Header Ads



இலங்கைக்கு றீட்டா, முன்வைத்துள்ள யோசனைகள்..!

சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் முழுமையான அதிகாரம் கொண்ட ஆணைக்குழு ஒன்றை அமைக்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரைத்துள்ளது.

சிறுபான்மை தொடர்பான ஐக்கிய நாடுகளின் அறிக்கையாளர் ரீட்டா ஐசெக் டியாயே, இலங்கைக்கான தமது 10 நாள் பயணத்தை முடித்துக்கொண்ட நிலையில், செய்தியாளர் சந்திப்பில் இந்த பரிந்துரைகளை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, போருக்கு பின்னர் சமூகங்களுக்கு இடையிலான உறவைக்கட்டியெழுப்பும் வகையில் அரசியல் அமைப்பில் யோசனைகள் கொண்டு வரப்பட்டு, அவை நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

போருக்கு பின்னர் இனங்களுக்கு இடையில் நம்பிக்கை என்ற விடயத்தில் பாரிய இடைவெளி உள்ளது. அரசாங்கத்தை பொறுத்தவரையில் தேர்தல் வேகத்தை ரத்துசெய்து, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களை நன்கு ஒருங்கிணைக்கவேண்டும்.

இந்நிலையில் தமது பயணத்தின் ஆழமான அறிக்கையை தாம் 2017இல் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும், இலங்கை அரசாங்கத்துக்கு குறுகியகால அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

காணி மற்றும் அரசியல் கைதிகளின் விடயம், இராணுவ அதிகாரம் போன்ற விடயங்களில் இந்த குறுகிய கால பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டும். இதன்போதே நல்லிணக்கத்துக்கான அர்ப்பணிப்பை காட்டமுடியும்.

குறுகிய கால பரிந்துரைகளாக, சிறுபான்மை மக்களுக்கான பிரச்சினைகளை தீர்க்க அந்த சமூகத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து, யோசனைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பில் அரசியலமைப்பில் மீளமைப்பு உட்பட்ட வகையில் சுயாதீனமான அதிகாரம் கொண்ட ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவேண்டும்.

தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய நல்லிணக்கத்துக்கான செயலகம் என்பவற்றை பலப்படுத்தி அவற்றை சுயாதீனமாக இயங்கச்செய்யவேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் சர்வதேச நியமத்துக்கு ஏற்ப அமையவேண்டும்.

பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு உட்பட்ட கைதிகளின் தடுப்பு குறித்த விடயத்தில் குற்றமற்றவர்கள் விடுவிக்கப்படவேண்டும். குற்றம் காணப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவேண்டும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்

இந்நிலையில் படையினரால் கைப்பற்றப்பட்ட காணிகள் மீளவழங்கப்பட வேண்டும். படையினரின் அதிகாரத்தில் உள்ள காணிகளுக்காக சொந்தகாரர்களுக்கு உரிய நட்டஈடுகள் வழங்கப்படவேண்டும் என்றும் ரீட்டா பரிந்துரை செய்துள்ளார்.

மதங்களுக்கு இடையில் கசப்புணர்வுகளை ஏற்படுத்துவோர் தொடர்பில் பொதுமக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமிக்கப்படவேண்டும். அத்துடன் அனைத்து அரச நிறுவனங்களும் இந்த விடயத்தில் தமது கடமைகளை நிறைவேற்றவேண்டும்.

மொழிக்கொள்கைக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும். எதிர்கால தேர்தல்களில் சிறுபான்மையின விகிதாசாரப்பிரதிநிதித்துவத்துக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும். வடக்கு கிழக்கில் மொழியுரிமை மற்றும் மத உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும்.

அதேநேரம் பறங்கியர், இலங்கை ஆபிரிக்கர்கள், வேடுவர்கள், தெலுங்கு மக்கள் மற்றும் சிறுபான்மையின பெண்கள் ஆகியோரின் விடயங்கள் தொடர்பாகவும் ரீட்டர் ஐசெக் பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.

No comments

Powered by Blogger.