August 13, 2016

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனர் ஒபாமா, ஹிலாரி அதன் இணை நிறுவனர் - டிரம்ப்

நான் உண்மையை மட்டுமே சொல்கிறேன் என்று அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

இராக் தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகள் தவறானவை என்றும் அதனாலேயே அங்கு இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கம் தோன்றியது என்றும் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். தவறான கொள்கைகளைப் பின்பற்றியதன் மூலம், இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கம் தோன்றுவதற்கு ஒபாமா காரணமாகிவிட்டார். அதனால் ஒபாமாவை அந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனராகக் கருத வேண்டும் என்று டிரம்ப் ஏற்கெனவே தனது தேர்தல் பிரசாரத்தில் கூறினார். ஒபாமாவின் முதல் பதவிக் காலத்தில் ஹிலாரி கிளிண்டன் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார். ஐ.எஸ். அமைப்பு தோன்றுவதற்கு அவரும் காரணம் என்பதால், ஹிலாரி அந்த பயங்கரவாத இயக்கத்தின் இணை நிறுவனர் என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.

கடந்த இரண்டு நாள்களாக பிரசாரக் கூட்டங்களில் மட்டுமல்லாமல், தொலைக்காட்சிக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியிலும் அந்தக் கருத்தை மீண்டும் அவர் வெளியிட்டார். சி.என்.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

இராக்கில் இருந்த அமெரிக்க ராணுவத்தை ஒபாமா திரும்ப அழைத்தார். முதலில் ராணுவத்தை அனுப்பியது தவறு. ஒரு சாதாரண குடிமகனாக இராக் போருக்கு எதிரான நிலைப்பாடு எனக்கு இருந்தது. அதே சமயத்தில், திடீரென நமது ராணுவத்தை விலக்கிக் கொண்டதால் மத்திய கிழக்கு நாடுகளில் அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டது. அதற்கான விலையை பல ஆண்டுகளாக நாம் தந்து கொண்டிருக்கிறோம். ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனர் ஒபாமாதான். ஹிலாரி அதன் இணை நிறுவனர். இப்படிக் கூறுவதில் எந்தத் தவறும் இருப்பதாக நான் கருதவில்லை.

நான் உண்மையைச் சொல்பவன். உண்மையை மட்டுமே சொல்கிறேன். இதனால் அதிபர் தேர்தலில் எனக்குப் பின்னடைவு ஏற்பட்டால் நான் என்னுடைய பழைய இனிய வாழ்க்கைக்கு சந்தோஷமாகத் திரும்புவேன். ஆனால் நான் வெற்றி பெறுவது உறுதி. பொறுத்திருந்து பாருங்கள் என்றார் அவர்.

ஃபுளோரிடா மாகாணம், ஆர்லண்டோவில் கிறிஸ்தவ பாதிரியார்கள் கூட்டத்தில் வியாழக்கிழமை பேசியபோதும், தனது கருத்தை மீண்டும் அவர் வெளியிட்டார். தங்களது தவறான முடிவுகளால் ஐ.எஸ். இயக்கத்தை தோற்றுவித்தவர்கள் ஒபாமா - ஹிலாரி என்று டிரம்ப் கூறினார்.

அதிபர் தேர்தல் பிரசாரம் தரம் தாழ்ந்துவிட்டது என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதற்கு பதிலளிக்கும் விதமாக அவர் கூறியது:

என்னுடைய கருத்து சரியில்லை என்கிறார்கள். என்னைப் பற்றி காட்டமான விமர்சனங்கள் எழுகின்றன. அது பலருக்கும் ஏற்புடையதாக இருக்கிறது. ஆனால் நான் உண்மையைச் சொன்னால் பொல்லாதவனாகத் தெரிகிறேன் என்றார் அவர்.

"டிரம்ப்புக்கு தேர்தல் நிதி தர வேண்டாம்':

 சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வரும் டொனால்ட் டிரம்ப்புக்கு தேர்தல் பிரசார செலவுக்கான பணத்தை தரக் கூடாது என்று குடியரசுக் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளதாக நாளிதழ் ஒன்று தெரிவித்தது.

"பொலிடிகோ' என்கிற அதிகம் அறியப்படாத நாளிதழ் இது குறித்து தெரிவித்திருப்பதாவது:

பிரிவினைவாதம், பொறுப்பற்ற முறையில் பேசுதல் உள்ளிட்டவற்றில் ஈடுபடும் டொனால்ட் டிரம்ப்பின் போக்கினால், ஜனநாயகக் கட்சி பெரும் தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்படும். எனவே, குடியரசுக் கட்சியின் தேர்தல் நிதியை அதிபர் தேர்தலில் வீணடிக்காமல், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நமது வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் விதமாக சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

அதிபர் தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் தெரிவித்து வரும் கருத்துகளால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நமது கட்சி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படக் கூடாது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாக அந்த நாளிதழ் தெரிவித்தது.

கட்சித் தலைமைக்கு எழுதப்பட்டதாகக் கூறப்படும் அந்தக் கடிதத்தில் 70-க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2 கருத்துரைகள்:

Trump is a nitwit. He distorts the truth like Ganasara thero. It was his predecessor junior George Bush who initiated to send the U.S troops to Iraq, not Obama.

Yes. The Sponsor (of ISIS) is Donald Trump

Post a Comment