கள் எப்படி இங்கு வந்தார்கள்! கோல்பீஸ் பார்க்க வந்த இடத்தில் கூட்டத்துக்குள்ள சிக்கிக் கொண்டார்கள் போலும், எதுவாக இருந்தாலும் கேட்டுத்தான். பாத்துடுவோம். என்று அருகில் சென்று, அங்கிருந்த ஒரு தாயிடம் உங்களுடன் கொஞ்சம் பேசலாமா என்று கேட்ட போது, ஏன் என்று திருப்பிக் கேட்டார். 

இல்லை.. இல்லை.. ஜேவிபி அரசியல் கூட்டத்தில் முஸ்லிம் பெண்களும் இருக்கின்றார்கள் இது எப்படி நிழ்ந்தது என்று சொல்லி...! நான் ஒரு ஊடகக்காரன் என்று என்னை அறிமுகப்படுத்திய போது நான் என்ன பேசவருகின்றேன் என்பது அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். 

அப்படியா? 
எனக்கு அரசியலைப் பற்றிப் பெரிதாகத் தெரியாது? 
பெரிய கேள்விகளை எல்லாம் கேட்க வேண்டாம். என்ற கண்டிசனை முன்வைத்தார் அந்த சகோதரி.! ஓகே..! 

உங்களுடைய ஊர்: நீர்கொழும்பு - பெரியமுல்லை. 
பெயர்: திருமதி மொகம்மட் இது அவருடைய நிஜப் பெயராக இல்லை என்று நினைக்கின்றேன். அது எதுவகவும் இருந்து விட்டுப்போகட்டும். 
உங்களுடைய கணவன் ஜேவிபி. செயல்பாட்டுக் காரரா? 
இல்லை.! 
அப்படியானால் சகோதரர்கள் யாரும்: சீ..சீ...! அப்படி ஒன்றும் இல்லை. 
அப்படியானால் எப்படி இங்கு வந்து சேர்ந்தீர்கள்.? யாருடன் வந்தீர்கள்? என்று கேட்டபோது பக்கத்தில் இருக்கின்ற தனது வயதுக்கார சிங்களச் சகோதரிகள் சிலரை அவர் எனக்கு கையால் காட்டினார். 
அவர்கள் அழைத்ததால் வந்தீர்கள்...? பொழுது போகட்டுமே என்ற ஒரு நோக்கமா என்று நானும் தொடர்ந்தேன்.! 
இல்லை, இந்த நாட்டு அரசியலில் ஒரு மாற்றம் வேண்டும். குறிப்பாக முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ வேண்டும். இதுவரை இருந்தவர்களுக்கு எல்லாம் நான் வோட்டுப் போட்டுப்பார்த்து விட்டேன். அடிவாங்கியதுதான்  மிச்சம்.

நீர் கொழும்பில் கடந்த கால வன்முறையால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றேன். அந்தப்பாதிப்பில் இருந்து நான் இன்னும் மீளமுடியாதிருக்கின்றேன். எனவே இந்த நாட்டில் அரசியல் செய்கின்றவர்கள் இது வரை எம்மை ஏமாற்றியே வந்திருக்கின்றார்கள். இன்று இந்த நாட்டில் முஸ்லிம்கள் அச்சமின்றி நடமாட முடியாத நிலை. ஈஸ்டர் தாக்குதலைக் காரணம் சொல்ல முடியாது. அதற்கு முன்பிருந்தே இந்த நிலை நாட்டில் இருந்து வருகின்றது.


குறிப்பாக முஸ்லிம்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்வு வேண்டும்.! அவர்கள் நாட்டில் சுதந்திரமாக முன்புபோல் நடமாட வேண்டும். நாட்டில் அமைதி வேண்டும்.! எங்கள் பிள்ளை குட்டிகளுக்கு நல்லதொரு எதிர்காலம் வேண்டும். நாங்கள் வோட்டுப் போட்ட கட்சிகள் எல்லாம் இப்போது இனவாதமாக பேசுகின்றன. இது எங்களுக்கும் தாய் நாடு. என்று அடித்துக் கூறினார் அவர்.  

மேடை அமைந்திருந்த இடத்திலிருந்து ஏறக்குறைய அறைக் கிலோ மீற்றர் தூரம் தள்ளித்தான் நாம் கூட்டம் பார்த்த இடம். அங்கிருந்தவர்கள் ஒரு பெரிய திரையில்தான் நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். 

குறிப்பிட்ட அந்த சகோதாரி உன்னிப்பாகவும், உச்சாகமாகவும் உணர்ச்சிவசப்பட்டவராகவும் அங்கே செயல்பட்டதை அவதானிக்க முடிந்தது. வேட்பாளாரக அணுரகுமார திசாநாயகவின் பெயர் அறிவிக்கப்பட்டபோது அவர் நெடுநேரமாக கைதட்டிக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. இதனை (வீடியோ) நாம் இணையத் தளங்களுக்கும் அனுப்பி வைத்திருக்கின்றோம்.

அந்தச் சகோதரி ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து அங்கே வந்திருப்பது எனக்குப் புரிந்தது. ஆம் முஸ்லிம்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்வு! நாட்டுக்கு நல்லதொரு எதிர்காலம் என்ற எதிர்பார்ப்பு.! அவளிடத்தில் குடிகொண்டிருக்கின்றது.

8 கருத்துரைகள்:

All Muslims must vote for JVP in order to have peaceful future for the young generation.

அந்த தாயிடம் சொல்லி விடுங்க அனுர இல்லை உமர் ரழியே மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் முஸ்லிம் சமூகத்தை காப்பாற்ற முடியாது, நாம தூய்மை முஸ்லிமாய் மாறாமல்.குரான் ஹதீஸ் படி வாழ முயற்ச்சி செய்வோம் மற்றும் அல்லாஹ்விடம் அதிகம் தூஆ கேட்போம்.

பழையதை பேசி பேசி JVP யை ஓரம் கட்டும் அறிவாளிகள் தொடர்ந்து UNP மற்றும் SLFP செய்த,செய்து கொண்டிருக்கும் கொலை,கொள்ளை,இனவாதம் போன்ற அராஜகங்களை மறைத்து பேசுவதன் மர்மம் என்ன ? JVP ஏனைய எல்லா கட்சிகளையும் விட குறைந்தது ஐந்து (5) வருடங்களுக்கு நல்ல முறையில் ஆட்சி செய்ய சான்ஸ் இருக்கு, ஏனைய எல்லா கட்சிகளும்(அகில இலங்கை காங்கிரஸ்,முஸ்லிம் காங்கிரஸ் உட்பட) ஏமாற்றினார்கள்,ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்,இனியும் ஏமாற்றுவதைக்கான பொய்களை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் மக்களே சிந்தியுங்கள், இவர்களுக்கு சந்தர்ப்பத்தை கொடுத்தால் இன்ஷா அல்லாஹ் நாடும் முன்னேறும் நாமும் முன்னேறுவோம்

“சும்மா” சின்னக் கதை ஒன்னு சொல்றேன். எப்பிடித்தான் தலை குத்தனா நாங்க நின்னாலும் இடிச்சு முறிச்சுப் போட்டாலும் தமிழர்களாலோ இல்லாட்டி முஸ்லிம்களாலோ இந்நாட்டின் ஜனாதிபதியாக வரவே முடியாது. அரசியலமைப்பை விடுங்கள். சிங்கள மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவே மாட்டார்கள். இவ்வளவு காலமும் யானை இல்லாட்டி கை (ஏதோ) கை இல்லாட்டி யானை இப்பிடித்தான் நாங்க வாக்களிச்சு வாக்களிச்சு கொஞ்ஞப் பேரை சல்லிக்காரனாக்கியதுதான் மிச்சம். ஆனது கண்டதும் நடந்ததும் ஒன்னுமே இல்லை. இந்த ரெண்டு கட்சியும் சேர்ந்து செஞ்ச சேவை இனக்குரோதங்கள் மதக்குரோதங்கள் நாட்டின் பொருளியல் அழிவு பலரை பணமுதலைகளாகவும் அதேபோல் இன்னும் பல முதலாளிகளை பிச்சைக்காரர்களாகவும் மாற்றியதுதான் மிச்சம். அது மட்டுமல்லாமல் ரௌடிக் கலாசாரத்தை நாட்டில் அறிமுகப்படுத்தியதனையும் குறிப்பிடலாம். நாங்க ஒரு பிள்ளையைப் பெற்றால் அது தன்ட பாட்டுக்கு வளரும். அது மாதிரியே நாடும் தன்ட பாட்டுக்கு வளர்ந்து போகின்றது. ஆனால் மேலே சொன்ன காடைத்தனம் ரௌடித்தனம் சண்டித்தனம் இவைகள் எல்லாம் இயல்பாக வளரக்கூடியவை அல்ல. ஒருவரால் அல்லது பலரால் கடுமையாக திட்டமிட்டு வளர வைக்கப்படுகின்றவை. சுதந்திரமடைந்து 70 வருடங்களா இந்த நாட்டில் என்ன வளர்ந்திருக்கின்றது. யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருகோணமலை போன்ற இடங்களில் நடக்கும் பாராளுமன்றத் தேர்தல்களில் எங்களது ஒரு வாக்கும் மிகவும் பெறுமதிமிக்கவை. ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் எங்கள் வாக்குக்கு எந்த மதிப்பும் இல்லை. நாங்கள் மைத்திரி அவர்களை ஜனாதிபதியாக்கினோம். அதில் சந்தேகமே இல்லை. என்ன நடந்திச்சு. சொன்ன மாதிரி சிறுபான்மையினரின் அவலங்கள் நீக்கப்பட்டனவா? இன்று யார் ஜனாதிபதி? யார் பிரதமர்? பொலிஸ் மாஅதிபர் யார்? இராணுவத் தளபதி யார்? நீதிபதிகள் யார்? என்றுகூட நாடு போகும் அவசரநிலையில் ஒன்னும் புரியவில்லை. எங்கட ஊர்ல சில ஆட்கள் அத்துரலியதான் ஜனாதிபதி! ஞானசாரதான் பிரதமர்! சங்கரத்னதான் பிரதிப் பிரதமர்! னு சொல்றாங்க. யார் யார் எல்லாமோ ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக சவால் விடுகிறார்கள். சிங்களவர்கள் தமிழர்களுடன் சண்டை பிடிக்கனும்னா முஸ்லிம்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்ளுகிறார்கள். அவர்கள் முஸ்லிம்களுடன் சண்டைபிடிக்கனும்னா தமிழர்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்கின்றனர். யார் ஆண்டாலும் இதில் ஒன்னும் எங்களுக்குப் பங்கே இல்லை என்பதுபோல்த்தான் தெரிகின்றது. . சில சந்தர்ப்பங்களில் அரசியல் ஸ்டண்ட்ஸ் ஆங்காங்கே அரங்கேறினாலும் எங்களுக்கு ஒரு பிரயோசனமும் இல்ல. என்ன சொல்ல வருகின்றேன் என்றால் இந்த ரெண்டு குழுவும்தான் தொடர்ந்து ஆட்சிக்கு வந்து பேயாட்டம் குரங்காட்டம் எலியாட்டம் பூனையாட்டம்னு ஆடிக்கிட்டுப் போராங்க. ஏன் நாங்க இந்த முறை மாத்திரம் வேற மாதிரி யோசிக்கக்கூடாது. பரீட்சார்த்தமா JVP க்கு ஆதரவு கொடுக்க முயற்சிப்பது. பேச்சு வார்த்தை நடாத்திப் பார்க்கிறது. எங்ககிட்ட எவ்வளவோ முன்னுரிமைப்படுத்த வேண்டிய பிரேரணைகள் இருக்கின்றன. காரணகாரியத்தோட அதையெல்லாம் அவங்ககிட்ட சொல்லி முடியுமான்னு கேட்கிறது. இவற்றையெல்லாம் படிப்படியாகத் தீர்க்க காலவரை மூலம் செய்ய முடியுமான்னு கேட்கிறது. இதை நாங்களும் பரீட்சார்த்தமா முயற்சி செய்தா எப்படி இருக்கும். ஓன்னும் கிடைக்காட்டாலும் பரவாயில்லை. ஏன்னா நாங்களும் காலம்காலமா ஒப்பந்தத்துக்கு மேல ஒப்பந்தம் போட்டுக்கிட்டுத்தான் வாரோம். எதுவும் நடந்த மாதிரி இல்லை. ஏங்கட அரசியல்வாதிகள்தான் மேலமேல போறாங்க. நாங்க அதே இடத்திலதான் இன்னமும் இருக்கோம். ஏன்னா எங்கட அரசியல்வாதிகள் எங்களை எழும்ப விட்டாதானே. மட்டுமில்ல எங்கட அரசியல்வாதிகள் இன்னமும் மேலமேலதான் போகப்பாப்பாங்க. ஏன்னா இவங்கட கூத்துக்கும் கும்மாளத்திற்கும் JVP சரிப்பட்டு வராது. ஏன்னா அவங்க கொள்கைவாதிகள்!

அமையான ஆக்கம்

முதலாளித்துவ தொட்டிலும் வேனும் சோஸலிச தாலாட்டும் கேட்கனும். முரண் திசைகளில் ஒரே நேரத்தில் பயணமா? சாத்தியப்படுமா?
முதலாளித்துவத்தை முத்தலாக் செய்திடலாம். ஆனா, அதற்கு நிறைய விட்டுக்கொடுக்க வேண்டிவருமே! தனியார் சட்டத்தையும் சேர்த்துத்தான் சொல்லுறன். அதன் கொள்கை அப்படி.

முதலாளித்துவ தொட்டிலும் வேனும் சோஸலிச தாலாட்டும் கேட்கனும். முரண் திசைகளில் ஒரே நேரத்தில் பயணமா? சாத்தியப்படுமா?
முதலாளித்துவத்தை முத்தலாக் செய்திடலாம். ஆனா, அதற்கு நிறைய விட்டுக்கொடுக்க வேண்டிவருமே! தனியார் சட்டத்தையும் சேர்த்துத்தான் சொல்லுறன். ஏன்னா அதன் கொள்கை அப்படி.

All Hindhu Muslims (Tamil/Muslims) This time give hands to SDP or JVP.
NO vote for anybody else..

Post a comment