Header Ads



சிங்கள இனவாதிகளுக்குத் தீனிபோடும் வகையில், நாம் செயற்பட முடியாது - சம்பந்தன்

தமிழர்களாகிய நாம் அரசியல் தீர்வை உரிமைகளைப் பெறும் நடவடிக்கைகளில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். சிங்கள இனவாதிகளுக்குத் தீனிபோடும் வகையில் நாம் செயற்பட முடியாது. என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"தமிழ் மக்கள் பல்வேறு நெருக்கடிகளைத் தொடர்ந்து எதிர்நோக்கி வருகின்றனர். இதனை அனுமதிக்கமுடியாது, உரிமைகளைப் பெறும் பொருட்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்த அவர்களுக்கு உரித்துண்டு. எனினும், நாட்டில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்களை தமிழ் மக்கள் உணர்ந்துகொள்வது அவசியம்.

நிரந்தர அரசியல் தீர்வைப் பெறுவதற்கான முயற்சியில் நாம் தற்போது ஈடுபட்டுள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும், நிரந்தர அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்பதில் நாம் குறியாக உள்ளோம். இந்நிலையில், தமிழ் மக்களை எவரும் பிழையாக வழிநடத்தக்கூடாது.

நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம் அரசியல் தீர்வு காணப்படாமையே ஆகும். அரசியல் தீர்வைப் பெறும் நடவடிக்கையை எவரும் குழப்பக்கூடாது. தனிப்பட்ட நலனுக்காக எவரும் செயற்பட நாம் அனுமதிக்கமாட்டோம்.

சிங்களவர்களைப் பொறுத்தமட்டில் அவர்களில் இரு பகுதியினர் உள்ளனர். அவர்களில் ஒரு பகுதியினர் குழப்பவாதிகள், இனவாதிகள். அதாவது, அரசியல் தீர்வைப் பெறும் நடவடிக்கைக்கு எதிரானவர்கள். தமிழர்களின் சில இனவாத நடவடிக்கைகள் அவர்களுக்கு சாதகமாகிவிடும். அதைவைத்து அவர்கள் கூக்குரல் இடுவார்கள்.

இன்னொரு பகுதியினர் நல்லிணக்கத்தை விரும்புபவர்கள். அதாவது, நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் தமிழர்கள் செயற்பட்டால் அதற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள்.

ஆகவே, தமிழர்களாகிய நாங்கள் அரசியல் தீர்வை உரிமைகளைப் பெறும் நடவடிக்கைகளில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். நாட்டின் நல்லிணக்கத்தைப் பாதிக்காத வகையில் செயற்படவேண்டும். சிங்கள இனவாதிகளுக்குத் தீனிபோடும் வகையில் நாம் செயற்பட முடியாது. தமிழர்களாகிய நாம் எல்லோரும் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழர்களின் உரிமைக்காக நாடாளுமன்றில் குரல்கொடுத்து வருவதுடன் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்நிலையில், தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற நினைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக சிலர் செயற்படுகின்றார்கள். இவர்கள் தூரநோக்கு இல்லாதவர்கள், எமது மக்களைப் பிழையாக வழிநடத்த இவர்கள் முயற்சிக்கின்றார்கள். எமது மக்கள் இதனைப் புரிந்து செயற்படவேண்டும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும்.

தற்போதைய காலத்தில் நாம் எல்லோரும் ஒற்றுமையாக செயற்படவேண்டும், வேறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு ஒருவரை ஒருவர் விமர்சிப்பதை நிறுத்தவேண்டும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.