Header Ads



முஸ்லிம் பிரமுகரை நியமித்தமையால் உருவான கலவரமும், பிக்குவாக ஏமாற்றிய துரைசாமியும்...!

கண்டி இரசாதானியின் ஊவா பிராந்தியத்தின் முகாந்திரமாக ‘ஹஜ்ஜி’ என்னும் முஸ்லிம் பிரமுகரை ஆங்கிலேய அரசு நியமனம் செய்ததைத் எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட கலவரம் மாபெரும் ஊவா – வெல்லஸ்ஸ புரட்சியாக மாற்றம் கண்டது. இக் கிளர்ச்சியின்போது கிளர்ச்சியாளர்களுடன் செயல்பட்ட துரைசாமி நாயக்கன் கண்டி மன்னன் இராஜாதி இராஜ சிங்கனின் மைத்துனன் எனத் தெரிவிக்கப்பட்டது. கதிர்காமத்திலிருந்து தனது புரட்சியை துரைசாமி ஆரம்பித்தான். கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கியும் ஆங்கிலேயரின் நிலை தளர்வாகவும் காணப்பட்ட சந்தர்ப்பமொன்றில் இத் துரைசாமியை கெப்பெட்டிபொல அரசனாக அறிவித்து முதலமைச்சர் பதவியை தாம் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தான். 

மற்றொரு பிரபல பிரபுவும் பிரதானியருமாகிய மடுகல்லே நிலமே, தும்பறை பிரதேசத்தில் மாளிகையொன்றையும் துரைசாமிக்கு அமைத்துக் கொடுத்தான். அத்தோடு மாத்தளை பிரதேசத்தின் திசாவை பதவியையும் ஏற்றுக் கொண்டான். இரண்டாவது முதலமைச்சர் பதவியும் மடுகல்லேக்கு வழங்கப்பட்டது. 

இவை நிகழ்ந்து சில காலத்தில் உண்மையான துரைசாமி நாயக்கர் தென்னிந்தியா மதுரையில் குழந்தை குட்டிகளோடு வாழ்ந்து கொண்டிருப்பதாக ஆளுநர் பிரவுன்றிக்கு ஒரு தகவல் கிடைத்தது. மாபெரும் ஊவா – வெல்லஸ்ஸ கிளர்ச்சியில் இவ்விவகாரம் ஒரு திருப்புமுனையாக அமைந்ததெனலாம். 

அத்தோடு துரைசாமி நாயக்கனாக வலம்வந்து முஸ்லிம் விரோத மற்றும் ஆங்கிலேய அரசுக்கெதிரான போக்குடன் செயல்பட்டவன் யாரென்ற உண்மையும் வெட்டவெளிச்சமாகியது. இவ்வேட தாரியின் விடயம் அம்பலமாவதற்கு முன்னர். கிளர்ச்சி இடம்பெற்ற பிரதேசங்கள் ஒவ்வொன்றும் சுமுகநிலையை எய்திக் கொண்டிருந்தன. பலவீனப்படுத்தும் முயற்சிகளையும், அச்சுறுத்தும் வண்ணமும் ஆளுநர் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக தோல்வி மேல் தோல்விகளைச் சந்தித்த கிளர்ச்சியாளர்கள் துவண்டு போயினர். செல்வதறியாது. தவித்த அவர்கள் அரசாங்க அதிகாரிகளிடம் சரணடைய வரிசை கட்டி நின்றனர். மேலும் சரணடைவதற்கு வந்த கிளர்ச்சியாளர்கள் தமது பிணை உறுதிக்காக தங்களின் மனைவி, மக்கள், உற்றார் உறவினர்களையும் தம்வசமுள்ள சொத்துக்களையும் கையோடு அழைத்தும் சுமந்தும் வந்து சாரிசாரியாக இராணுவ அதிகாரிகளின் முன்னால் அணிவகுக்கவும் செய்தனர். தம்மை மன்னித்து விடுவிக்குமாறும், அறுவடைகளை சேகரித்தல், போராயுதங்களை தயாரித்து கொடுத்தல், யுத்த நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருத்தல் மற்றும் அரசுக்கு ஆதரவான போக்குடன் செயல்படுதல் என அனைத்து நடவடிக்கைகளிலும் தாம் ஈடுபட போவதாகவும் சரணடைந்தவர்கள் உறுதியளித்தனர். 

அதேவேளை மத்திய மலைநாட்டின் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் விளங்கிய ஜோன் டொயிலி மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் சரணாகதியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கு ஏதுவாகியது. டொயிலியும் கிராமம் கிராமமாக புகுந்து மக்களை சந்திக்கும் நடவடிக்கைகளையும், அவர்களுக்கு அபயமளிக்கும் உறுதியுரைகளையும் தாராளமாக எடுத்து வீசினான். சரணடைய முன்வருபவர்கள் டொயிலியின் முன்னால் ஆஜராகுவதை பெரிதும் விரும்பும் நிலை உருவாகியது. 

செப்டம்பர் மாதம் 21ம் திகதிக்கு முன்னர் சரணடையும் கிளர்ச்சியாளர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்குவதாக ஓகஸ்ட் முதலாம் திகதி பிரகடனம் வெளியாகியது. இதன் பின்னர் அரசுக்குச் சார்பாக திரள்வோரின் எண்ணிக்கைமேலும் பன்மடங்காக அதிகரித்தது. அவ்வாறு சரணடைய முன்வராதோருக்கு அளிக்கப்படும் தண்டனைகள் பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்படும் அறிவித்தல்களும் வெளியாகின. 

இவ்வறிவித்தல்களைத் தொடர்ந்து ஜூன் மற்றும் ஜுலை மாதங்களில் பிரதானிகளில், பிராந்திய தலைவர்கள், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியாளர்களும், அதிகாரிகளில் ‘ரட்டேரால’ எனப்படும் பிராந்திய அதிபர்கள், ‘பிஹனரால’ எனப்படும் தலைமைச் சிப்பந்திகள, ‘முதியான்சே’ எனப்படும் கிராம தலைவர்கள் பெருமளவில் தங்களது உறவினருடன் வந்து சரணடைந்தனர். 

மூன்று கோறாளையின் திசாவையாகிய மத்தமகொட, உடபலாத்த திசாவையாகிய கொப்பேகடுவ, தம்வின்ன திசாவை, திம்புலான திசாவை ஆகியோர் ஓகஸ்ட் மாதத்தில் கைது செய்யப்பட்டனர். 

மிக முக்கிய கிளர்ச்சித்தலைவர்களில் இருவராகிய கொடே கெதற மொஹட்டால மற்றும் கதிர்காமம் திருக்கோவில் பஸ்நாயக்க நிலமே ஆகியோரும் ஆங்கிலேய இராணுவத்தின் கைதிகளாகினர். பூத்தாவை நிலமே மற்றும் அவனது குடும்பம் செப்டம்பர் மாதத்திலும், கஜநாயக்க நிலமேயாகிய உடுநுவர திசாவை, மடுகல்லே, மற்றும் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராகிய எல்லேபொல அமைச்சர் தமது குடும்பத்தார் சகிதம் அக்டோபர் மாதத்திலும் கைது செய்யப்பட்டனர். இக்காலக் கட்டத்தில் கெப்பெட்டிப்பொலையின் குடும்பத்தவர்கள் நாரங்கொமுவைக்கு அண்மித்த இடமொன்றில் வைத்து கைதாகினர். அப்போது ஊவா – வெல்லஸ்ஸ உட்பட அனைத்து பிரதேசங்களும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தன. எனினும், மாத்தளை, தும்பறை, மற்றும் நுவரகலாவிய ஆகிய இடங்களில் மாத்திரம் கிளர்ச்சி நீடித்துக் கொண்டிருந்தது. 

கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த தலைவர்களில் பலர் இச்சந்தர்ப்பத்திலும் தமது முயற்சியில் சளைக்காதவர்களாக பலவீனமான போராட்டங்களில் ஈடுபட்டவாறிருந்தனர். இவர்களில் பிரதானமானவர்கள் கெப்பெட்டிபொல, பிலிமத்தலாவை (ஜூனியர்) மற்றும் மடுகல்லே ஆகியோர் எனலாம். 

அடுத்து வரப்போகும் ஆபத்துகள் பற்றிய தகவல்களை இவர்களுக்கு சாதாரண பொதுமக்களே வழங்கிக் கொண்டிருந்தனர். தகவல் பரிமாற்றம் கிரமமாக மேற்கொள்ளப்படாமை காரணமாக நிராதரவான நிலையிலும், எண்ணம் ஈடேறாத ஏமாற்றத்துடனும் சோர்வுற்றிருந்தனர் அவர்கள். 

மத்திய மலைநாட்டின் நிலப்பரப்பின் அமைவும், ஆங்கிலேயர்களால் அம்மண்ணில் சிரமமின்றி நடமாடித்திரியமுடியாத நிலை காணப்பட்டமையும் கிளர்ச்சியாளர்கள் சிலகாலமேனும் தாக்குப் பிடித்து நிற்கக் காரணமானது. இதுவரை காலமும் இராணுவம் இக்கஷ்டப் பிரதேசங்களில் பிரவேசிக்கவில்லை. எனினும் இந்திய இராணுவத்தின் வருகையின் காரணமாக மலைநாட்டின் சகல மூலைமுடுக்குகளிலும், கரடு முரடான மேடு பள்ளங்களிலும் இராணுவம் நிலை கொள்ளத் தொடங்கியது.  

வெகு சீக்கிரமாக ஊவா – வெல்லஸ்ஸ கிளர்ச்சித் தீ அணையும் நிலை ஏற்படுவதற்கு பிரித்தானியர்களின் தந்திரோபாயமும் நடவடிக்கைகளும் மாத்திரம் காரணமாக இருக்கவில்லை. கிளர்ச்சியாளர்களின் செயற்பாடுகளும் இப் பின்னடைவுக்கு ஒரு காரணமாகும். ஒன்றாக இணைந்து திட்டம் தீட்டிய கிளர்ச்சிக்காரர்கள் பின்னர் ஒருவருக் கொருவர் பகைமையுடன் காலைவாரி விடுவதில் குறியாக இருந்தனர். 

எல்லாவற்றுக்கும் மேலாக மத்திய மலைநாட்டு அரியணைக்கு உரிமைகோரி கதிர்காமத்திலிருந்து புறப்பட்டு நாட்டுக்குள் சஞ்சரித்தவன் கெப்பெட்டிபொலையின் பொம்மையென தகவல்கள் வெளியாகின. 

அனைவரும் நினைத்ததைப்போல அவன் அரச குடும்பத்தைச் சேர்ந்த உண்மையான துரைசாமி நாயக்கர் அல்ல என்ற உண்மையை இந்தியாவுடன் தொடர்புகொண்டு ஆளுநர் பிரவுன்றிக் அறிந்து கொண்டதும் கிளர்ச்சி தொடர்பான நிலைமைகள் மாறத் தொடங்கின. 

துரைசாமி நாயக்கராக வேடமிட்ட நபர் பற்றிய உண்மை கெப்பெட்டிபொல அறிந்திருந்த போதும் அதனை வெளிப்படுத்தாது 1818ம் ஆண்டு மே மாதம் ஏழாம் திகதி வெள்ளவாயவில் தியபத்ம என்னுமிடத்தில் மத்திய மலைநாட்டின் நாலா திசைகளிலிருந்து வந்து குவிந்த சுமார் மூவாயிரம் பேர் முன்னிலையில் அதியுச்ச மரியாதைகளுடனும் சம்பிரதாய பூர்வமாகவும் முடி சூட்டுவிழாவை நடாத்தினான்.  

பெளத்த பிக்குமார் சிலருடைய உதவியுடன் கண்டி தலதா மாளிகையிலிருந்து லஸ்கிரிஞ்ச வீரர்கள் இருவர்மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த புனித தந்தத்தை தாங்கியிருந்த பேழையை 1818ம் ஆண்டு ஜுலை மாதம் 5ம் திகதி அங்குராங்கெத்தையில் மக்கள் தரிசிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. மன்னன் ‘துரைசாமி’ கெப்பெட்டி பொலையுடன் இணைந்து இப்புனித கைங்கரியத்தை மேற்கொண்டிருந்தான். 

ஆட்சியுரிமை கோரி அதனையடைந்த துரைசாமி நாயக்கர் முடிசூட்டப்பட்ட பின்னர் ‘கீர்த்தி ஸ்ரீ’ என்னும் நாமத்துடன் விளங்கினான். அவனது பரிவாரங்களாக ஏராளமான பௌத்தமத குருமார்களும் கரையோர பிரதேசங்களைச் சேர்ந்த பிரதானிகள் பலரும் இருந்தனர். 

துரைசாமி நாயக்கர் போலி வேடதாரியென உண்மை வெளிப்பட்ட பின்னர் இவ்வாறு அரசுரிமை கோரி கிளர்ச்சியில் ஈடுபட்டவன் ஏழு கோறளை (குருணாகலை)யில் வில்பாவ என்னும் ஊரைச் சேர்ந்த காவியுடை துறந்து பொது வாழ்வில் ஈடுபட்ட முன்னாள் பௌத்த பிக்குவெனவும் ‘வில்பாவே தேரர்’ என அழைக்கப்பட்டவரெனவும் தெரிய வந்தது. 

‘துரைசாமி நாயக்கர்’ எனத் தன்னை அடையாளப்படுத்தி அரசுரிமை கோரிய மேற்படி முன்னாள் பெளத்த பிக்கு, கொழும்பு, காலி, இரத்தினபுரி, ஊவா மற்றும் வெல்லஸ்ஸ ஆகிய பிரதேசங்களுக்கு காவியுடை தரித்து பிக்குவாக பிரசன்னமாகியிருந்தான். அங்கிருந்து அரச குடும்பத்தவனாக வேடமிட்டு வெளியேறியிருந்தான். இவனைப் பற்றி தகவல் அறிந்திருந்தும் கெப்பெட்டிபொல வெளியில் கசியாதவாறு இரகசியம் காத்தான். 

போலி துரைசாமியின் பின்னால் அணிவகுத்த பெருந்திரளானவர்களில் பௌத்த பிக்குமார் அதிக அளவில் காணப்பட்டனர். கரையோர பிரதேசங்களின் கிராமத் தலைவர்களும் துரைசாமியின் அணியில் இடம்பெற்றிருந்தனர்.

சி.கே. முருகேசு
தகவல் – கலாநிதி கொல்வின் ஆர். டி  சில்வா 
(பிரித்தானியரின் கீழ் இலங்கை)

No comments

Powered by Blogger.