Header Ads



"கண்டி வன்முறைக்கு 3 பேர் பொறுப்பாளிகள்"

அம்பாறை மற்றும் கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கு மைத்திரி, ரணில் தலைமையிலான ஆட்சியாளர்களும், மகிந்த தலைமையிலானவர்களும் பொறுப்பாளிகளாவர்கள் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் பொது செயலாளர் சி.க.செந்திவேல் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்,

நாட்டின் பேரினவாத ஆளும் வர்க்க சக்திகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இன, மத வெறுப்புகளும் கொடிய வன்முறைகளும் காலத்திற்குக் காலம் கொழுந்துவிட்டு எரியவைக்கப்பட்டு வந்துள்ளன.

தத்தமது ஆட்சி அதிகாரத்தைக் கைகளில் வைத்திருக்கவும் அதனை நீடித்து உறுதிப்படுத்தவும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள் மீதான கொடிய இன, மத வன்முறைகள் அவ்வப்போது நிகழ்த்தப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியில் ஒன்றே கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதியன்று அம்பாறை நகரில் முஸ்லிம் கடைகள், பள்ளிவாசல் மீது தொடுக்கப்பட்ட இனவெறித் தாக்குதலாகும்.

இதன் தொடர்ச்சியே இம்மாதம் 04ஆம் திகதி கண்டியின் தெல்தெனியவில் ஆரம்பித்து திகன பிரதேசத்தில் நிகழ்ந்த முஸ்லிம் மக்களுக்கு எதிரான தாக்குதல்களும் எரியூட்டல்களுமாகும்.

இதற்கு நல்லாட்சியின் பெயரிலான மைத்திரி, ரணில் தலைமையிலான பேரினவாத ஆட்சியாளர்களும், எதிர்த்தரப்பிலிருந்து பேரினவாதத்திற்கு எண்ணெய் ஊற்றிவரும் மகிந்த தலைமையிலானவர்களும் பொறுப்பாளிகளாவர்.

இத்தகைய நாசகார பேரினவாத சக்திகளை அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களும் அரசியல் ரீதியில் நிராகரிக்காதவரை, இன்று திகனயில் நடைபெறுவது நாளை மீளவும் வேறொரு பிரதேசத்தில் நிகழவே செய்யும்.

எனவே, முஸ்லிம் மக்களுக்கு இன்று நிகழ்த்தப்பட்டு வரும் திட்டமிட்ட தாக்குதல்களையும், எரியூட்டல்களையும் எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

அதேவேளை இவற்றுக்கு எதிராக அனைத்து உழைக்கும் மக்களும் நேர்மையான இடதுசாரி ஜனநாயக முற்போக்குச் சக்திகளும் தமது ஒன்றுபட்ட கரங்களையும், குரல்களையும் உயர்த்தி முன்செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றது.

கடந்த காலத்தில் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களுக்கெதிரான ஒவ்வொரு பேரினவாதத் தாக்குதல்களுக்குப் பின்னாலும் 2 பிரதான ஆளும் வர்க்கக் கட்சிகளும், அவர்களோடு இணைந்தவர்களுமே இருந்து வந்துள்ளனர்.

அதே போன்றே நல்லாட்சி நல்லெண்ண முகமூடிகளை அணிந்து நிற்கும் கூட்டாட்சியானது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது கையறு நிலையில் மக்களின் கவனத்தை திசைதிருப்ப வழமை போன்று பேரினவாதத்திற்குள் புகுந்து நிற்கின்றனர்.

அத்துடன் மைத்திரி - ரணில் - மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கிடையிலான அதிகாரத்திற்கான போட்டியில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாதத் தீ பயன்படுத்தப்படுகிறது.

ஒருபுறத்தில் நாடும் மக்களும் நவகொலனிய, நவதாராளவாத உலகமயத்தால் விழுங்கப்படுகின்றனர். மறுபுறத்தில் அந்நிய சக்திகளுக்கு நாட்டைத் திறந்து வளங்களைத் தாரை வார்த்து தத்தமது ஆட்சியதிகாரத்தை நிலைநிறுத்த ஆளும்வர்க்க சக்திகள் போட்டியிட்டு நிற்கிறார்கள்.

இந்த உண்மையை மறைக்கவும் அந்தந்த இன மக்களை அவர்கள் சார்ந்த அடையாளங்களுக்குள் வைத்திருக்கவும், ஆளும் வர்க்கத்தினரும் அவர்களது எசமானர்களான அந்நிய சக்திகளும் முன்னின்று செயற்பட்டு வருகிறார்கள். அதன்மூலம் இவர்கள் தத்தமது உயர்வர்க்க மேட்டுக்குடி நலன்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

இவற்றை உணர்ந்து அனைத்து இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் உழைக்கும் மக்கள் அனைவரும் வர்க்க ரீதியில் ஒன்றிணைந்து முன்செல்வது பற்றி அரசியல் அடிப்படையில் சிந்திப்பது அவசியமாகும்.

அதேவேளை, நாட்டின் நேர்மையான இடதுசாரி ஜனநாயக முற்போக்கு சக்திகள் அணிதிரண்டு, ஏவப்படும் பேரினவாதத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டி முன்செல்ல வேண்டும் என்பதை எமது கட்சி வலியுறுத்துகிறதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.