Header Ads



உலகக் கோப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிப்பு - இந்தியாவை மிரட்டிய, ஆமீருக்கு இடமில்லை

இன்று இலங்கை, தென் ஆப்பிரிக்கா அணிகள் உலகக் கோப்பைக்கான தங்களது அணிகளை அறிவித்துள்ள நிலையில் பாகிஸ்தான் தனது அணியை அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஆமீர் அணியில் இடம்பெறவில்லை. ஆனால் உலக கோப்பைக்கு முந்தைய இங்கிலாந்து தொடரில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

சர்ஃபிராஸ் தலைமையில் களமிறங்கும் பாகிஸ்தான் அணியில் முகமது ஹஃபீஸ், ஜுனைத் கான், சோயிப் மாலிக் உள்ளிட்ட மூத்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஹசன் அலி, ஃபகர் ஜமான், பாபர் அசாம், ஜமாத் வாசிம், ஷதாப் கான் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

முகமது ஆமீர் கடந்த முறை பாகிஸ்தான் இங்கிலாந்தில் விளையாடிய சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியின்போது ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்தியா இப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோலி ஆகிய மூவரையும் முகமது ஆமீர் ஆட்டமிழக்கச் செய்தார். 339 ரன்களை இந்திய அணி துரத்திய போது முதல் ஓவரிலேயே ரோஹித் ஷர்மா விக்கெட்டை ஆமீர் வீழ்த்தினார்.

ஆட்டத்தின் மூன்றாவது ஓவரிலேயே இந்திய அணியின் அணித்தலைவராக விளையாடிய விராட் கோலியை பெவிலியனுக்கு அனுப்பினார். ஷிகர் தவானையும் 21 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார்.

ஆனால் இப்போட்டிக்கு பிறகு ஆமீர் தான் விளையாடிய 14 ஒருநாள் போட்டிகளில் ஒன்பதில் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.

பதின் வயதுகளில் இருக்கும் மொஹம்மத் ஹஸ்னைன், ஷாஹீன் அஃப்ரிடியும் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றனர்.

ஹஸ்னைன் அவரது பந்து வீசும் வேகத்துக்காக தேர்வு செய்யப்பட்டதாக பாகிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் இன்சமாம் உல் ஹக் கூறியுள்ளார்.

ஷோயப் மாலிக்கும், முகமது ஹபீசும் 2007 உலககோப்பையிலிருந்து விளையாடி வருகிறார்கள்.

மொஹம்மத் அப்பாஸ், மொஹம்மத் நவாஸ், மொஹம்மத் ரிஸ்வான், யாசிர் ஷா ஆகியோர் 15 பேர் கொண்ட அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி வீரர்கள் விவரம்

சர்ஃபிராஸ் அகமது(வி.கீ/ கேப்டன்) , அபிட் அலி, பாபர் அசாம், ஃபாஹீம் அஷ்ரஃப், ஃபகர் ஜமான், ஹரிஸ் சொஹைல், ஹசன் அலி, இமாத் வாசிம், இமாம் உல் ஹக், ஜுனைத் கான், மொஹம்மத் ஹஃபீஸ், மொஹம்மத் ஹஸ்னைன், ஷதாப் கான், ஷஹீன் ஷா அஃப்ரிடி, சோயப் மாலிக்

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் இந்த உலக கோப்பையில் பங்கேற்கின்றன.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், வரும் மே மாதம் 30-ஆம் தேதியன்று துவங்கவுள்ளது.

No comments

Powered by Blogger.