Header Ads



இராணுவத்தில் இணையப் போகிறீர்களா..? சம்பந்தனிடம் கேட்ட ரணில்

சம்பந்தன் இராணுவத்தில் இணைய விரும்பினால் அவருக்கு பிரிகேடியர் கேணல் அல்லது கேணல் இன் சீவ் பதவியை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

கொழும்பில் நேற்று நடந்த, சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம் அமைப்பின் 20 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சம்பந்தன் இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நழைந்ததாகவும், விடுதலைப் புலிகள் மீண்டெழுவதாகவும், சில ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டன. இதையடுத்து சம்பந்தனுடன் நான் பேசினேன். என்னைச் சந்தித்து என்ன நடந்தது என்று விளக்கமளிக்குமாறு கேட்டேன்.

என்னை அவர் சந்தித்த போது, அவரிடம் கேட்டேன் “சம்பந்தன் நீங்கள் இராணுவத்தில் இணையப் போகிறீர்களா? அவ்வாறு நீங்கள் இணைந்தால் உங்களுக்கு பி்ரிகேடியர் கேணல் அல்லது கேணல் இன் சீவ் பதவி தான் தர முடியும்.

அதற்குப் பின்னர் ஒரு பிரச்சினை உள்ளது எதிர்க்கட்சித் தலைவர், பீல்ட் மார்ஷலுக்கு மரியாதை செலுத்த வேண்டியிருக்கும்” என்று கூறினேன்.

அதற்கு, தாம் இராணுவத்தில் இணையப் போவதில்லை என்று கூறிய சம்பந்தன், அங்கு செல்ல வேண்டி ஏற்பட்ட சூழலை விளக்கினார்.

கிளிநொச்சியில் அவர் ஒரு கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார். அங்கு மக்கள் தமது காணிப் பிரச்சினையை எழுப்பியுள்ளனர்.

அந்தக் காணிகள் அரசாங்கத்தினுடையவையோ, இராணுவத்தினதோ அல்ல. பாதுகாப்புக் காரணங்களுக்காக போரின் போது கைப்பற்றப்பட்டவை.

அவை இன்னும் இரண்டு மாதங்களுக்குள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும்.

என்னுடன் தொடர்பு கொண்ட இராணுவத் தளபதி, சம்பந்தன் முகாமுக்குள் நுழையவில்லை என்றும், விரைவில் மீள ஒப்படைக்கப்படவுள்ள காணிக்குள் தான் நுழைந்தார் என்றும் கூறினார்.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தனது பயணம் தொடர்பாக இராணுவத்துக்கு முன்கூட்டியே அறிவித்தல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆனால் சம்பந்தன் எங்கும் பயணம் செய்வதற்கு உரிமை உள்ளது.

இப்போது சில ஊடகங்கள் புலிகள் மீண்டெழுவதாக செய்திகளை வெளியிடுகின்றன.

புலிகள் மீண்டும் வந்தால், போரை முறைப்படி முடிக்கவில்லை என்று மகிந்த ராஜபக்ச மீது நாம் நடவடிக்கை எடுக்கலாம்.

ஆனாலும் தீவிரவாதம் மீண்டும் தலையெடுக்க விடமாட்டோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.