Header Ads



என்னை நாடு கடத்தலாம் - மகிந்த

நாட்டில் நடந்த 30 ஆண்டு கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் அமைதியை ஏற்படுத்திக்கொடுத்த தான் உட்பட படையினருக்கு வழங்கும் பரிசாக அரசாங்கம் தண்டனை வழங்க போகிறதா என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான செயலகத்தை ஸ்தாபிக்கும் சட்டத்தின் மூலம் படையினரை சிறைக்கு கொண்டு செல்ல போகின்றனர் எனவும், சட்டத்தின் பயங்கரத்தை நாட்டை நேசிக்கும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் ரெஜி ரணதுங்கவின் 80வது ஜனன தினத்தை முன்னிட்டு மினுவங்கொடை, உடுகம்பளையில் உள்ள ரெஜி ரணதுங்க ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான செயலகம் ஒன்றை ஸ்தாபிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இதில் உள்ள ஆபத்தான நிலைமையை, தேங்காய், அரிசி விலைகளை போன்று உடனடியாக உணர முடியாது. எனினும் நாட்டை நேசிப்போர் இதில் உள்ள அபாயம் உணர்ந்துள்ளனர்.

உத்தரவிட்டதற்காக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரலாம் என்று அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு செயலை தவிர்த்து கொண்டதற்காகவும் வழக்கு தொடரலாம். நான் ஒன்றும் செய்யவில்லை சும்மா இருந்தேன் என்பதற்காகவும் வழக்கு தொடரலாம். காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வெளிநாடுகள், தனி நபர்கள், அரசசார்பற்ற அமைப்புகள் மூலமும் குற்றச்சாட்டை முன்வைக்கலாம்.

ஐரோப்பாவில் எந்த நாட்டிலும் வழக்கு தொடரலாம். அங்கு வழக்கு தொடர்ந்தும் குற்றம் சுமத்தப்பட்டவரை இலங்கையில் இருந்து நாடு கடத்தலாம். மகிந்த ராஜபக்சவை கோரினாலும் நாடு கடத்தலாம். நான் மாத்திரமல்ல போர் செய்த அனைவருக்கும் இது பொருந்தும். பொன்சேகாவும் நாடு கடத்தப்படலாம். ஆனால், அவரை நாடு கடத்த மாட்டார்கள்.

வடக்கு மக்கள் கோரும் நாட்டில் ஒரு பகுதியை வழங்காவிட்டாலும் அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்த தேவையான வசதிகளை நாங்கள் செய்து கொடுத்தோம். நாங்கள் எந்த பணிகளையும் அரசியல் நோக்கம் கொண்டு செய்யவில்லை. தற்போது அரசியல் கட்சி குறித்து சிந்தித்தே வீடுகளையும், சீமெந்து, கிராமிய வங்கிகளில் கடன்களையும் வழங்குகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வரும் காலங்களில் இதனையே செய்தது. தற்போதைய அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமே அன்றி எமது கட்சியின் அரசாங்கம் அல்ல. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தை வலுப்படுத்தி வருகின்றனர்.

நாட்டில் 400 ஆக இருக்கும் பொலிஸ் நிலையங்களை 600 ஆக அதிகரிக்க போவதாக நான் பத்திரிகை ஒன்றில் செய்தியை பார்த்தேன். அப்படியானால் பொலிஸ் ராஜ்ஜியம் ஒன்றை உருவாக்க தயாராகின்றனரா? சகல இடங்களிலும் பொலிஸ் நிலையங்களை ஸ்தாபிப்பதால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.