Header Ads



ரணில் + லக்ஷ்மன் மீது, ரஞ்சன் தாக்குதல்


பாராளுமன்ற உறுப்பினர் விமல்வீரன்ச கடவுச்சீட்டு விவகாரத்தில் குற்றாவாளியென தெரிந்தும் அவர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. அவர் கடவுச்சீட்டு விவாகாரத்தில் சிக்கிய போது பிரதமர் ரணில் விகரமசிங்க விமலுக்கு உதவியிருந்தால் அது தவறானதாகும்  என சமூக வலுவூட்டல் மற்றும் மக்கள் நலன்புரி  சேவைகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

மேலும்  பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல 62 ஆலோசகர்களை நியமித்துக்கொண்டுள்ளமை ஏற்றுக்கொள்ளகூடிய காரணியல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று  திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.   அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடவுச்சீட்டு விவாகாரம் ஒன்றில் சிக்கிக்கொண்டிருந்தார்.  அதே விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட பலர் நீர்கொழும்பிலும் உள்ளனர்.  ஆனால் அவர்கள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். விமலுக்கும் அவர்களுக்கும் இருக்கும் குற்றச்சாட்டுக்களில் வேறுபாடுகள் இல்லை. ஆனால் விமல் மாத்திரம் சுதந்திரமாக உலாவிக்கொண்டிருக்கிறார்.

விமலை பாராளுமன்றம் சென்றிருக்கும் போது மட்டுமே அவரை கைது செய்ய முடியாது. மற்ற நேரங்களில் அவரை  கைது செய்வதற்கு தடையாக எந்த காரணமும் இருக்காது. எனவே அவர்  கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.

  அவர் இந்த விவகாரத்தில் சிக்கிக்கொண்ட போது அவ்விடத்துக்கு வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவரை காப்பாற்றியதாக கூறப்படுகின்றது. எனது தலைவர் என்றாலும் அவர் அவ்விடத்தில் விமலுக்கு உதவியிருந்தால் அதனை தவறு என்றே சுட்டிக்காட்டுவேன்.  இதுவே எனது நிலைப்பாடு.

அதேபோல் பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவிடம்  62 ஆலோசகர்கள் சேவையில் உள்ளமை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் ஜயதிஸ்ஸ வினவிய போது அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் 250 ஆலோசகர்கள் இருந்நதாக குறிப்பிட்டார்.

ஆனால் இது பாராளுமன்ற உறுப்பினர் நளீன் ஜயதிஸ்ஸவின் கேள்விக்கான பதிலல்ல. எனவே அதற்கு உரிய பதிலை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல வழங்க  வேண்டும்.  அவ்வாறு பதில் வழங்காவிடினும் அமைச்சர் மீது குற்றம் இருந்தால் அதனை ஒப்புக்கொள்ள வேண்டுமே தவிர முன்னைய அரசாங்கத்தில் இருந்தவர்கள் தொடர்பில் சுட்டிகாட்டுவது பொருத்தமானதல்ல என்றார். 

No comments

Powered by Blogger.