January 18, 2018

"வன்னியில் ஊற்றெடுத்த கட்சியையும், அதன் தலைமையும் மண்ணாக்க சிலர் அலைகின்றனர்"


-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆளுகையில் இருந்த முசலி பிரதேச சபையை, அக்கட்சியிடமிருந்து பறித்தெடுக்க, முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் தேசிய பட்டியலில் தமக்கு எம்.பி பதவி கிடைக்குமென்ற கனவிலும், மாகாண சபையில் வெற்றிடமாகவுள்ள உறுப்பினர் பதவியை தட்டிக்கொள்ளலாம் என்ற நப்பாசையிலும் முசலிப் பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் கொந்தராத்துக்காக செயற்படுகின்றனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

முசலி பிரதேச சபைத் தேர்தலில், சிலாவத்துறை வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர் முஹுசீன் றைசுதீனின் தேர்தல் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று (17) சிலாவத்துறையில் இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.  அவர் மேலும் கூறியதாவது, 

தேர்தல் காலங்களில் மாத்திரம் இங்கு வந்து வாக்குகளைச் சிதறடித்து பிரதிநிதித்துவங்களின் எண்ணிக்கையை குறைப்பவர்கள் பற்றி விழிப்பாக இருங்கள். எந்தக் காலத்திலும் இந்தப் பிரதேசத்துக்கு வராமல் இருந்துவிட்டு, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாத்திரம்தான் தேர்தலுக்காக இந்தப் பிரதேசத்துக்கு வருகின்ற பல கட்சிகள், இன்று பல கோணங்களிலும், புதிய புதிய சின்னங்களிலும், பலவகையான வர்ணங்களிலும் உள்ளூராட்சித் தேர்தலில் களமிறங்கியுள்ளன. 

இந்தப் பிரதேசத்தில் மக்கள் துன்பப்படுகின்ற போது, எதையுமே செய்யாதவர்கள் நாங்கள் செய்பவற்றை குறைகூறித் திரிபவர்கள், எமது பணிகளை விமர்சிப்பவர்கள் இப்போது புதிய புதிய கதைகளைக் கூறிக்கொண்டு இங்கு வந்து போட்டியிடுகின்றார்கள். இதன்மூலம் உங்கள் வாக்குகள் பிரிந்தால் நட்டம் அடைவது நீங்களே. அகில இலங்கை மக்கள் காங்கிரஸை வீழ்த்தினால் தனது சுயலாபங்களை இலகுவில் அடைந்துவிடலாம் என்று சிலர் முயற்சிக்கின்றனர்.

எம்மைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் நங்கள் எதிர்நோக்கிய சவால்கள் கொஞ்சநஞ்சமல்ல. மீள்குடியேற்றத்தை இலகுபடுத்தவும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் எண்ணத்திலும் இலவங்குளம் - மன்னார் பாதையை சீன அரசாங்கத்தின் கடன் உதவியுடன் நாங்கள் புனரமைக்க நடவடிக்கை எடுத்த போதே, இனவாதிகள் அதனைத் தடுப்பதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து அதில் வெற்றியும் கண்டனர். 

அதற்கு முன்னதாக கடந்த அரசாங்கத்தில் வன விலங்குகளுக்குப் பொறுப்பான அமைச்சர், இலவங்குளம் பாதையை புனரமைத்தால் விலங்குகள் பாதிப்புறும் என்றும், அவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் என்னிடம் பலதடவை முரன்பட்டிருந்ததை நான் இங்கு சுட்டிக்காட்டியே ஆகவேண்டும். முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை நாங்கள் முன்னெடுத்த போது எம்மீதுகொண்ட காழ்ப்புணர்வினால், அதனை திரிபுபடுத்தி நாங்கள் வில்பத்துக்காட்டை அழித்து முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதாக, இனவாதிகளிடம் வேண்டுமென்றே பொய்களைக் கூறி காட்டிக்கொடுத்தவர்களும் நமது சமூகத்தைச் சார்ந்தவர்களே. 

அதேபோன்று, ஊடகங்களை இந்தப் பிரதேசத்துக்கு வரவழைக்க வழிவகுத்தவர்களும் இந்த சதிகாரர்களே. இவர்கள்தான் இப்போது முசலி பிரதேச சபையின் அதிகாரத்தை எங்களிடமிருந்து தட்டிப்பறிக்க முயற்சிக்கின்றார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் ஒரு பங்காளிக் கட்சியே. அரசாங்கம்  உருவாகியபோது, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமையும் முக்கிய பங்கெடுத்திருகின்றது. 

வன்னியில் ஊற்றெடுத்த ஒரு கட்சியும், அதன் தலைமையும் தேசிய அரசில் முக்கிய பாத்திரம் வகிப்பதை எப்படியாவது மண்ணாக்கி விட வேண்டுமென இவர்கள் அலைந்து திரிகின்றனர். 

மன்னாரைப் பொறுத்தவரையில், சிலாவத்துறை முக்கிய கேந்திரமான ஒரு பிரதேசம் ஆகும். இம்முறை வரவு செலவுத் திட்ட நிதியொதுக்கீட்டில் இந்தக் கிராமத்தை நகரமாக அபிவிருத்தி செய்யவும், நவீன சந்தையுடன் கூடிய மன்னார் பஸ்தரிப்பு நிலையத்தை அமைக்க பல பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிலாவத்துறையின் ஒரு பகுதியில் நிலைகொண்டுள்ள கடற்படை முகாமை அகற்றும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது கூட்டத்திலும், பல அமைச்சரவையிலும் நான் இந்த கடற்படை முகாமை அகற்றுமாறு வலியுறுத்தியுள்ளேன். அதனைத் தொடர்ந்தும் பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றோம். 

இதனை அகற்றுவதன் மூலமே இந்த நகர அபிவிருத்தியை அழகாகவும், செவ்வையாகவும் மேற்கொள்ள முடியும். நாங்கள் இந்தப் பிரதேசத்தில் கடந்த காலங்களில் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளோம். ஆயிரக்கணக்கான வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்துள்ளோம். சாதாரணமாக வீடுகளை அமைப்பதென்பது இலகுவான காரியம் அல்ல. வெளிநாடுகளுக்குச் சென்று, எத்தனையோ பேரைச் சந்தித்து நாம் மேற்கொண்ட முயற்சியினால்தான் இந்த வீடுகள் கட்டப்பட்டன. 

இந்த வீடுகளை நிர்மாணித்தமைக்கு எதிராகவும் இனவாதிகள் எமக்கெதிராக வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். நாங்கள் பாதைகளை அமைத்தோம். மின்சாரத்தை வழங்கினோம். அளக்கட்டு மற்றும் சிலாவத்துறை – மறிச்சுக்கட்டிக்கு இடையில் புதிய கிராமங்களை அமைத்தோம். பாடசாலைகளை அமைத்தோம். இவ்வாறு எண்ணற்ற பணிகளை உங்களுக்கு செய்துகொண்டு, உங்கள் சுக துக்கங்களிலும் நாங்களே பங்குபற்றி வருகின்றோம். ஆனால், உங்களை ஏறெடுத்தும் பார்க்காதவர்கள் இப்போது வாக்குகளுக்காக மட்டுமே இங்கு வந்து, அதைத் தருவோம் இதைத் தருவோம் என்று உங்களை ஏமாற்றி வருகின்றனர். தேர்தல் முடிந்த பின்னர் இவர்கள் இந்தப் பக்கமே தலை காட்ட மாட்டார்கள். மீண்டுமொரு தேர்தல் வந்தால்தான் இவர்கள் இங்கு வருவார்கள் என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள் என்று அமைச்சர் கூறினார். 

0 கருத்துரைகள்:

Post a Comment