Header Ads



சமுதாயப் புரவலர் மலிக் முஹம்மத் ஹாஷிம் இறைவனிடம் மீண்டார்


புகழ்பெற்ற தொழிலதிபரும், சமுதாயப் புரவலருமான மலிக் முஹம்மத் ஹாஷிம்  இறைவனிடம் மீண்டார்கள் என்கிற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகின்றேன். 


தோல் தொழிலின் உச்சத்தைத் தொட்ட வணிகச் செம்மல் அவர். தம்முடைய தொலைநோக்கால், சலிக்காத உழைப்பால், எதனையும் எதிர்கொள்ளும் தீரத்தால், மக்களை நேசிக்கும் மாண்பால், நேர்மை, உண்மை, நீதி போன்ற மாண்புகளை உயிரோட்டமாகக் கொண்ட வணிக நடைமுறைகளால் குறுகிய காலத்தில் ஒரு மிகப் பெரும் சாம்ராஜ்யத்தை அமைப்பதில் வெற்றி கண்ட சாதனையாளர் அவர். இன்னும் சொல்லப் போனால் வணிகர்கள் முதல் அதிகாரிகள் வரை, அரசியல் ஆளுமைகள் முதல் சாமான்யர்கள் வரை அனைவராலும் தோல் தொழிலின் பிதாமகனாக  Doyen of leather industry மதிப்போடு பார்க்கப்பட்ட மகத்தான் தொழிலதிபர் அவர். 


மதரசாக்களையும் ஆலிம் பெருந்தகைகளையும் பெரிதும் மதித்த, போற்றிய சமுதாயப் புரவலர் அவர். பள்ளிக்கூடங்களையும் மருத்துவமனைகளையும் நிறுவி இடைவிடாத நன்மைகளை ஈட்டிக் கொண்ட மகத்தான ஆளுமை அவர். ஒரே சமயத்தில் சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, விஷாரம் என்று பல்வேறு இடங்களில் ஏராளமான தொண்டு நிறுவனங்கள், பள்ளிவாசல்கள், அறக்கட்டளைகள் முதலியவற்றுக்குத் தலைமை வகித்து வழிகாட்டிய சிறப்பும் அவருக்கு உண்டு. 


தொழிலும் வணிகத்திலும் உச்சத்தைத் தொட்டவர்களில் சொந்த ஊருக்கும் மக்களுக்கும் மிகப் பெரும் அளவில் சேவையாற்றுவதில் அவருக்கு நிகர் அவரே. பள்ளிக்கூடங்களை அமைத்தார். பள்ளிவாசல்களைக் கட்டினார். மதரசாக்களை நிறுவினார். உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சேவை தன்னுடைய ஊர் வாசிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அப்போலோ போன்ற மருத்துவமனையையே தம்முடைய ஊருக்கே கொண்டு வந்துவிட்டார் அவர். அதே போன்று விஷாரத்தில் அவர் கட்டிய கிஸ்ர் பள்ளிவாசல் தமிழ்நாட்டின் மிகப் பெரும் பள்ளிவாசல்களில் ஒன்றாக மிளிர்கின்றது. சென்னை ஹஜ் இல்லம் நிறுவுவதிலும் அவர் பெரும் பங்காற்றினார். 


சமுதாயப் பிரச்னைகளைத் தீர்ப்பதிலும் சமுதாய முன்னேற்றத்துக்கான திட்டமிடுதலிலும், அரசியல், அதிகார பீடம் ஆகியவற்றைத் தாண்டி அனைத்து மட்டங்களிலும் வட்டங்களிலும் தமக்கென அபிமானிகளை உருவாக்கிக் கொள்வதிலும் அவற்றைத் தக்க வைப்பதிலும், சமுதாயப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக அந்தத் தொடர்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதிலும் அவர் காட்டிய அக்கறையும் ஈடுபாடும் தனிச்சிறப்பானவை. சென்னை பெருவெள்ளத்தின் போது சத்தம் போடாமல் நூறுக்கும் அதிகமான மருத்துவ முகாம்களை நடத்தி இலவச மருத்துவ சேவையைச் செய்தவர் அவர். அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய உறுப்பினராகவும் முத்திரை பதித்தார். 


எளிமையும் பணிவும் அவருடைய அடையாளங்களாய் அமைந்தன. பெரும் பெரும் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் தொடர்பு இருந்த போதிலும் அவற்றைக் கொண்டு ஆதாயம் தேடுவதில் அவர் ஒருபோதும் ஆசைப்பட்டதில்லை. அரசியல் பதவிகளின் பக்கம் அவர் ஏறெடுத்தும் பார்த்ததில்லை. என்றாலும் தம்மீது திணிக்கப்பட்ட பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்றுவதற்கான நிர்வாகத் திறனும் வேகத்துடனும் விவேகத்துனும் செயலாற்றுகின்ற ஆற்றலும் அவருக்கு இருந்தன. 


எல்லோரையும் அரவணைத்துச் செல்வதிலும் அவருக்கு ஈடாக வேறு எவரும் இல்லை எனலாம். வணிக நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் அவர் காட்டிய உறுதியும் அதற்காக எத்துணை இழப்புகளையும் சந்திப்பதற்கு ஆயத்தமாகின்ற அவருடைய மாண்பும் என்போதும் பேசப்படும். குறிப்பாக இஸ்லாமிய வங்கியியல் நெறிமுறைகள் மீது அவர் பேரார்வம் கொண்டிருந்தார். 


கருணைமிக்க அல்லாஹ் அவருடைய நல்லறங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வானாக. அவருடைய பாவங்களை மன்னித்தருள்வானாக. மறுமையில் உயர்வான சுவனச் சோலைகளில் அவரைச் சேர்த்துக் கொள்வானாக. அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எல்லோருக்கும் இந்த பேரிழப்பை தாங்கும் பொறுமையை தந்தருள்வானாக. ஆமீன்.


மௌலவி முஹம்மத் ஹனீஃபா மன்பயீ

மாநிலத் தலைவர்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு & புதுச்சேரி

No comments

Powered by Blogger.