October 20, 2016

"அரசின் நழுவல் நிலைகண்டு, முஸ்லிம்கள் வேதனைப்படுகின்றோம்"

உலக முஸ்லிம்களின் மூன்றாவது புனித ஸ்தலமாகிய அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் ஆக்கிரமிப்புக் காரர்களாகிய யூதர்களாலும் அவர்களது இஸ்ரேல் நாட்டு ஆயுதப்படையினராலும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அராஜகங்களை நிறுத்துமாறு கோரி ஐக்கிய நாடுகள் கலாச்சார முகவர் அமைப்பினால் (United Nations cultural Agency ) கண்டனத் தீர்மானம் ஒன்று சபையில் முன்மொழியப்பட்டு; நிறைவேற்றப்பட்டதனை இலங்கை முஸ்லிம்களாகிய நாம் நன்றியுடன் வரவேற்கின்றோம். 

'பள்ளிவாசல் வளாகத்துக்கள் பிரார்த்தனைக்காக வருகைதரும்; முஸ்லிம்கள்மீது துன்புறுத்தும் வகையில் தடங்கல்களை மேற்கொள்வதிலிருந்தும்;, அங்குள்ள புராதன கட்டுமானங்களின் அடியில் அகழ்வுகள் மேற்கொண்டு அரிதான வரலாற்றுத் தடயங்களை சின்னாபின்னமாக்கல் மற்றும் அப்புறப் படுத்துதல் போன்ற நாசகார சம்பவங்களை ஏற்படுத்துவதிலிருந்தும் விலகிக் கொள்ளுமாறு' அந்தத் தீர்மானத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வாக்களிப்பில் கலந்து கொண்டு மேற்படி தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கியிருக்க   வேண்டிய நமது நாட்டு அரசாங்கப் பிரதிநிதியானவர் குறித்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது நழுவல் போக்கைக் கடைப்பிடித்த சம்பவமானது உலக முஸ்லிம்களையும் குறிப்பாக இந்நாட்டில் இறைமையுடன் வாழும் எமது முஸ்லிம் சமூகத்தையும் அவமதித்ததற்குச் சமமானதாகும்.

பல்வேறு இஸ்லாமிய நாடுகள் சம்பந்தப்பட்ட எத்தனையோ விதமான அரசியல் ரீதியான தீர்மானங்களின்போது முன்பெல்லாம் அவ்வப்போது இலங்கை எடுத்திருந்த நிலைப்பாடுகளைப்பற்றி நாம் அலட்டிக் கொள்ளவில்லை. ஏனெனில் அந்நாடுகளில் ஆட்சி செய்யும் அரசாங்கங்களின் கொள்கை சார்ந்த விடயங்கள் தொடர்பான தீர்மானங்களாக அவற்றை நாம் கருத இடமுண்டு. 

ஆனால், 'அல் - அக்ஸா' சம்பந்தமான விடயம் முஸ்லிம்களின் அடிப்படை மத நம்பிக்கையுடன் சம்பந்தப்பட்டதாகும். புனித குர்ஆனில் இறைவசனங்கள் ஊடாக எமக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டளைகளுடன் நேரடித் தொடர்பு கொண்டவையாகும். இந்த விடயத்தை வெறும் சர்வதேச அரசியல் நோக்கத்துடன் சம்பந்தப்படுத்தி இலங்கை அரசாங்கம் வாக்கெடுப்பில் இருந்து நழுவியதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. 

இஸ்ரவேல் படையினர் உலக முஸ்லிம்களின் புனித ஸ்தலமொன்றுக்குள் அடாவடித்தனமாhக புகுந்து ஆக்கிரமித்ததனையும், மதக்கடமைகளில் ஈடுபடும் உரிமையை முஸ்லிம்களுக்கு மறுப்பதனையும், எமது மத கலாச்சார வரலாற்றுத்தடயங்களை அழித்தொழிப்பதனையும் கடைக்கண் பார்வைக்குரிய ஒரு சாதாரண செயலென நமது நாடு தட்டிக் கழிக்கின்றதா?

அல் அக்ஸா விவகாரம் என்பது வெறும் சர்வதேச அரசியல் விவகாரமல்ல. உலக முஸ்லிம்களின் மத நம்பிக்கையின் அடித்தளத்தை அசைக்கின்ற ஒரு நயவஞ்சகத் தனமான செயலாகும். முஸ்லிம்களின் மதவிவகாரத்தை சிறுமைப்படுத்தும் இவ்வாறான மெத்தனப் போக்கையிட்டு நாம் மிக்க மனவேதனையடைகின்றோம். 

முஸ்லிம் அரசியல்வாதிகளும், முஸ்லிம் மக்களுடன் நேசம் கொண்ட ஏனைய மதத் தலைவர்களும், மத சுதந்திரத்தை மதிக்கின்ற நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் அனைத்தும் தமது அதிருப்தியை வெளிப்படுத்துவதன் மூலம் இது போன்ற தவறுகள் இனிமேலும் இடம்பெறாது பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். 

மு.த. ஹஸன் அலி
முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர்

20-10-2016

0 கருத்துரைகள்:

Post a Comment