March 13, 2019

யாழ்ப்பாணத்தில் மேயர் பதவியை, அலங்கரித்த குவாஸி MM சுல்தான்

- பரீட் இக்பால் -

  தமிழ்மொழி எங்கள் தாய்மொழி சிங்கள மொழிக்கு உள்ள அந்தஸ்து தமிழ்மொழிக்கும் வழங்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பியவரும் யாழ். முஸ்ஸிம் வட்டாரத்தில் கல்விச் செல்வத்தை உருவாக்குவதற்காக ஒஸ்மானியா கல்லூரி, கதீஜா கல்லூரி ஆகியவற்றை ஸ்தாபிப்பதற்கு அயராது உழைத்தவர்களுள் ஒருவருமான எம்.எம்.சுல்தான்.

யாழ்ப்பாணம் சோனகத் தெருவில் வறிய கௌரவமான குடும்பத்தில் முஹம்மது அலிமரைக்கார் - முஹம்மது கனி தம்பதியினருக்கு 1909 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி சுல்தான் பிறந்தார்.

சுல்தான் தனது ஆரம்பக் கல்வியை யாழ் மஸ்ற உத்தீன் பாடசாலை, யாழ், மத்திய கல்லூரி, யாழ் இந்து கல்லூரி ஆகிய கல்லூரிகளில் கற்றார், யாழ் இந்து கல்லூரியிலிருந்து சட்டக் கல்லூரிக்கு சென்றார். சுல்தான் சித்தியடைந்து வழக்கறிஞரானார்.

வழக்கறிஞரும்; நொத்தாரிசுமான சுல்தான், அக்காலத்தில் யாழ் முஸ்ஸிம் வட்டாரத்தில் மிக்க பிரபல்யமான சட்டத்தரணி எஸ்.எம். அபூபக்கர் (கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களுடைய வாப்பா) அவர்களிடம ஜுயூனீயராக ;இணைந்தார். ஜுயூனீயராக இணைந்து பணி புரிந்த சுல்தான் மீது சட்டத்தரணி எஸ்.எம். அபூபக்கருக்கு நல்லபிப்பிராயம் ஏற்பட்டது. 1939 இல் வழக்கறிஞரும் நொத்தாரிசுமான சுல்தான் சட்டத்தரணி எஸ்.எம். அபூபக்கரின் மகள் ஸரீபாவை திருமணம் செய்தார். சுல்தான் ஸரீபா தம்பதியினர் முத்தான ஆறு ஆண் பிள்ளைகளை யும் மூன்று பெண்பிள்ளைகளையும் பெற்றெடுத்தனர்.

வழக்கறிஞர் சுல்தானின் மாமா சட்டத்தரணி எஸ்.எம்.அபூபக்கர், யாழ் மாநகர சபையின் ஓர் உறுப்பினராவார். மாமனார் எஸ்.எம். அபூபக்கர் காலமானதையடுத்து 1950 இல் நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியின்றி ஏகமனதாக வழக்கறிஞரும் நொத்தாரிசுமான சுல்தான் யாழ். மாநகர சபையின் ஓர் உறுப்பினரானார்.

யாழ் முஸ்ஸிம் வட்டாரத்தின் நன்மை கருதி அரசியல் தொடர்புடைய ஸ்தாபனமான அகில இலங்கை முஸ்ஸிம் லீக் கிளை ஸ்தாபனத்தை யாழ் முஸ்ஸிம் வட்டாரத்தில் சட்டத்தரணி சுல்தான் உருவாக்கினார். அதன் தலைவராகவும் சுல்தான் இயங்கினார்.

அகில இலங்கை முஸ்ஸிம் லீக்கின் உதவியுடன் சுல்தான் வெளிநாட்டு முஸ்ஸிம் பேரறிஞர்களை வரவழைத்து ஆண்டு தோறும் கொண்டாடும் மீலாத் விழாக்களில் சிறப்பு இஸ்லாமிய சொற்பொழிவுகளை மீலாத் மேடைகளில் முழங்க வைத்தார். யாழ் முஸ்ஸிம் மக்கள் மத்தியில் அரசியலிலும் சமூக சேவையிலும் முஸ்ஸிம் லீக் ஸ்தாபனம் பிரபல்யம் அடைந்தது.

1945 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்ஸிம் கல்விச் சகாய நிதியின் பிரதி நிதியாகவும் சுல்தான் நியமிக்கப்பட்டார்.
சுல்தான், யாழ் முஸ்ஸிம் கல்விச் சபையின் தலைவராக  இருந்து, ஒஸ்மானியா கல்லூரியையும் கதீஜா கல்லூரியையும் ஸ்தாபிப்பதற்கு பல வருடங்களாக அயராது  அரும்பாடுபட்டவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

1951 இல் யாழ் முஸ்ஸிம் சனசமூக நிலையத்தை  குவாஸி சுல்தான் உருவாக்கி அதன் போசகராக இறுதி வரை கடமையாற்றியுள்ளார்.

1951, 1954 ஆகிய வருடங்களில் நடைபெற்ற மாநகர சபை தேர்தல்களிலும் போட்டியின்றியே ஏகமனதனாக சுல்தான் தெரிவு  செய்யப்பட்டார்.
சுல்தான் 1950 ஆண்டு முதல் 1973 வரை குவாஸியாக செயற்பட்டார்.
குவாஸி சுல்தான் மண்கும்பான் வெள்ளைக் கடற்கரை பள்ளிவாசல் பரிபாலன சபையின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.

1954 ஆம் ஆண்டிற்கு பின்னர்  நடைபெற்ற தேர்தலில் வேறு எவராவது முன்வந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக குவாஸி சுல்தான் தேர்தலிலிருந்து ஒதுங்க நினைத்தார். நண்பர்களும் மக்களும் விடவில்லை மக்கள் வலிந்து கேட்டார்கள். மாநகர சபைத் தேர்தலில் போட்டி இடுமாறு வேண்டினார்கள். மக்களின் வேண்டுகோளை ஏற்று அடுத்து வந்த மூன்று தேர்தல்களிலும் போட்டியிட்டு அமோக வெற்றியீட்டினார். 

யாழ், நகரசபை , மாநகர சபையாக தரம் உயர்த்தும் நோக்குடன் உள்ளுராட்சி சேவை கமிசனால் அனுப்பப்பட்ட எல்லை நிர்ணய விசாரணைக் குழு முன்னிலையில் கடுமையாக வாதாடி யாழ். முஸ்ஸிம்களுக்காக மாநகர சபையில் இரு வட்டாரங்களை பெற்றுக் கொடுத்தார்.

யாழ் மாநகர சபையின் தமிழ் மக்களின் நன்மதிப்பை பெற்று 1955 ஆம் ஆண்டு யாழ் மாநகரத்தின் முதலாவது முஸ்ஸிம் மேயராக குவாஸி சுல்தான் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். குவாஸி சுல்தான் மேயராக இருந்த காலத்தில் செய்த சேவையும், நேர்மையான நிர்வாகத்தையம் யாழ் மாநகர மக்கள் பாராட்டினார்கள்.

1957 ஆம் ஆண்டு அரசாங்கங்கத்தினால் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட பள்ளிவாசல் சொத்து நிர்ணயசபை (வக்புசபை) யில் ஏழு பேர் கொண்ட உறுப்பினர்களில் சுல்தானும் ஒருவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும

குவாஸி சுல்தான் 1950 ஆம் ஆண்டு முதல் 1966 ஆம் ஆண்டு வரை யாழ் மாநகர சபை உறுப்பினராக இருந்து சேவை புரிந்தார். என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அரச கரும மொழி பற்றியும் இந்த விடயத்தில் முஸ்ஸிம்களின் நிலை என்ன என்பது பற்றியும் ஆராய்வதற்காக 1955 ஆண்டு டிசம்பர் மாதம் அகில இலங்கை முஸ்ஸிம் லீக்கினால் ஒழுங்கு செய்யப்பட்ட மாநாட்டில் குவாஸி சுல்தான் முஸ்ஸிம்களின் தாய்மொழி தமிழ் என்றும் சிங்கள மொழியுடன் சம அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி குரல் எழுப்பினார். இதற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்காத போதும் சிங்கள மொழியே அரச கரும மொழியாக வேண்டும் என பெரும்பான்மை அங்கத்தவர்களினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்  கைச்சாத்திடாமல் மதத்தால் வேறுபட்டாலும் இனத்தால் நாம்  தமிழரே என்று கூறி குவாஸி சுல்தான் அந்த மா நாட்டை விட்டு வெளிநடப்பு செய்தார்.

இந்த செய்தி சகல பிரபல செய்தித்தாள்களிலும் முன் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் பிரசுரமாகியிருந்தது.

குவாஸி சுல்தான் வெளிநடப்பு செய்து கொழும்பிலிருந்து திரும்பியதும் யாழ் புகையிரத நிலையத்தில் தமிழ் மக்களாலும் மாநகர சபை உறுப்பினர்களாலும் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

குவாஸி சுல்தான் யாழ் முஸ்ஸிம்களுக்கு கல்வி, சமய, அரசியல் போன்ற பல துறைகளில்  நற்பணியாற்றியுள்ளார்.  என்றால் மிகையாகாது குவாஸி சுல்தான் 1977 ஆம் ஆண்டு  பெப்ரவரி மாதம் மாதம் 19 ஆம் திகதி தனது 67 ஆவது வயதில் காலமானார். அன்னாரை ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் சொர்க்கத்தில்  நுழைவதற்கு  அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்.

1 கருத்துரைகள்:

During 1966, then Justice Minister A.P. Jayasuria handed powers to Quazis as equivalent to Magistrate court judges. As a result, Quazis were prevented from taking part in politics. Quazi M.M. Sultan has to decide whether to continue as MMC or as Quazi. He decided to keep Quazi post and resigned the Municipal Councillor post.

Post a comment