Header Ads



இன்று நடைபெறும் மைத்திரி - மஹிந்த யுத்தம், மக்களிடையே பலத்த எதிர்பார்ப்பு

-நஜீப் பின் கபூர்-

கடந்த இரு வாரங்களாக மே தினம் பற்றிய பல தகவல்களைச் சொல்லி இருந்தோம். இந்த வாரம், சமஷ்டிக்கு ஆப்பு வைக்கும் நல்லாட்சி பற்றிய கதைகளைச் சொல்வதா? விடுவிக்கப்படும் காணியும் ஆக்கிரமிக்கப்படும் பூமியும் என்ற கதைகள் பற்றிப் பேசுவதா? என்று யோசித்தாலும் புலி வாலை பிடித்த நிலையில் பேனா முனை நிற்பதால், இந்த வாரமும் தேர்தல் முடிவுகள் போல் இன்று மே தினத்தை நாடே ஆவலுடன்  கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதால் நாமும் அது பற்றியே பேசியாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது!

aநாட்டில் தேர்தல்கள் நடைபெறுகின்ற போது தேர்தல் முடிந்து முடிவுகள் வெளிவரும்வரை மக்கள் அது பற்றிய முடிவுகளைத் தெரிந்து கொள்ள ஆவலுடன் இருப்பது போல், இலங்கை மே தின வரலாற்றில் என்றும் இல்லாதவாறு இந்த முறை அது பற்றிய தகவல்களை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கின்றார்கள். ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி நான்கு (4) இலட்சம் பேரை கொழும்புக்கு அழைத்து வர இருப்பதாக அறிவித்திருக்கின்றது. அப்படியானால் இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய மே தினமாக இது அமைந்து விடும். ஆனால் இந்தளவு மக்களை ஐக்கிய தேசிய கட்சியால் கொழும்புக்கு அழைத்து வந்து சாதனை படைக்க முடியுமா என்ற விடயத்தில் எமக்கு நிறையவே சந்தேகங்கள் இருக்கின்றது. 

மே தினம் என்றால் தமது ஆட்சிக் காலத்தில் கசப்பான ஒரு விவகாரமாகத்தான் இந்த ஐக்கிய தேசிய கட்சி பார்த்து வந்திருக்கின்றது. இந்தியாவிலிருந்து நடிகர்களையும் பாடகர்களையும் அழைத்து வந்து தொழிலாளர் தினத்தை ஒரு கூத்தாடிகளின் தினமாக கொண்டாடிய வரலாறுகள் நிறையவே ஐ.தே.க.க்கு இருக்கின்றது.   ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான  ஜே.ஆர். ஜெயவர்தன மே தினத்தில் தொழிலாளர்கள் கொழும்புக்கு வந்து அரசுக்கு எதிராகக் கோஷம் போடுவதை சகித்துக் கொள்ள முடியாது, அன்றைய தினத்தில் மிகவும் மளிவு விலையில் சினிமா கொட்டகைகளில் படம் பார்ப்பதற்கு வாய்பை வழங்கி இருந்தார்.

அந்த நாட்களில் சினிமாவுக்கு நாட்டில் நல்ல கேள்வி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு குறுக்கு வழியில் மே தினங்களைக் குழப்பியடித்த ஒரு கட்சியாகத்தான் ஐக்கிய தேசியக் கட்சி கடந்த கால வரலாறுகள் அமைந்திருந்தன. ஆனால் பிரேமதாச காலத்தில் இந்த நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டது. இந்த முறை நடக்கின்ற மே தினத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி பத்து இலட்சம் பேரைக் கொழும்புக்குக் கொண்டு வந்து நிறுத்தினாலும் அது பற்றி மக்கள் பெரிதாக அலட்டிக் கொள்ள வில்லை. நாட்டு மக்களின் முழுக் கவனமும் சுதந்திரக கட்சியினர் காலியில் நடத்துகின்ற மே தினக் கூட்டமும், அதன் போட்டிக் குழு மஹிந்த தலைமையில் நடத்துகின்ற கிருலபனை  மே தினக் கூட்டம் பற்றியதாகத்தான் அமைந்து இருக்கின்றது. 

இரு தரப்பினரும் தமது முழுப் பலத்தையும் பிரயோகித்து தற்போது கூட்டத்தை காலிக்கும், கிருலபனைக்கும் என்று இழுத்துக் கொண்டிருக்கின்றனர். நமது வார இதழை எமது வாசகர்கள் படித்துக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் தேர்தல் முடிவுகள் வருவது போல் தற்போது சுதந்திரக் கட்சியில் மைத்திரி - மஹிந்த அணிகளின் மே தினம் பற்றிய தகவல்களும் சமூக ஊடகங்களில் பரபரப்பாக வெளி வந்து கொண்டிருக்கும். தொழிலாளர்கள்தான் வழக்கமாக தமக்குரிய தினத்தில் கோஷம் போடுவது வழக்கம். ஆனால் இன்று இலங்கையில் கட்சிகள் தமது பலத்தை தேர்தலில் காட்டுவது போல் இந்த மே தினத்தில் காட்டுவதற்குக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றன. எனவே யாரை எல்லாம் இந்தக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்று தமது பலத்தை நாட்டுக்குக் காட்ட முடியுமே அப்படிக் காட்டி இந்த மே தினத்தில் வெற்றி பெற முனைகின்றார்கள் இவர்கள். எனவே இந்த மே தினத்தில் அங்கு வருகின்ற தலைகளின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து மைத்திரி - மஹிந்த தலைவிதி தீர்மானிக்கப்பட இருக்கின்றது.! 

இதற்கிடையில் மே தினம் தொடர்பான வாய்ச் சண்டைகள் கடுமையாக நடந்து கொண்டிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தற்போதய சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்க இப்படி ஒரு சவால் விடுத்துள்ளார். கிருலபனக் கூட்டத்தை விட ஒருவரையாவது அதிகமாக நாம் காலிக் கூட்டத்திற்கு எடுத்து வருவோம் என்று.! சில தினங்களுக்கு முன்னர் நாம் இந்த மே தினக் கூட்டத்திற்கு ஒரு இலட்சம் (100000) பேரை அழைத்து வருவோம் என்று, கூட்டு எதிர்க் கட்சி மே தின ஏற்பாட்டாளர்களில் ஒருவரான டலஸ் அலகப்பெரும கூறி இருந்தார். எனவே மைத்திரி அணியின்  காலி மே தினத்தில் ஒரு இலட்சத்தி ஒருவராவது  (100001)  இருப்பார்கள் - வருவார்கள் என்று நாம் கூறினால் அந்தக் கணக்குத் தவறாக இருக்க மாட்டாது அல்லவா! இது அவர்கள் சூத்திரம் அல்லவா?

கடந்த தேர்தல்களில் மஹிந்தவுடன் இறுதிவரை இருந்த தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், டக்லஸ் தேவானந்த தலைமையிலான ஈபிடிபி போன்ற கட்சிகளும், கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு கொடுத்த இன்னும் பத்துக்கும் மேற்பட்ட அமைப்புக்களும் இந்த முறை மைத்திரியின் பட்டாம் பூச்சிகளின் மே தினத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முடிவு செய்திருக்கின்றது. என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நாள் முன்னாள் தலைவர்களின் இந்த ஆதிக்கப் போட்டியில் இரு தலைக் கொல்லி எறும்பாக  மஹிந்த அணியில் இருக்கின்ற பலர், சேர் நாம் காலிக்கு  வந்து கிருலபனைகும் போக வேண்டும். அதற்கு எமக்கு நீங்கள் அனுமதி தாருங்கள் என்று  மன்றாடி இருக்கின்றார்கள். அவர்களின் இந்த வேண்டுகோளை ஜனாதிபதி மைத்திரி அடியோடு நிராகரித்திருக்கின்றார் என்று எமக்கு சுதந்திரக் கட்சி வட்டாரங்களில் இருந்து அறியக் கிடைத்திருக்கின்றது.!

முன்னாள் உள்ளுராட்சி மன்றத் தவிசாளர் ஒருவர் நாம் இந்த முறை நிச்சயமாக கிருலபனைக் கூட்டத்திற்கே போக இருக்கின்றோம். நாங்கள் அங்கு போய் மீண்டும்  ராஜபக்ஷவுக்கு முடிசூட இருக்கின்றோம். அவர்களின் மொழியிலே சொல்வதாக இருந்தால் (கிருலபனட யன்னே மஹிந்தட கிருலு பலந்தன்னட) எனவே கிருலபனையில் நடைபெறுவது ராஜபக்ஷவுக்கு முடிசூடுகின்ற விழா! அப்படியானால் கிருலபனைக் கூட்டத்திற்கு எதற்காக தொழிலாளர்கள் போய் அணிவகுக்க வேண்டும் என்று கேட்கத் தோன்றுகின்றது. 

இதற்கிடையில் கூட்டு எதிர்க் கட்சியில் பசிலின் ஆதிக்கம் தொடர்பில் மஹிந்த அணியில் கடும் முறுகல் நிலை தோன்றி இருக்கின்றது. இதனை நாம் கடந்த வாரமும் சுட்டிக் காட்டி இருந்தோம். இதில் புதிய நிலை!  கூட்டு எதிர்க் கட்சி விடயத்தில் முக்கிய ஒரு பங்காளியாக இருந்து உழைத்த வாசுதேவ நாணயக்காரவும் பொறுப்பான இந்த நேரத்தில் நாட்டில் இருந்து தலைமறைவாகி, தற்போது கிவ்பாவில் இருக்கின்றார் என்று தெரிகின்றது. பசில் நடவடிக்கைகளை முன்பு வாசு பகிரங்கமாக விமர்சித்து வந்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இதற்கிடையில் தனக்கு ஒத்துழைப்பு வழங்காத பல சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களை ஜனாதிபதி நீக்கி அந்த இடத்திற்குப் புதியவர்களை நியமித்திருக்கின்றார்.  எனவே இந்த முறை சுதந்திரக் கட்சியில் நடக்கின்ற மே தினக் கூட்டங்கள் தற்போது அதிகாரத்தில் இருக்கின்றவர் தன்னுடைய பதவியை பலப்படுத்துகின்ற முயற்சியாகவும், பதவியைப் பறிகொடுத்தவர்  அதனை மீண்டும் கைப்பற்றுவதற்கு எடுக்கும் போட்டியாகவும் இந்த 2016 மே தினம் நமது நாட்டில் இருக்கின்றது. மக்கள் மத்தியிலும் இந்த மே தினம் பற்றிய எதிர்பார்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றது.

No comments

Powered by Blogger.