Header Ads



முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயத்தில், நான் பொறுப்பு வாய்ந்தவன் - ஹரீஸ்

(எம்.எம்.ஜபீர்)

புதிதாக கொண்டு வரப்பட்ட மாகாண சபை தேர்தல் சட்டம் மாற்றப்பட்டு பழைய விகிதாசார தேர்தல் முறை மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

மத்தியமுகாம் சாளம்பைக்கேணி அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தை கிறிக்கட் பாடசாலையாக தெரிவு செய்து  விளையாட்டுத்துறை அமைச்சினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும், விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு பின்னர் நாட்டின் அரசியலில் பெரும் பரபரப்பு காணப்பட்டதுடன் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாற்றப்பட்டு புதிய அரசாங்கம் வருமென்று  எதிர்பார்த்தார்கள். ஆனால் பிரதமர் ரணில் விக்கிரசிங்கவின் மேல் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை வைத்துள்ளமையால் பிரதமருடைய பதவியும், அரசாங்கமும்  இன்று பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக எதிர்காலத்தில் அரசு ஸ்திரமாகின்ற போது நாட்டின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி பணிகளில் முக்கிய கவனமெடுத்து செயற்படுகின்ற போது அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் எந்த தடங்கல்களும் இல்லாமல் மேற்கொள்ளப்படும் அப்போது எமது மக்கள் அதன் பயனை அடைந்து கொள்ளமுடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த தேர்தலில் அரசுக்கு பலம் சேர்க்கும் பொருட்டு பல இடங்களில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டதினால் அரசாங்கம் அதன் பயனை பெற்றிருக்கின்றது. குறிப்பாக எமது கட்சி மொத்தமாக 13 உள்ளுராட்சி மன்றங்களை பெரும்பான்மையான இடங்களில் வென்றுள்ளன. அரசாங்கத்திற்கு எஞ்சிய காலத்தில் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் பல பிரச்சினைகள் இருக்கின்றது. நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலிற்கு முன்பாக புதிதாக கொண்டு வரப்பட்ட மாகாண சபை தேர்தல் சட்டம் மாற்றப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். ஏனென்றால் புதிதாக மாகாண சபை திருத்த சட்டத்தை கொண்டு வந்தார்கள் எங்களுடைய விருப்புக்கு மாற்றமாக கொண்டு வந்த விடயமாகையால் அந்த சட்டத்தினை மாற்றி மீண்டும் பழைய விகிதாசார தேர்தல் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்ற வேண்டுகோளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ளது. அதற்கு பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் கிளைக் கட்சிகளான ஹெல உறுமைய கட்சி உட்பட பல கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

அதே போன்று எதிர்காலத்தில் புதிய அரசியல் மாற்றங்கள் என்ற விடயம் வருகின்ற போது முஸ்லிம் சமூகத்தை தட்டிக்களிக்காது அம்பாரை மாவட்டத்தில் குறைந்தது கல்முனை கரையோர மாவட்டத்தினை உருவாக்கின்ற பொறுப்பினை அரசு பொறுப்பெடுக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விடுத்திருக்கின்றோம்.

இவ்வாறான அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியாக எதிர்வரும் காலப்பகுதி அமையப் பெறவுள்ளதுடன் முஸ்லிம் சமூகம் சார்ந்த  விடயத்தில் பொறுப்பு வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அரசாங்கம் இவைகளை செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளை விடுத்திருக்கின்றோம். இப்போதைய கால கட்டத்தில் அரசு முஸ்லிம் சமூகத்தின் விடயத்தில் தவறுகின்ற போது நாங்கள் சமூகத்தின் பால் செயற்படும் சூழல் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

அரசாங்கம் இந்த நாட்டில் கல்வி நடவடிக்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தி வருகின்றது. பல்வேறு நவீன கற்பித்தல் செயற்பாடுகளுக்காக புதிதாக 500 கோடி ரூபாய் செலவில் மடிக்கணனிகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளன. அரசாங்கம் மாணவர்களில் கல்வி நடவடிக்கையில் கொண்டுள்ள அக்கறையில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. நாடு இன்று அபிவிருத்தி அடைந்துவரும் நிலையில் மாணவர்களும்; அதற்கு ஏற்றாற்போல் தயாராக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.