Header Ads



ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்

சிறிலங்காவுக்கு மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவொன்றே இந்த தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனித உரிமைகள் உள்ளிட்ட முக்கியமான விடயங்களில் சிறிலங்கா கவலையளிக்கும் அளவுக்கு மெதுவாகவே செயற்படுவதாக சுட்டிக்காட்டியே இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஐக்கிய இடது, நோர்டிக் பசுமை இடது கூட்டமைப்புக் குழு என்ற ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவே இந்த தீர்மானத்தை முன்வைத்துள்ளது. இந்தக் குழுவின் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை முன்வைத்துள்ளனர்.

751 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு 376 வாக்குகள் தேவைப்படும். எதிர்வரும் 26ஆம், 27ஆம் நாள்களில் நடக்கும் அமர்வில் இந்த தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து கரிசனை எழுப்பியுள்ள இந்த தீர்மானத்தில், ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான தகுதியைப் பெறுவதற்குப் போதுமான உண்மையான முன்னேற்றங்கள் இடம்பெறவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி அதற்கு மாற்றான சட்டத்தைக் கொண்டு வர இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் அரசாங்கப் பதவிகள் அளிக்கப்படுவதனால், தண்டனையில் இருந்து விலக்குப் பெறும் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் போதிய நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லையோ என்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, புதிய சட்டத்தை அனைத்துலக தர நியமங்களுக்கு ஏற்ப கொண்டு வருவது தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகள் குறித்து, கூட்டம் ஒன்றை நடத்தி வருவதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளன.

ஆனால், ஐரோப்பிய ஒன்றிய தீர்மானம், கவலையளிக்கக் கூடிய மெதுவான முன்னேற்றங்களே இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.