Header Ads



இதுபோன்ற ஒரு வழக்கு, இதுவே முதல் முறை

பிரான்ஸ் நாட்டில் உள்ள அலுவலகம் ஒன்றில் சுறுசுறுப்பு இல்லாத பணிகளை வழங்கி சோம்பேறி ஆக்கிய குற்றத்திற்காக நிறுவனம் மீது ஊழியர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக, அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வேலைப்பளு காரணமாக வேலையை ராஜினாமா செய்வார்கள்.

அதேபோல், வரைமுறைக்கு அதிகமாக வேலை வாங்கிய குற்றத்திற்காக நிறுவனம் மீது ஊழியர்கள் வழக்கு தொடர்ந்த சம்பவங்களும் நீதிமன்ற வரலாற்றில் நிகழ்ந்துள்ளன.

ஆனால், ஒரு அலுவலகத்தில் சுறுசுறுப்பான வேலை கொடுக்காமல் இருக்கையில் வெறுமனே அமர்ந்திருந்து சோம்பேறி ஆக்கிய குற்றத்திற்காக நிறுவனத்தின் மீது ஊழியர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் வாசனை திரவியம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஒரு அலுவலகத்தில் Frederic Desnard (44) என்பவர் மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், இந்த பணியில் இவர் சேர்ந்தது முதல் பதவிக்கு தேவையான எந்தப் பணியும் இவருக்கு வழங்கப்படவில்லை.

மேலாளர் என்ற பதவிக்கு தொடர்பு இல்லாத வேலை கொடுக்காமல் அவரை சோம்பேறியாகவே நிர்வாகிகள் வைத்துள்ளனர்.

பணியில் சேர்ந்து 4 ஆண்டுகளாக இதுபோன்ற இன்னல்களுக்கு உள்ளான அந்த ஊழியர் கடந்த 2014ம் ஆண்டு இறுதியில் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு அந்த நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

’பணியில் சேர்ந்தது முதல் அதிகாரிகள் என்னை சோம்பேறியாகவே வைத்துள்ளனர். எந்த வேலையும் கொடுப்பதில்லை.

ஆனால், மாதம் முடிந்தால் சம்பளம் மட்டும் தவறாமல் கொடுத்து விடுகின்றனர்.வேலை செய்யாமல் எனக்கு சம்பளம் கொடுத்ததை நான் அவமானமாக கருதுகிறேன்.

எனவே, எனது படிப்பையும், தகுதியையும் அவமானப்படுத்தி, கடந்த 4 ஆண்டுகளாக வேலை எதுவும் கொடுக்காமல் இருந்த குற்றத்திற்காக நிறுவனம் எனக்கு 3,60,000 யூரோ (5,98,95,585 இலங்கை ரூபாய்) இழப்பீடாக கொடுக்க வேண்டும்’ என அந்த வழக்கில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு நிறுவனத்தை சேர்ந்த வழக்கறிஞர் பதலளித்தபோது ‘கடந்த 4 ஆண்டுகளாக வேலை செய்யாமல், சோம்பேறியாக்கியுள்ளதாக அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனை ஏன் அவர் முதல் மாதத்திலேயே புகார் கொடுக்கவில்லை. எதற்காக 4 ஆண்டுகளாக வேலை செய்யாமல் சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்தார்?’ மேலும், நபர் தொடர்ந்துள்ள வழக்கினை நாங்கள் சட்டப்பூர்வமாக சந்திப்போம்’ என வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டு வரலாற்றில் இதுபோன்ற ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பதால், இந்த வழக்கினை எந்த கோணத்தில் விசாரிப்பது என்பது குறித்து வழக்கறிஞர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.