Header Ads



அரசியல் பிளவுகளை தூக்கியெறிய வேண்டும், அபிவிருத்தியில் அரசியலை புகுத்தி குழப்பாதீர்கள்

ஆளுநராக பதவியேற்று அம்பாறைக்கு வந்த முதல் நாளிலேயே சகல பிரதேச முக்கியஸ்தர்களையும், திணைக்களங்களின் தலைவர்களையும், பாதுகாப்புத் தரப்பினரையும் அழைத்து சந்தித்து ஒரே நாளிலேயே இந்த மாவட்டத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் அறிந்து கொண்டேன் என கிழக்கு மாகாண அளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அவசரத் தேவைக்கான சமையலறை கட்டிடம், புனரமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடங்கள் மற்றும் புதிய மலசலகூடத் தொகுதி என்பன திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

பாடசாலை முதல்வர் ஏ.எம்.அஸ்மி தலைமையில் இன்று -18-  மாலை நடைபெற்ற இவ்விழாவில் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் மற்றும் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெவ்வை ஆகியோரது வேண்டுகோளை ஏற்று அந்-நூர் மகா வித்தியாலயத்திற்கு இந்த ஆண்டிற்குள் மூன்று மாடிக்கட்டிடம் ஒன்று அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர்,கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆகியோருக்கு அவசர பணிப்புரை வழங்கியுள்ளேன்.

பாராளுமன்றப் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு இந்த அளுநர் பதவியைப் பொறுப்பேற்றது ஒரு வருடத்திற்குள் இந்த மாகாண மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு இன முரண்பாடுகளை முடியுமானவரை களைந்து இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதன் ஊடாக இந்த மாகாண மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காகவேயாகும்.
கிழக்கு மாகாணத்திலே குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலே அதிகமான காணிப் பிரச்சினைகள் இருப்பதை உணர்கின்றோம்.

இந்த மாவட்டத்திலுள்ள மிகப் பெரிய பிரச்சினை காணிப்பிரச்சினையாகும் இதில் அஷ்ரப் நகர் காணிப்பிரச்சினை, நுரைச்சோலை வீட்டுப் பிரச்சினை,வட்டமடுப் பிரச்சினை இப்படி நிறைய இருக்கின்றன. அவற்றைத் தீர்த்து வைப்பதிலே நாங்கள் ஜனாதிபதியுடன் இணைந்து முழுமையாக செயற்படுகின்றோம். அதற்காக ஒரு விசேட அதியுயர்மட்ட குழுவை அமைத்துள்ளோம். இங்கு பரம்பரை பரம்பரையாகப் பயன்படுத்தப்பட்டு வந்த விவசாயக் காணிகள், குடியிருப்புக் காணிகள், மேய்ச்சற்தரைக் காணிகள் என்று வனவளத் திணைக்களம்,கால் நடைத்திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் போன்ற நிறுவனங்களினால் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ள நிலைமையை அறிகிறோம்.

இது தொடர்பாக ஜனாதிபதியுடன் நீண்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருக்கிறோம்.கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பாராளுமன்றத்திலே ஜனாதிபதி தலைமையிலே நடைபெற்ற வடகிழக்கு மீள் குடியேற்ற செயலணியின் கூட்டத்திலே பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஷ்ரப் நகரிலே இராணுவ முகாம் அமைப்பதற்கு கையகப்படுத்தப்பட்டுள்ள 52 ஏக்கர் காணிகளை உடனடியாக விடுவிப்பதற்கு வேண்டுகோள் விடுத்தார்.உடனடியாக அந்தப் பொறுப்பை ஜனாதிபதி என்னிடம் ஒப்படைத்தார் அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். அக்காணிகளை விரைவில் நாம் ஒப்படைப்போம்.

வட்டமடுக் காணிப் பிரச்சினை,விவசாய நிலங்களிலே விவசாயம் செய்வதிலுள்ள பிரச்சினை போன்றவற்றுக்கான தீர்வுகளைப் பெறுவதற்காக அதற்கான அறிக்கைகளை பெற்று வருகிறோம்.இவற்றை தீர்ப்பதிலே எங்களிடையே காணப்படுகின்ற அரசியல் பிரச்சினைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும். சமூகத்திலுள்ள மிகப்பெரிய நோயாகக் காணப்படுகின்ற அரசியல் ரீதியான பிளவுகளை நாம் தூக்கியெறிய வேண்டும்.

தேர்தல் காலம் வந்தால் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கட்சியில் தேர்தல் கேட்டாக வேண்டுமென்ற நாட்டுச் சட்டத்தின்படி தேர்தல்களிலே பிரிந்து நின்றாலும் தேர்தல் முடிந்தவுடன் அவற்றை மறந்து நாம் ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும்.அவ்வாறு செயற்படாதபோது எங்களது பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காண முடியாது. எங்கள் மத்தியிலே வேறுபாடுகள் இருக்கக்கூடாது. அரசியல் கட்சி என்பது எமது பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ள அவசியம் தேவையானது.ஆனால் அதனூடாக பிரிந்து நின்று செயற்பட முனைந்தால் நாம் பிரச்சினைகளையே சந்திக்க நேரிடும்.

எங்களுடைய காணிப்பிரச்சினை, கல்விப் பிரச்சினைகள், சுகாதாரப் பிரச்சினைகள், விவசாயப் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள் இவை எல்லாவற்றையும் நாம் எல்லோரும் இணைந்து அரசியல் முரண்பாடுகள்,இன ரீதியான முரண்பாடுகளைக் களைந்து சிந்திக்கின்றபோதுதான் தீர்க்க முடியும்.

அம்பாறை மாவட்டத் தலைவர்கள் அரசியல் கட்சிகளுக்கப்பால், நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து முடியுமான பணிகளை இந்த மாகாணத்திலே செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம். ஏனெனில் இம்மாகாணம் சகல துறைகளிலும் பின்தங்கிய மாகாணமாகக் காணப்படுகின்றது. எனவே இம்மாகாணம் முன்னேற வேண்டுமாக இருந்தால் இன ரீதியிலான முரண்பாடுகளும் அரசியல் ரீதியான முரண்பாடுகளும் களையப்பட வேண்டும். இவ்வாறான வேறுபாடுகளை மறந்து நாம் எல்லலோரும் கிழக்கு மகாண மக்கள் என்ற உணர்வோடு செயற்படுவோமாக இருந்தால் நாட்டிலுள்ள 9 மாகாணங்களுக்குள் முதன்மையான மாகாணமாக இதனைக் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அதற்கு எல்லோரும் பூரண ஒத்துழைப்பு தரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

2 comments:

  1. எதிர்பார்க்காத நடுநிலையுடன் செயல்பட்டு இன முறுகல்களுக்கு இடம்தராது பணிபுரியும் மாண்புமிகு ஆழுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு நல்வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  2. Governor's speech was matured and we'll thought one.
    Very good sign of a good leader.
    As young MP and Politician in 1994 and has had some disputes with the party (SLMC) it looks he has acquired the good and Noble qualities of the Late Leader.
    Will he be our future leader whom we are awaiting for the last two decades.

    ReplyDelete

Powered by Blogger.