March 17, 2018

கண்டியில் நெகிழவைத்த நிகழ்வுகளும், கொடிய அனுபவங்களும்..!

-கண்­டி­யி­லி­ருந்து எம்.பி.எம். பைறூஸ் -

கண்டி வன்முறை சம்­ப­வங்­க­ளுக்­காக பிர­தே­சத்­தி­லுள்ள மக்­க­ளோடு தொடர்ந்தும் முரண்­பட்டுக் கொண்­டி­ருக்க முடி­யாது. பிர­தே­சத்தில் சமா­தான சக­வாழ்வை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­க­ளையும் ஆரம்­பித்­தி­ருக்­கிறோம் என்­கிறார் தும்­பர ஜம்­இய்­யதுல் உலமா தலைவர் மௌலவி அப்துஷ் ஷுகூர். '' பிர­தே­சத்­தி­லுள்ள பன்­ச­லை­க­ளுக்குச் சென்று நாம் தொடர்ச்­சி­யாக பேசிக் கொண்­டி­ருக்­கிறோம். கடந்த வாரம் பல­கொல்­லையின் சில பகு­தி­களில் பாது­காப்பை தந்­தது பிக்­கு­மாரும் சிங்­கள மக்­க­ளும்தான். எங்­க­ளுக்குள் நல்­லு­றவு இருக்­கி­றது. விரோ­த­முள்­ள­வர்­களும் இருக்­கி­றார்­கள்தான். ஆனால் எல்­லோரும் விரோ­திகள் அல்ல'' என்­கிறார் அவர்.

இதற்­கப்பால் மௌலவி ஷுகூர் மற்­று­மொரு முக்­கிய விட­யத்­தையும் அழுத்­த­மாகச் சொல்­கிறார். ''எங்கள் தரப்­பிலும் ஒரு பிழை இருக்­கி­றது. முஸ்­லிம்கள் என்றால் யார்? பள்­ளி­வாசல் என்றால் என்ன? என்று இன்­னமும் நாம் அவர்­க­ளுக்கு எடுத்துச் சொல்­ல­வில்லை. பள்ளி என்றால் பங்கர் என்றும் அதற்குள் ஆயு­தங்கள் இருப்­ப­தா­க­வுமே சிங்­கள மக்கள் நினைத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இஸ்­லாத்­தையும் முஸ்­லிம்­க­ளையும் பற்றி சரி­யாக விளங்­கப்­ப­டுத்­துவோம் என்றால் இந்த இன­வாதப் பிரச்­சி­னையை கூடிய விரைவில் இல்­லா­தொ­ழிக்­கலாம். அப்­படிச் செய்தால் எம்மை யாரும் தாக்க வந்தால் அவர்­கள்தான் எம்மைப் பாது­காக்க முன்­னிற்­பார்கள். வேறு யாரும் எமக்குத் தேவைப்­ப­ட­மாட்­டார்கள்'' என்­கிறார் அவர்.

பாது­காக்க முன்­வந்த அபூ தாலிப்கள்
இந்தக் கருத்தில் உண்மை இருக்­கி­றது என்­பதை நிரூ­பிக்கும் வகையில் ஏரா­ள­மான சம்­ப­வங்கள் கண்­டி­யிலும் ஏனைய பகு­தி­க­ளிலும் நடந்­தி­ருக்­கின்­றன. பௌத்த மத தலை­வர்­களே முன்­வந்து பள்­ளி­வா­சல்­க­ளையும் முஸ்­லிம்­க­ளையும் பாது­காத்­தி­ருக்­கி­றார்கள். இவை நாட்டில் நல்­லி­ணக்­கத்­துக்­கான வாயில்கள் இன்­னமும் முழு­ம­யாக அடைக்­கப்­ப­ட­வில்லை என்­ப­தற்கு கட்­டியம் கூறு­கின்­றன.

''எமது பிர­தே­சத்­தி­லுள்ள பள்­ளி­வா­சல்­களைத் தாக்கப் போகி­றார்கள் என்று தகவல் கிடைத்­தது. நாம் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு முன்­பாக வந்து பாது­காப்பு கட­மையில் ஈடு­பட்டோம். இந்தப் பகு­தியில் 14 பள்­ளி­வா­சல்கள் உள்­ளன. அவற்­றுக்கு ஒரு கல் கூட வீசப்­ப­டாது காப்­பாற்ற எம்மால் முடிந்­துள்­ளது. 

பெரும்­பான்­மை­யி­னரின் பொறுப்பு சிறு­பான்­மை­யி­னரை பாது­காப்­ப­தாகும்'' என்­கிறார் கண்டி வது­ர­கும்­புர தம்­மா­னந்த தேரர்.

இவரைப் போன்­றுதான் கோம­கொட விகா­ரா­தி­பதி கஹ­கல தம்­மா­னந்த தேரர் , மீவ­துர வஜி­ர­நா­யக்க நாஹிமி ஆகி­யோரும் பிர­தேச முஸ்லிம் குடும்­பங்­க­ளுக்கு விகா­ரை­களில் அப­ய­ம­ளித்துப் பாது­காத்­த­துடன் தாக்­கு­த­லுக்கு வந்த வன்­மு­றைக்­கும்­ப­லையும் விரட்­டி­ய­டித்­தி­ருக்­கி­றார்கள்.

அதே­போன்­றுதான் இந்த இக்­கட்­டான தரு­ணத்தில் எங்­க­ளுக்கு உத­வி­யதும் அய­ல­வர்­க­ளான சிங்­கள மக்­கள்தான் என்­கிறார் திக­னவைச் சேர்ந்த மற்­றொரு இளைஞர். '' எங்­க­ளுக்கு நடந்­ததைப் பற்றி அவர்கள் மிகவும் கவ­லைப்­ப­டு­கி­றார்கள். 

வெசாக் பண்­டி­கை­யின்­போது தன்சல் நிகழ்­வு­களை நாங்­களும் சேர்ந்­துதான் ஏற்­பாடு செய்வோம். அந்த அப்­பாவி சார­தியை அடித்துக் கொன்ற நான்கு பேருக்கு எதி­ராக ஏதேனும் செய்­தி­ருந்தால் நாங்கள் கவ­லைப்­படப் போவ­தில்லை. சம்­பந்­த­மே­யில்­லாத எங்­களை ஏன் இவர்கள் இலக்கு வைத்­தார்கள்?'' என்ற பெரும் கேள்­விக்­கு­றி­யுடன் தனது கவ­லையைப் பகிந்தார் அவர்.

நெகிழ வைத்த நிகழ்­வுகள்
தெல்­தெ­னி­யவில் நடந்த இன்­னு­மொரு நிகழ்வு நம்மை நெகி­ழ­வைக்­கி­றது. முஸ்லிம் தாய் ஒரு­வரின் குழந்­தைக்கு சிங்­களத் தாய் ஒருவர் பாலூட்­டிய சம்­ப­வம்தான் அது. அதனை ஊட­க­வி­ய­லாளர் ரஞ்சித் குமார சம­ரகோன் 'ரெஸ' பத்­தி­ரி­கையில் இப்­படி எழு­து­கிறார்.

'' தெல்­தெ­னிய நகரம் கொந்­த­ளித்துக் கொண்­டி­ருக்­கும்­போது பீதியில் உறைந்த மக்கள் பாது­காப்புத் தேடி ஓடினர். அப்­போது முக்­கி­ய­மான முஸ்லிம் குடும்பம் ஒன்று அடைக்­கலம் தேடி அய­லி­லுள்ள சிங்­கள வீடொன்­றுக்குள் வந்­தது. ஆறு மாத பச்­சிளம் குழந்­தை­யொன்றும் அக்­கு­டும்­பத்தில் இருந்­தது.

அந்த சிங்கள வீட்டில் இளம் தம்­ப­தி­யொன்றே இருந்­தது. ‘‘மகள் ஏ.ஜீ. அலு­வ­ல­கத்தில் இருக்­கிறார். நக­ரத்தில் குழப்பம் நிகழ்­வதால் அவரால் வந்­து­கொள்ள முடி­ய­வில்லை. மகளைக் கூட்டி வரு­வ­தற்கு மகன் சென்­றுள்ளார். அவ­ரது குழந்தை பசியால் கத­று­கி­றது. மகள் வரும்­வரை நாம் பாதுகாப்புக்காக இங்கே தங்­கி­யி­ருக்­கிறோம்…’’ என்று வந்த அந்­தப்பெண் கேட்­டுக்­கொண்டார். சிங்­கள வீட்டார் உட­ன­டி­யாக வந்­த­வர்­க­ளுக்குப் பாது­காப்பு வழங்­கினர்.

‘‘எனக்கும் குழந்தை கிடைத்து ஒரு­மாதம் தான்…. எனவே, ஒரு பாலகன் பசியால் கத­றி­ய­ழு­வதைப் பார்த்­துக்­கொண்­டி­ருக்க முடி­யுமா? அதனால் நான் அக்­கு­ழந்­தைக்குப் பாலூட்­டினேன். …’’ என்று அடைக்­கலம் கொடுத்த சிங்­க­ளப்பெண் எம்­மிடம் கூறினார்.

மூண்­டுள்ள மோத­லுக்கு இரை தேடிக் கொண்­டி­ருக்­கையில், மனி­தா­பி­மா­னத்­துக்கு உயி­ரூட்­டிய இத்­த­கைய உள்­ளங்­களும் இருக்­கத்தான் செய்­கின்­றன. ஆனால் இவ்­வா­றான கதைகள் வெளிச்­சத்­துக்கு வர­வில்லை'' என்று சமரகோன் எழுதுகிறார்.

பாது­காப்­பின்­மையை உணரும் தருணம்
தமது குடும்­பத்தினர் நாட்டில் பாது­காப்­பா­க இருக்­கி­றார்கள் என்ற ஒரே நம்­பிக்­கை­யில்தான் இன்று பல ஆயிரக் கணக்­கான குடும்பத் தலை­வர்கள் மத்­திய கிழக்கு நாடு­களில் தொழில் செய்து கொண்­டி­ருக்­கி­றார்கள். அவர்­களுள் ஒரு­வர்தான் திக­னவைச் சேர்ந்த ரிஸ்வி. குவைத்தில் தொழில் புரிந்­தவர். ஊரில் பிரச்­சினை என்று கேள்­வி­யுற்ற உட­னேயே மனைவி பிள்­ளை­களின் பாது­காப்­புத்தான் முக்­கியம் என்று கருதி தொழி­லையும் விட்­டு­விட்டு நாட்­டுக்கு வந்­து­விட்டார்.

'' நான் தினமும் எனது குடும்­பத்­துடன் தொலை­பே­சியில் உரை­யா­டுவேன். தாக்­கு­தல்கள் ஆரம்­பித்த மறுநாள் காலையில் 10.30 மணி­ய­ளவில் நான் வீட்டைத் தொடர்பு கொண்டேன். அந்த நேரத்தில் எந்தப் பிரச்­சி­னையும் இல்லை என்று மனைவி சொன்னார். ஆனால் சில மணி நேரம் கழித்து எமது பகு­தியில் தாக்­குதல் நடப்­ப­தாக கேள்­விப்­பட்டேன். மீண்டும் மனை­வியைத் தொடர்பு கொள்ள முயற்­சித்தேன். தொடர்பு கிடைக்­க­வில்லை. குவைத்தில் நான் தொழில் புரியும் கடையில் குந்­தி­யி­ருந்து அழுது புலம்­பு­வதைத் தவிர அப்­போது என்னால் எதையும் செய்ய முடி­ய­வில்லை.

பின்­னர்தான் எனது மனை­வியும் இரண்டு பிள்­ளை­களும் அவ­ரது சாச்­சியும் அவ­ரது 2 மற்றும் 8 வய­து­டைய இரு மகள்­க­ளு­மாக வீட்டின் பின் பக்­க­மா­க­வுள்ள பற்­றைக்­காட்­டுக்குள் மறைந்­தி­ருந்­தாக அறிந்தேன். சுமார் 3 மணித்­தி­யா­லங்­க­ளாக மிக்க பயத்­துடன் அவர்கள் மறைந்­தி­ருந்­தார்கள்.

பின்னர் அவர்­களைக் கண்­ணுற்ற ஒரு சிங்­களப் பெண்­மணி தனது வீட்­டுக்கு அழைத்துச் சென்று அடைக்­கலம் கொடுத்­தி­ருக்­கிறார். அந்தப் பெண்ணின் கண­வரும் வெளியில் சென்­றி­ருந்தார். ஆனாலும் தைரி­ய­மாக இவர்­களை அவர் வீட்டில் வைத்து கத­வு­களை மூடிப் பாது­காத்­துள்­ள­துடன் தேநீர் சாப்­பாடு வழங்கி உப­ச­ரித்­து­மி­ருக்­கிறார்'' என்றார்.

ரிஸ்­வியின் குடும்­பத்தைப் போன்­றுதான் எம்­மிடம் பேசிய பல­ரது அனு­ப­வங்­களும் அமைந்­தி­ருக்­கின்­றன. இரவு முழு­வ­தையும் காடு­க­ளுக்­குள்தான் கழித்த பலரை எல்லா ஊர்­க­ளிலும் நாம் சந்­தித்தோம்.

பாத்­திமா பீவி அவ்­வா­றான ஒரு கொடிய அனு­ப­வத்தை நம்­முடன் பகிர்ந்து கொண்டார் ''எங்கள் பகுதி தாக்­கப்­பட்­ட­போது எனது மகள் மாத்­தி­ரமே குழந்­தை­யுடன் வீட்டில் இருந்தார். உடனே அவர் பிள்­ளை­யையும் தூக்கிக் கொண்டு ஓடி காட்­டுக்குள் ஒளிந்­தி­ருக்­கிறார். அப்­போது பிள்ளை அச்­சத்தில் வீறிட்டு அழு­தி­ருக்­கி­றது. சத்தம் கேட்டால் தாக்க வந்­து­வி­டு­வார்கள் என்­ப­தற்­காக குழந்­தையின் வாயைப் பொத்தி அதில் துணியைப் புகுத்தி சத்தம் வராமல் பாது­காத்­த­தாக எனது மகள் என்­னிடம் கூறினார்'' என்றார் அச்சம் நிறைந்த பார்­வை­யுடன்.

முஸ்­லிம்கள் வன்­மு­றை­யா­ளர்­க­ளல்லர்
முஸ்­லிம்­களை வலிய வம்­புக்கு இழுப்­ப­துதான் இவர்­க­ளது நோக்கம் என்­கிறார் எம். சஹீட். ''தாக்­கு­தல்­தா­ரர்­களின் நோக்கம் முஸ்­லிம்­க­ளையும் வன்­மு­றை­யா­ளர்கள் எனக் காண்­பித்து ஐ.எஸ்.ஐ.எஸ். முத்­திரை குத்­து­வ­தாகும். ஆனால் நாங்கள் சமா­தா­னத்தை விரும்பும் மக்கள். பெரும்­பான்மை சிங்­கள மக்கள் எங்­க­ளோ­டுதான் இருக்­கி­றார்கள். அவர்கள் எங்­க­ளுக்கு உத­வு­கி­றார்கள். எங்­க­ளுக்கு உணவு தந்­தார்கள். தங்கள் வீடு­களின் அறை­களைத் திறந்­து­விட்­டார்கள். தற்­கா­லி­மாக அடைக்­கலம் தந்­தார்கள்'' என்­கிறார் அவர்.

நாங்கள் கோழைகளும் அல்லர்

இந்தத் தாக்­கு­தல்­களின் போது முஸ்­லிம்கள் என்ன செய்து கொண்­டி­ருந்­தார்கள்? என்­ப­துதான் எல்­லோரும் எழுப்­பு­கின்ற கேள்வி. '' எங்­களை வீடு­களை விட்டும் வெளி­யே­று­மாறும் இங்கு இருப்­பது உயி­ருக்கு ஆபத்து என்றும் பாது­காப்பு படை­யி­னர்தான் வந்து கூறி­னார்கள். பள்­ளி­வா­சல்­களில் கூட இருக்க வேண்டாம் என்­றார்கள். சொத்­துக்­களை விடவும் எங்கள் மனைவி பிள்­ளை­களின் உயிர்­களைக் காப்­பாற்ற வேண்டும் என்­பதே எங்கள் ஒரே இலக்­கா­க­வி­ருந்­தது. அதனால்தான் நாங்கள் வீடுகளை விட்டு வெளியேறினோம். ஆனாலும் வீடுகள், கடைகள், பள்ளிகள் தாக்கப்படுவதாக கேள்வியுற்றதும் எங்கள் இடங்களுக்குச் செல்ல எத்தனித்தோம். ஒரு புறம் போக வேண்டாம் என எங்கள் குடும்பத்தினர் தடுத்தார்கள். மறுபுறம் பாதுகாப்பு படையினரும் அதற்கு அனுமதிக்கவில்லை. இதற்குள் அவர்கள் அனைத்தையும் கொள்ளையடித்து தீ வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள்'' என்கிறார்கள் திகன மற்றும் அம்பதென்ன பிரதேச குடும்பத் தலைவர்கள்.

பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட எம்மை அழைத்துச் சென்ற திகனவைச் சேர்ந்த இளைஞரிடம் '' இப்போது இந்த பிரதேச முஸ்லிம்கள் வேறு பகுதிகளில் குடியேறுவது பற்றி யோசிக்கிறார்களா?'' எனக் கேட்டேன். உடனடியாக அதனை மறுதலித்த அவர் '' நாங்கள் ஒரு தடவை கோழைகளாக இருந்தது போதும். இனி வந்தால் திருப்பி அடிப்போம். வாழ்வும் சாவும் இனி இந்த மண்ணில்தான்'' என்றார் உரத்த குரலில்.

- விடிவெள்ளி 16.03.2018

1 கருத்துரைகள்:

Ketpatharkku naraahattan irukkirathu...Ivaigalai seihinra SLTJ kaaranugalattane Moulavu unga oru iyakkaattukum pudikkuthullai..
Islam oru iniya maarkkam naddatthinaal eano easuhinreergal...?
OR avargal aarampitta nihalchi..unga ACJU moolamaattan nadakkanumnu nenakkureengalo...?

Post a comment