June 22, 2019

அபாயா அணியமுடியாதா? தடை வந்திருக்கிறதா?? 28 ம் திகதி வழக்குத்தாக்கல் செய்ய இறுதித்தேதி

கடந்த இரவிலாவது அரச அலுவலர்களுக்கான ஆடை தொடர்பான புதிய வர்த்தமானி வெளியாகும் என்று எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் அவசரகாலச்சட்டத்தை நீடித்த வர்த்தமானியே வந்திருக்கிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சாட்டாக வைத்து பல தசாப்தங்களாக முஸ்லிம் சமூகத்தின் மீது பேரினவாதிகளும் இன்னும் பல உதிரிகளும் கொண்டிருக்கும் வன்மமும், பொறாமையும் பல வடிவங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இறைவன் போதுமானவன்.

பயங்கரவாத தாக்குதலை நடாத்தியவர்கள் T- Shirt , Denim அணிந்து தலைக்கு style ஆன தொப்பியும், கால்களில் shoe வோடும் BMW 5 series கார்களில் வந்து அந்த படுபாதக செயலை செய்து விட்டுப்போனார்கள்.

இதன் விளைவாக அபாயா போன்ற ஆடைகளும், மக்தப் மத்ரசா போன்ற ஆரம்ப மார்க்க பள்ளிகளும், அரபு மொழியும் என முஸ்லிம்களின் அடையாளங்களும் உரிமைகளும் பலிக்கடாக்களாக சட்டத்தின் தூண்களில் கட்டிவைக்கப்பட்டுள்ளன.

முதலாவது முகத்தை மூடுவது தொடர்பான தடை அவசரகாலச்சட்டத்தின் கீழ் உருவானது ( இது கட்டாயமா இல்லையா என்ற விவாதம் ஒருபுறம் இருக்கட்டும்).

பிறகு அரச அலுவலர்களுக்கான ஆடை தொடர்பான வர்த்தமானி வெளியானது.

அதில் பெண்கள் சாரி அல்லது ஒசரி மாத்திரமே அலுவலக நேரத்தில் அணியலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி முற்று முழுதாக யாரை குறிவைத்து வெளியிடப்பட்டது என்பது வெள்ளிடைமலை. இருந்த போதும் அதனை திருத்தப்போவதாக அரசு பல முறை வாக்குறுதிகளை வழங்கிய போதும் மூன்று வாரங்கள் கடந்தும் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை.

இந்த பின்புலத்தில் நேற்று முன்தினமிரவு முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்க ( MLA) பிரதிநிதி சகோதரர் ஷிஹார் ஹஸன் வட்ஸ் அப் மூலம் வெளியிட்ட ஒலி இழையும் அதன் பிறகு முகநூலிலும், இணையத்தளங்களிலும் வெளியான விழிப்பூட்டல் பதிவுகளின் காரணமாகவும் பல நூற்றுக்கணக்கான அரச அலுவலர்களான முஸ்லிம் பெண்கள் உச்ச நீதிமன்ற முறைப்படுகளுக்கு தயாராகி உள்ளனர்.

இன்னும் பலர் நேற்று முதல் மனித உரிமை ஆணையகத்தின் கிளைகளில் முறைப்பாடுகளை பதியத்தொடங்கியுள்ளனர்.

இந்த விழிப்புணர்விற்கு முன்னர் ஒரேயொரு முஸ்லிம் பெண்மணி மாத்திரமே உச்ச நீதிமன்ற முறைப்பாட்டிற்கு தயாராக இருந்தார்.

அத்தோடு கொழும்பில் உள்ள மனித உரிமைகளுக்கான ஆணையத்தில் இரண்டு முஸ்லிம் பெண்களின் முறைப்பாடுகள் மாத்திரம் கிடைத்திருந்தன.

இதற்கிடையில் நேற்று இந்த செய்தி பரவியதும் சட்டத்தரணி ஷிஹார் ஹஸனுக்கு ஏற்படுத்தப்பட்ட 450 இற்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகளில் சுமார் 200 க்கும் அதிகமான அழைப்புகளில் பேசிய அரச அலுவலர்களான முஸ்லிம் பெண்கள் “ அலுவலகத்திற்கு அபாயா அணியமுடியாதா? தடை வந்திருக்கிறதா?” என்று வினவியதாக அறிய முடிகிறது.

“ஏன் இவர்களுக்கு இது தெரியாமல் போனது?” என்று இதன் பின்னால் உள்ள விடயங்களை இங்கே ஆராய வெளிக்கிடவில்லை. அது கலாநிதி ஆய்வுக்கான ஒரு தலைப்பாக செய்யப்பட வேண்டியது.

இப்போது முன்வந்துள்ள முஸ்லிம் பெண்களை வைத்து உச்ச நீதிமன்றில் வரும் வாரம் அடிப்படை உரிமை மீறல் ( FR Petition) தாக்கல் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.

இந்த நிலையில் ஏனைய அரச அலுவலகங்களில் கடமையாற்றும் முஸ்லிம் பெண்களை முடிந்த அளவு மனித உரிமைகள் ஆணையகத்தின் கிளைகளிலாவது முறைப்பாடுகளை செய்யுமாறு சட்டத்தரணிகள் அறிவுறுத்துகின்றனர்.

அந்த முறைப்பாடுகள் அடிப்படை உரிமை தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்குகளுக்கு உறுதுணையாக இருக்கும்.

வருகிற 28 ம் திகதி வழக்குத்தாக்கல் செய்வதற்கான இறுதித்தேதி என்பதால் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் விரைவாக செயற்படுமாறு வேண்டப்படுகின்றனர்.

(பதிவை பகிருங்கள், நன்றி)

Mujeeb Ibrahim

1 கருத்துரைகள்:

ஆடை தொடர்பான சுற்றறிக்கையை அறியாமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு 1 . தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என அறியாமல் வாழும் பொடுபோக்குத்தனம் 2. தான் கடமைபுரியும் நிறுவனத்தில் இது தொடர்பாக கண்டுகொள்ளாமல் இருக்கின்ற நிலமை.
இரண்டாவது விடயம் பற்றியே பேச வருகின்றேன். நான் கடமைபுரியும் காரியாலயம் தனி பெரும்பான்மை மக்கள் வாழும் பிரதேச செயலகமாகும். அதில் சுமார் 15 பேர் அளவில் முஸ்லிம் பெண்கள் வெளிக்கள கடமை புரிகிறார்கள். சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் நியமனம் பெற்று வந்த போது அவர்கள் எல்லோரும் கறுப்பு ஹபாயாவுடன் ஒரு வாகனத்தில் மொத்தமாக வந்து இறங்கும் போது அரபு நாட்டில் நிற்பது போன்ற உணர்வு யாருக்கும் தோன்றும். 1992 களில் பேராதெனியப்பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் கல்விகற்கும் முஸ்லிம் பெண் மாணவர்கள் அனைவரும் கறுப்பு ஹபாயாவுடன் பாடம் முடிந்து ஒன்றாக விடுதிக்கு செல்லும் போது இதே உணர்வு ஏற்பட்டது. மற்ற இன மாணவர்கள் பிரிந்து சென்று விடுவார்கள். இந்த அனுபவத்தின் அடிப்படையிலும் கிராமத்திற்குச் சென்று வெளிக்கள கடைமை செய்ய வேண்டியுள்ளதாலும், கால உஷ்ண நிலையைக்கருத்தில் கொண்டும் நிறத்திலான ஹபாயா அணிவதற்கு ஆலோசனை வழங்கினேன் சிலர் கடைப்பிடித்தனர். மீதிப்பேர் தற்போது கடைப்பிடிக்கின்றனர்.

விடயத்திற்கு வருகின்றேன் இக்காரியாலயத்தில் இதுவரை பகிடிக்காவது யாரும் இந்த சுற்றறிக்கை பற்றிப்பேசவில்லை. காரணம்
1. பக்குவமான மேலதிகாரி கடமையில் இருக்கின்றமை.
2. மிகவும் நட்புடனும், சகோதரத்துவத்துடனும் நாங்கள் அவர்களுடன் வைத்திருக்கும் உறவு, எங்களின் கடமை உணர்வு அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. இதுதான் சிங்கள மக்கள்.

நான் தான் முஸ்லிம் பெண்களுக்கு புதிய சுற்றறிக்கை பற்றி ஞாபக மூட்டினேன் சிலர் அறிந்திருக்கவில்லை.

எனவே உண்மையாகப் பிரச்சினை உள்ளவர்கள் மட்டும் முறைப்பாடு செய்ய தூண்டப்பட வேண்டும். சில உலகம் தெரியாத முஸ்லிம் தீவிரவாத எண்ணங்கொண்டவர்களின் social media பதிவுகள் மாற்று இனமக்களின் பெரும்பான்மையாக உள்ள நல்வர்களையும் மனங்கோண செய்துவிடும் என்ற அச்சம் உள்ளது. மாற்று இன தீவிரபோக்குடையவர்களுக்கு தீனி போடுவதாக எமது பதிவுகள் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு. அதனால் தான் ஹிஸ்புல்லா,அசாத்சாலி, றிஷாத் போன்றவர்களை அவர்கள் சீண்டுவது. அவர்களுக்குத் தெரியும் இவர்கள் வாய் திறந்தால் மாட்டிக் கொள்ளும் வார்த்தைகளைப் பேசுவார்கள் என்று.

இந்த சுற்றறிக்கையில் இன்னொரு பக்கம் உள்ளது மாற்று இனத்தவர்கள் திங்கள், புதன் தவிர்ந்த ஏனைய நாட்களில் டெனீம் ரீசேட் குட்டப்பாவாடை சட்டை அணிகின்ற பழக்கம் உண்டு இது காரியாலயங்களில் சில அசெளகரியங்களை ஏற்படுத்துவதுண்டு. அந்த பக்கம் பார்க்கும் போது நாம் அழகாக உடலை மறைத்து சாரியணிந்து கொண்டு அவர்களை சாரி அணிய கட்டாயப்படுத்துவத்துவதன் மூலம் சாரிக்கெதிராக போராட வைக்கலாம் தானே. இந்த விடயத்தை முதல் பதிவிட்ட கருத்துரையின் போது சுருக்கமாக பதிவிட்டிருந்தேன். ஒரு சகோதரர் எனக்கு பெயர் மாற்றம் செய்து கருத்துரை கூறியிருந்தார். கருத்துகள் வேறுபடலாம் அதனை இஸ்லாமும் பெருமனதுடன் ஏற்றுக்கொள்கின்றது. தீவிர கருத்துக்களையும் அழகிய மொழியில் கருத்துரைக்கலாம் மொழிப்பஞ்சம் இருந்தால் like, dislike மட்டில் நின்று கொள்ளலாம். இந்த media கூட மற்றவர்களை தனிப்பட்ட ரீதியில் புண்படுத்தும் பதிவுகளைத்தவிர்ப்பது இச்சமூகத்திற்குச் செய்யும் சிறந்த தொண்டாக அமையும்.

Post a comment