Header Ads



வசீம் கொலை - உளவாளிகள் மூலம் கிடைத்த, இரகசிய தகவல் குறித்து விசாரணை (இன்றைய அப்டேட்)

ரக்பி வீரர் வசீம் தாஜுடீன் கொலை தொடர்பாக தனியார் உளவாளிகள் மூலம் குற்றப்புலனாய்வுப் பிரிவிற்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படுவதாக, கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் சொக்சிக்கு சட்ட மா அதிபர் இன்று -18- அறிவித்துள்ளார்.

வசீம் தாஜுடீனின் கொலை சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று காணாமற்போனதாகக் கூறப்படும் கொலையாளிக்கு சொந்தமான கிரடிட் அட்டைகளின் மூலம் பணம் பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்ட மா அதிபர் சார்பாக நீதிமன்றத்தில் பிரசன்னமாகிய பிரதி சொலிஸ்டர் நாயகம் டிலான் ரத்நாயக்க நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்தினார்.

கொலை சம்பவம் இடம்பெற்ற தினத்திலும் அதற்கு முதல் நாளும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினால் பேணப்பட்டு வந்த வாகன உள்வருகை மற்றும் வெளியேற்றப் பதிவுப் புத்தகங்களின் பக்கங்கள் சூட்சுமமான முறையில் அகற்றப்பட்டுள்ளமை தொடர்பிலும் விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதி சொலிஸ்டர் நாயகம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட வசீம் தாஜுடீனின் அவையவங்கள் காணாமலாக்கப்பட்டமை மற்றும் தொழில்சார் குறைபாடுகள் தொடர்பில், இலங்கை வைத்திய சபையினால் கொழும்பு முன்னாள் பிரதம சட்ட வைத்திய அதிகாரி, பேராசிரியர் ஆனந்த சமரசேகரவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஒழுக்காற்று விசாரணை எதிர்வரும் 21 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாகவும் பிரதி சொலிஸ்டர் நாயகம் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

No comments

Powered by Blogger.