Header Ads



அதிரடிகளை ஆரம்பிக்கவுள்ள மைத்திரி - மஹிந்தவுடனும் பேச்சு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாட்டில் அதிரடித் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதோடு கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் விசேட அறிவிப்பையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கப்படுத்தவுள்ளார். 

அதேவேளை இந்த விழாவின் மேடையில் ஜனாதிபதிக்கு இருபுறமும் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சந்திரிக்காவுக்கும் ஆசனங்கள் ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது வருடப் பூர்த்தி செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதியாகும். அன்றைய தினம் வேலை நாள் என்பதால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது வருடாந்த மாநாடு 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருணாகலை வெலகெதர மைதானத்தில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக கட்சி மட்டத்தில் பல்வேறு ஏற்பாட்டுக் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. 

அத்தோடு வருடாந்த மாநாடு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட எம்.பி.யுமான மஹிந்த ராஜபக்ஷவுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வருடாந்த விழா மேடையில் ஜனாதிபதி அமரும் கதிரைக்கு இரு  பக்கங்களிலும் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்காவும், மஹிந்தவுக்கும் ஆசனங்கள் ஒதுக்கப்படுவதற்காகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்த இரு வருடாந்த மாநாட்டிற்கு கட்சியின் அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் மத வழிபாடுகளை நடத்துவதற்கான எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இதேவேளை கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்களை சந்தித்தார். இதன்போது தனக்கும், மஹிந்தவுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தியவர் பஷில் ராஜபக்ஷ என்று குற்றம் சாட்டியுள்ளார். 

எதிர்வரும் ஆண்டு ஜனவரி அல்லது பெப்ரவரி மாதத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். அண்மையில் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில், 

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பாதயாத்திரை அரசுக்கோ, ஐக்கிய தேசியக் கட்சிக்கோ எதிரானதல்ல. மாறாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்துவதற்காகவே மேற்கொள்ளப்பட்டது என்றும் குற்றம் சாட்டியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.