Header Ads



கொழும்பு நோக்கிய, அமெரிக்க படையெடுப்புகள்...!

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பாதுகாப்பு உடன்பாடுகள் ஏதும் செய்து கொள்ளப்பட்டிருக்கின்றனவா என்ற கேள்வியை எழுப்ப வைக்கும் அளவுக்கு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் அண்மைக்காலத்தில் மிகவும் நெருக்கமடைந்திருக்கின்றன.

அண்மைய நாட்களில் சில சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களில் கட்டுநாயக்கவில் அமெரிக்க விமானங்கள் தரையிறங்கியதாக செய்திகள் வெளியாகின.

திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்கா தளம் அமைக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண அடிக்கடி செய்தியாளர் சந்திப்புகளில் கூறி வருகின்ற நிலையில் தான் இத்தகைய செய்திகளும் வெளியாகி வருகின்றன. திருகோண்மலையில் அமெரிக்கா தளம் அமைக்கும் அளவுக்கு நிலைமைகள் செல்லாது விடினும், அங்கு இரகசியப் பயிற்சிகளை மேற்கொள்ளும் அளவுக்கு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் நெருக்கம் அதிகரித்திருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை.

அண்மைக்காலத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படையின் இரண்டு விமானங்கள் கட்டுநாயக்க விமனப்படைத் தளத்தில் தரையிறங்கியிருந்தன. அங்கிருந்து இவற்றில் ஒன்று கடந்த ஆகஸ்ட் 15ம் திகதி பலாலிக்கும், மற்றொன்று கடந்த ஆகஸ்ட் 22ம் திகதி திருகோணமலைக்கும் சென்றிருந்தன.

அமெரிக்க விமானப்படையின் சி.130 போக்குவரத்து விமானம், 60 அமெரிக்க, நேபாள, மாலைதீவு இராணுவ மருத்துவர்கள், அதிகாரிகளுடன் வந்து கட்டுநாயக்கவில் தரையிறங்கி, ஒருவார காலம் ஒப்பரேசன் பசுபிக் ஏஞ்சல் என்ற பெயரில் மருத்துவ உதவி நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.

இரண்டாவதாக கட்டுநாயக்கவில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படை விமானம் அங்கிருந்து திருகோணமலைக்குச் சென்றது. சீனக்குடா விமான நிலையத்தில் தரையிறங்கிய அந்த விமானம் கல்ப் ஸ்ட்ரீம் ரகத்தைச் சேர்ந்த ஜெட் விமானமாகும். 4 விமானப் பணியாளர்கள், 14 பயணிகளுடன் எங்குமே தரிக்காமல் 12 ஆயிரம் கி.மீ. தூரம் தொடர்ச்சியாக 12 மணித்தியாலம் 28 நிமிடங்கள் பயணம் செய்யக்கூடிய இந்த விமானம் திருகோணமலையில் கடந்த மாதம் 22ம் திகதி தான் முதன்முறையாகத் தரையிறங்கியது.

இந்தவகை விமானங்கள் அமெரிக்க கடற்படை, கடலோரக் காவற்படை, விமானப்படை பிரமுகர்கள், தளபதிகளின் பயணங்களுக்கு மாத்திரமே பயன்படுத்தப்படுகிறது. இத்தகையதொரு விமானம் திருகோணமலையில் தரையிறங்கிய போதே, அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் ஒருவர் தான் இங்கு வந்திருப்பார் என்பதை எவராலும் ஊகித்துக் கொள்ள முடியும்.

அமெரிக்க கடற்படையின் செயலாளர் ரே மபுஸ் தான் அந்த விமானத்தில் திருகோணமலைக்கு வந்திருந்தார். அவரை சீனக்குடா விமான நிலையத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்தன வரவேற்றார். அதற்குப் பின்னர் திருகோணமலைத் துறைமுகத்தில் இலங்கைக் கடற்படையினருக்குப் பயிற்சி அளிக்கும் ஐந்து அமெரிக்க கடற்படை நிபுணர்களைச் சந்தித்தார். பயிற்சி பெறும் இலங்கை கடற்படையினருடனும் உரையாடினார்.

அமெரிக்க கடற்படை செயலாளர் ரே மபுஸ் இந்தப் பயிற்சிகளை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்யவே வந்திருந்ததாகக் கூறப்பட்டாலும் அத்தகையதொரு நோக்கத்திற்காக மட்டும் வந்திருப்பார் என்பதை ஒருபோதும் நம்பிவிட முடியாது.

இலங்கைக் கடற்படைக்கு அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடம் தொடர்ச்சியான பயிற்சிகளை அளித்து வந்திருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சீர்குலைந்து போயிருந்த காலகட்டத்தில் கூட கண்ணிவெடி அகற்றல், இடர்கால மீட்பு, உதவி உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளையும், பயிற்சிகளையும் அமெரிக்கா வழங்கியே வந்தது. அது ஒருவகையில் இருதரப்பு உறவுகள் முற்றாக அறுபட்டு விடக்கூடாது என்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையாகவும் கொள்ளலாம்.

மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், படிப்படியாக இலங்கைக் கடற்படையினருக்கான பயிற்சிகளை அமெரிக்கா அதிகரித்தது. இலங்கைக் கடற்படைச் சுழியோடிகள் அடங்கிய குழுவொன்றுக்கு அண்மையில் குவாம் தீவில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாகவே இப்போது அமெரிக்க கடற்படை குழுவொன்று கடலில் இருந்து கண்ணிவெடிகள், வெடிபொருட்களை அகற்றுவது தொடர்பான பயிற்சிகளை திருகோணமலையில் வழங்கி வருகிறது. திருகோணமலையில் இத்தகையதொரு கூட்டுப் பயிற்சி நடக்கிறது என்ற தகவலை அமெரிக்க கடற்படைச் செயலாளர் ரே மபுஸ் திருகோணமலை வந்து செல்லும் வரைக்கும் இரண்டு நாடுகளுமே வெளியிடவில்லை.

ஊடகங்களில் தகவல் கசியாமல் இருந்திருந்தால் ரே மபுஸ் இலங்கைக்கு மேற்கொண்ட பயணம் பற்றிய தகவல் கூட சில வேளைகளில் மறைக்கப்பட்டிருக்கலாம். ஊடகங்களில் மர்மமான அமெரிக்க விமானம் ஒன்று கட்டுநாயக்கவில் தரையிறங்கி திருகோணமலைக்குச் சென்று விட்டு திரும்பிச் சென்றதாக தகவல் வெளியான நிலையில் அதுபற்றிய உண்மைகளை வெளியிட வேண்டிய நிலை இலங்கைக் கடற்படைக்கு ஏற்பட்டிருக்கலாம்.

திருகோணமலையில் நடக்கும் பயிற்சிகள் அமெரிக்க கடற்படைச் செயலாளர் தனியான ஜெட் விமானத்தில் வந்து ஆய்வு செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது. இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் உச்சத்துக்கு கொண்டு செல்வது இரண்டு நாடுகளினதும் தற்போதைய ஆவலாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

அண்மையில் கூட அமெரிக்க இலங்கை ஆயுதப்படைகளின் அதிகாரிகள் மட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட்டிருந்தன. அந்தப் பேச்சுக்களின் நோக்கம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான இருதரப்பு பயிற்சிகள், ஒத்திகைகள் மற்றும் உறவுகள் ஒத்துழைப்புகளை அதிகரிப்பதுதான்.

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு நெருக்கமடைந்திருப்பதை தனியே இந்தப் பயிற்சிகளோ, கூட்டு ஒத்திகைகளோ மாத்திரம் உறுதி செய்யவில்லை.

இந்த ஆண்டில் கொழும்புத் துறைமுகத்திற்கு மூன்று அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் மேற்கொண்ட பயணமும் கூட அதனை உறுதிப்படுத்தியிருக்கின்றது. கடந்த மார்ச் 26ம் திகதி அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ்.புளு ரிட்ஜ் போர்க்கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து மார்ச் 31ம் திகதி வரை தரித்து நின்றது.

அதற்குப் பின்னர் கடந்த ஜூலை மாதம் 24ம் திகதி ஆறு நாள் பயணமாக அமெரிக்க கடற்படையின் மற்றொரு கப்பலான யு.எஸ்.எஸ்.நியூ ஓர்லியன்ஸ் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்தது. இந்தநிலையில் கடந்த 29ம் திகதி யு.எஸ்.எஸ்.பிராங் கேபிள் என்ற அமெரிக்க கடற்படைக் கப்பல் நான்கு நாள் பயணமாக கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்தது.

யு.எஸ்.எஸ்.பிராங் கேபிள், குவாம் தீவைத் தளமாகக் கொண்டு செயற்படும் நீர்மூழ்கிகளுக்கான விநியோகம், உதவி மற்றும் பராமரிப்புகளை மேற்கொள்வதற்கான ஒரு பாரிய கப்பலாகும். இந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்ததன் நோக்கம் அமெரிக்கத் தூதரக அறிக்கையில் கூறப்பட்டிருந்தது போன்று வெறுமனே எரிபொருள் நிரப்புவது மாத்திரமன்று.

குவாம் தீவில் இருந்து இயங்கும் இந்தக் கப்பல் இந்தியப் பெருங்கடலில் நடமாடுவதற்குக் காரணம் நீர்மூழ்கிகளுக்கான விநியோகங்களை மேற்கொள்வதற்கேயாகும். ஆனால் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் எதுவும் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருக்கவில்லை. எனினும் அடுத்த சில மாதங்களில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலோ, விமானந் தாங்கிக் கப்பலோ, கொழும்புத் துறைமுகத்துக்கு வரக்கூடும். ஏனென்றால் கொழும்புத் துறைமுகத்தை அமெரிக்க கடற்படை தனது தேவைக்கு கிரமமாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டது.

தேவை ஏற்படுகின்ற போதெல்லாம் அமெரிக்க கப்பல்கள் கொழும்பு வருகின்றன. எந்த நாட்டுக் கடற்படைக் கப்பலும் விநியோகத் தேவைகளுக்காக கொழும்புத் துறைமுகத்துக்கு வரலாம் என்று ஏற்கனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்து விட்டார். அவ்வாறான தேவைகளைக் காரணம் காட்டி அல்லது நல்லெண்ணப் பயணம் என்று வரும் அமெரிக்க கப்பல்களுக்கு கொழும்பு முக்கியமான தரிப்பிடமாக மாறி வருகிறது. அமெரிக்கா - இலங்கை உறவுகளின் நெருக்கத்தினால் தான் இது சாத்தியாகியிருக்கிறது.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கூட பாதுகாப்பு உறவுகள் நெருக்கமடைந்துள்ளதால் அமெரிக்கப் போர்க் கப்பல்களின் வருகைக்கு புதுடில்லி எதிர்ப்பை வெளியிடப் போவதில்லை என்ற சூழலில் கொழும்பு நோக்கிய அமெரிக்க படையெடுப்புகள் தொடர்வதற்கான சாத்தியங்களே உள்ளன. இந்தநிலையில் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் அடுத்தடுத்த நிகழ்ச்சி நிரல்களில் எல்லாம் இனிமேல் இலங்கைத் தீவு தவிர்க்க முடியாத ஒன்றாக இடம்பிடிக்கப் போகிறது.

9 comments:

  1. அமெரிக்க ஷைத்தானின் நாடு, ஷைத்தான் நாட்டுக்குள் வருவது முஸ்லிம்களுக்கு கேடாகவே இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அவ்வாறு கூறவேண்டாம் முஸ்லிம்களாகிய நாம் சரியாக இஸ்லாமியகொள்கைகளை கடைப்பிடித்து முன்மாதிரியாக நடப்பது எமது கடமை என்பதை மறக்க முடியாது , இச்சந்தர்ப்பத்தில் நாம் எமது பண்பாடுகளை உணர்த்தி நள்ள முறையில் உறவு கொண்டாள் நிச்சயமாக அல்லாஹ் அவர்களை எமக்கு சாதகமாக்கி வைப்பான் என்பது உறுதி. . . .

      Delete
    2. அவ்வாறு கூறவேண்டாம் முஸ்லிம்களாகிய நாம் சரியாக இஸ்லாமியகொள்கைகளை கடைப்பிடித்து முன்மாதிரியாக நடப்பது எமது கடமை என்பதை மறக்க முடியாது , இச்சந்தர்ப்பத்தில் நாம் எமது பண்பாடுகளை உணர்த்தி நள்ள முறையில் உறவு கொண்டாள் நிச்சயமாக அல்லாஹ் அவர்களை எமக்கு சாதகமாக்கி வைப்பான் என்பது உறுதி. . . .

      Delete
  2. முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி அணைத்து இலங்கை மக்களுக்கும் கேடுதான் . இந்த சைத்தான்கள் வருவது வெறும்சுயநலத்துடன் மட்டுமே....

    ReplyDelete
    Replies
    1. அமேரிகா/இந்திய தலையீடுகளினால் தான் வட-கிழக்கில் மக்களின் வாழ்கை முன்னேற்றம் அடைந்து வருகின்றது என்பது தான் உண்மை.

      *NPC மத்திய அரசு/ராணுவ தலையீடுகள் குறைந்து ஒழுங்காக நடக்கின்றது. *வடக்கில் தேர்தல் நடாத்தப்பட்டது. *ராணுவம் காணிகளை மீழ ஒப்படைக்கிறது. *அரசியல் தீர்வுகளுக்காக அரசு முயற்சிக்கிறது.

      அமெரிக்கா/இந்தியா தலையீட்டிருக்கா விட்டால் பலாலிலும் வன்னியிலும் ராணுவ குடியேற்றங்கள் உருவாகியிருக்கும்.

      Delete
  3. அமெரிக்கா ஷைத்தானின் நாடு என்றால் அங்கு இஸ்லாம் இருக்கலாமா ? இஸ்லாம் உலகம் முழுவதட்கும் அனுப்பப்பட்ட ஒன்று.
    ஐயோ ஷைத்தானின் நாட்டில் எனக்கும் இருக்க முடியாமல் போய்விடும்.
    மாற்று மதத்தவர்கள் சொல்லுவது போல் முஸ்லிம்கள் எல்லோரும் சவூதி அரேபியாவுக்குத்தான் போக வேண்டி வரும்.

    ReplyDelete
  4. @ Rizwan
    அமெரிக்கா ஷைத்தானின் நாடு, அவர்களை இங்கு வரவேண்டாம் என்று சொல்பவர்கள், ஒன்றை மறந்துவிட்டார்கள், அந்த ஷைத்தானின் நாட்டிலிருந்து பலர் நம் வீட்டுக்குள்ளேயே வந்து ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டார்கள் என்பது தான்.

    புரியவில்லையா ?

    இன்டர்நெட் , தொலைபேசி , டிவி , Facebook இவர்கள் இல்லாததை வீடே இல்லை எனலாம்,
    எப்போ நீங்க இவர்களை எல்லாம் வீட்டில் இருந்து விரட்டி போறீங்க?

    ஹிஹிஹி

    ReplyDelete
  5. பெயர் தான் VoiceSriLanka, ஆனால் Voice of America.

    ReplyDelete
  6. Hahaha @ செல்வன் ஊருக்குப்புதிசு்போல...I am always voicesrilanka. அதற்காக உண்மையை மறைக்க முடியுமா?

    ReplyDelete

Powered by Blogger.