July 27, 2016

மதத் தீவிரவாதம் குறித்து பஷீர், ரணிலுக்கு கடிதம்

மதத்தீவிரவாதத்தை உடனடியாகக் களைந்தெறிவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தவிசாளர் பஷீர் சேகுதாவூத் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பில்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவர் கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

மதத்தீவிரவாதத்தை உடனடியாகக் களைந்தெறிவது, நாட்டின் பாதுகாப்புக்கும் ஸ்திரத்தன்மைக்கும் மிகவும் அவசியமானதாகும் என்பதில் நீங்கள் உடன்படுவீர்கள் என்று நம்புகிறேன். 2013 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து நமது நாட்டில் முன்னொருபோதுமில்லாத வடிவத்தில் முஸ்லிம் மக்களுக்கும், இஸ்லாத்துக்கும் எதிராக மதத்தீவிரவாதமும், வெறுப்புப் பிரச்சாரமும் முடுக்கிவிடப்பட்டிருந்தது. 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தோடு இந்த தீவிரவாத நடவடிக்கைகள் சற்று ஓய்ந்ததுபோல் தோன்றினாலும் இப்போது மீண்டும் மெதுவாக முளையிட்டு ஓங்கி வளர்ந்து வருவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். 

முன்னைய அரசின் பிந்திய காலத்தில் துளிர்விட்ட முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட மேற்கூறிய நடவடிக்கைகள் தம்புள்ளை பள்ளிவாயல் விவகாரத்தை முன்வைத்து அரங்கேற்றப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு காலாகாலமாக இருந்துவந்த முஸ்லிம் மொத்த வாக்குகளில்; முப்பது சதவீத வாக்குவங்கி குறுகிய காலத்துக்குள் மாற்றப்பட்டு அக்கட்சிக்கு முஸ்லிம் ஆதரவுத்தளத்தை இல்லாதொழிப்பதற்கு இத்தீவிரவாத செயற்பாடுகள் காரணமாய்  அமைந்தன. ஆகவே கடந்த ஆட்சி மாற்றத்திற்கான அடிக்கல்லாகவும், முன்னால்; ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கான தோற்றுவாயாகவும் தம்புள்ளைப் பள்ளிவாயல்; மீதான மதத்தீவிரவாத தாக்குதலும் நெருக்கடியும் அமைந்திருந்தது. 

உங்களது கட்சியும் இன்னும் பல கட்சிகளும் விரும்பிய ஆட்சி மாற்றம் இதன் நிமித்தம் நிறைவேறிவிட்டது. ஆனால், தம்புள்ளைப் பள்ளியின் உண்மையான நெருக்கடி இன்னும் தீரவும் இல்லை, இதனைத் தொடர்ந்து நிகழ்ந்தேறிய முஸ்லிம் மஸ்ஜிதுகள் மீதான தாக்குதல்களும், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரமும் இன்னும் முடிவுக்கு வந்தபாடும் இல்லை. பெரிய மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறு குழுக்கள் முன்னெடுக்கும் சிறுபான்மை மதம் ஒன்றுக்கு எதிரான திட்டமிட்ட தீவிரவாத நடவடிக்கைகள் புதிய சிறுபான்மை மதத் தீவிரவாதத்தை நமது நாட்டுக்கு வலிந்து வரவழைக்க விரும்பும் சக்திகளின் முகவர்களாக செயற்படுவோரின் முயற்சியாகக் கூட இருக்க வாய்ப்புள்ளது என்பதை நாம் மறுதலிக்க முடியாது. 

இலங்கை மக்கள் அனைவரும் இனப்பிரச்சினையின் விளைவான மூன்று தசாப்தகால நிம்மதியான வாழ்வையும் உயிர்களையும், உடமைகளையும், நாட்டின் பொருளாதார வளங்களையும் இழந்த அனுபவத்தைக் கொண்டவர்களாகும். இவ்வினப்பிரச்சினையின் தோற்றுவாயையும் காரணிகளையும் நன்கு உணர்ந்த இன்றைய பரம்பரை இன்னும் ஒரு பாரிய தவறை  இழைக்க அனுமதிக்காது என்ற நம்பிக்கை இருந்தபோதும் நாட்டின் அரசியல் தலைவர்களுக்கும் அரசின் பிரமுகர்களுக்கும் இவ்விடயத்தில் இருக்கும் கடமையும் கரிசனையும் சாதாரண பொதுமக்களையும் குடிமைச் சமூக பிரமுகர்களையும், மதத் தலைவர்களையும்விட அதிகமானது என்பதை அழுத்தி உரைக்க விரும்புகிறேன். 

கடந்த அரசின் காலத்தில் செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான மத வன்முறைகளும், தீவிரவாத நடவடிக்கைகளும், ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டதை அனுபவப் பாடமாகப் பெற்றுக்கொண்ட சக்திகள், மீண்டும் இத்தீவிரவாதத்தைத் தூண்டிவிட்டிருப்பது ஏதோவொரு இலக்கை நோக்கிய வியூகமாகவே பார்க்கவேண்டியுள்ளது. முஸ்லிம்களின் மொத்த வாக்குகளில் முப்பது வீத வாக்கு வங்கி இலங்கையின் தேர்தல் அரசியலில் அற்புதங்களை நிகழ்த்தவல்லது என்ற படிப்பினையை எதிர்காலத்திலும் செல்லுபடியாக்கும் திட்டம் ஒன்று உள்ளதாகச் சந்தேகிக்க வேண்டியுள்ளது. 

அதாவது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இருந்த இச்சிறு தொகை முஸ்லிம் வாக்குகள் மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடித்து பொதுவேட்பாளரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெற வைத்தமையைப் போன்று எதிர்காலத் தேர்தல்களில் இக்குறிப்பிட்ட வாக்குகளை அளிக்கப்படாத வாக்குகளாக மாற்றினால் நாட்டில் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலையையும், நாட்டு நிர்வாகத்தில் குழப்பகரமான நிலவரத்தையும், பொருளாதாரத்தில் பாரிய இறக்கத்தையும் ஏற்படுத்தமுடியும் என தேசப்பற்றாளர்கள் போல நடிக்கும் தீவிரவாதிகள் நம்புவதுபோல் தெரிகிறது. கடந்த அரசிலும் இந்நாட்டு முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் பாதுகாப்பில்லை. நல்லாட்சியிலும் இதே சூழ்நிலை நிலவுகிறது. எனவே எக்கட்சிக்கும் வாக்களிக்க முடியாது என்று மேற்சொன்ன முப்பதுவீத முஸ்லிம் வாக்களார்கள் மாத்திரமல்ல இளம் முஸ்லிம் வாக்காளர்களும் நினைத்துவிட்டால் பெருந்தொகையான முஸ்லிம் வாக்குகள்  அளிக்கப்படாமல் அல்லது செல்லுபடியற்றதாகச் செய்யப்பட வாய்ப்புள்ளது என்பதை முன்கூட்டியே கூறிவைக்க விரும்புகிறேன். 

இந்நிலைமை சமுதாயம் என்ற வகையில் முஸ்லிம்களையும் கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சியையும் வெகுவாகப் பாதிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே நீங்கள் நாட்டின் பிரதமர் என்ற அடிப்படையிலும், இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே முஸ்லிம்களின் அதிகப்படியான வாக்குகளைப் பெறுகின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்பதனாலும் ஓர் அறிவுஜீவி என்ற தகுதி அடிப்படையிலும் மதத்தீவிரவாதத்தின் குணாம்சங்களைக் கணக்கிட்டு நமது நாட்டின் ஸ்திரத்தன்மைக்கும், பாதுகாப்புக்கும், சுபீட்சத்திற்கும், உங்கள் கட்சியின் எதிர்கால நலனுக்கும் இலங்கை மக்களுக்கும் பாரிய குந்தகத்தை விளைவிக்கவல்ல மதத்தீவிரவாத செயற்பாடுகளை அடியோடு களைந்தெறிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

1 கருத்துரைகள்:

Post a Comment