Header Ads



28 வருடங்களுக்கு பிறகு பிறந்த குழந்தையை, வரவேற்கும் இத்தாலிய நகரம்

வட இத்தாலிய நகரான ஒஸ்டானாவில் பிறந்த குழந்தையை நகரே ஒன்றுகூடி விழா எடுத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது

வடக்கு இத்தாலியில் உள்ள சிறிய நகரம் ஒன்று, 1980 க்கு பிறகு பிறந்துள்ள முதல் குழந்தையின் வரவை மகிழ்வுடன் கொண்டாடி வருகிறது.

பீட் மாண்ட் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒஸ்டானா என்ற அந்த நகரின் மேயர், இந்த குழந்தையின் வரவு, தமது சிறு நகரின் ஒட்டுமொத்த சமூகத்தின் கனவு நனவானதை குறிப்பதாக தெரிவித்தார்.

கடந்த நூறு ஆண்டுகளில் அந்த பகுதியில் மக்கள் தொகை படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்திருக்கிறது.

கடந்த வாரம் டூரின் மருத்துவமனையில் பிறந்த குழந்தை பாப்லோவின் வருகையை அடுத்து அந்த நகரில் வசிப்பவர்களின் எண்ணிக்கை எண்பத்தி ஐந்தாக அதிகரித்துள்ளது. எனினும் இந்த எண்ணிக்கையில் பாதி பேர் மட்டுமே நிரந்தரமாக அந்நகரில் வசிப்பவர்கள் என்று லா ஸ்டாம்பா என்ற செய்தித்தாள் தகவல் தெரிவிக்கிறது.

ஒருகாலத்தில் ஆயிரம் பேர் வசித்த ஒஸ்டானா நகரில் 1987 ஆம் ஆண்டுக்குப் பிறகு குழந்தையே பிறக்கவில்லை

நகர மேயர் இதுகுறித்து கூறுகையில்,1900களில் சுமார் ஆயிரம் பேர் வரை ஒஸ்டானா நகரில் வாழ்ந்தனர் என்றும் ஆனால் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் இந்நகரின் பிறப்பு விகிதம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வந்தது என்றும் தெரிவித்தார்.

அதிலும் குறிப்பாக 1975 ஆம் ஆண்டு முதல் இந்த நகரின் மக்கள் தொகை வீழ்ச்சி வேகமடைந்தது. 1976ஆம் ஆண்டு முதல் 1987 ஆண்டு வரை 17 குழந்தைகள் மட்டுமே இந்நகரில் பிறந்துள்ளனர். 1987 ஆம் ஆண்டுக்குப் பிறகு தற் தற்போதைய புதுவரவு தான் பாப்லோ என்னும் இந்த ஆண்குழந்தை என்கிறார் அவர்.

நகரின் வீழ்ந்து வரும் மக்கள் தொகை என்ணிக்கையை உள்ளூரில் புதிய வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருவதன் மூலம் அதிகரிக்க முயன்று வருகிறது ஒஸ்டானா.

புதிய வரவான பாப்லோவின் பெற்றோரான சில்வியா மற்றும் ஜோஸ் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒஸ்டானாவை விட்டு வெளிநாடு செல்ல முடிவெடுத்திருந்தனர். ஆனால் அருகிலிருக்கும் ஒரு மலைப் பகுதியின் பராமரிப்புப் பணி ஒன்று அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த எண்ணத்தை அவர்கள் கைவிட்டனர்.

இவர்களுடைய இந்தக் கதை இங்கே பல குடும்பங்களுக்கும் பொருந்தும்.

மலைக்கிராமங்களில் இளம்தலைமுறைக்கு வேலைவாய்ப்பின்மை முக்கிய பிரச்சனை

மலைப்பிரதேச நகரங்கள் மற்றும் சமூகங்கள் தேசிய ஒன்றியத்தைச் சேர்ந்த மார்கோ புஸ்ஸோன் கூறுகையில், ஒரு பகுதியில் ஒருவர் இருப்பதும், வெளியேறுவதும் அவரவர் சுயவிருப்பம். ஆயினும் இப்படியான பிரதேசங்களில் வாழத் தயாராக இருப்பவர்கள் மற்றும் தொழில் செய்யத் தயாராக இருப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் வரி விலக்குகள் அளிக்கப்படவேண்டும் என்றும் கூறினார்.

இத்தாலி முழுக்கவே அதன் சிறிய நகரங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வேலை தேடி வெளியூர்களுக்குச் சென்று விடுவதால் மக்கள் தொகை வீழ்ச்சியால் பெரும் அவதிபடுகின்றன.

இந்த போக்கை மாற்றுவதற்கு ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு வழியில் முயன்று வருகின்றன. சில ஊர்களில் காலியாக இருக்கும் வீடுகள் இலவசமாக கொடுப்பதன் மூலம் இந்த போக்கை தடுக்கப் பார்க்கிறது. இன்னொரு நகர மேயரோ தமது நகர குடிமக்கள் உடல்நலன் குன்றுவதற்கு தடை விதித்து அதன் மூலம் மக்கள் தொகை குறைவதை தடுக்கப்போவதாக அறிவித்தார்.

அந்த வரிசையில் 28 ஆண்டுகள் கழித்து பிறந்திருக்கும் குழந்தை பாப்லோவின் வருகையை குறிக்கும் விதமாக, ஒஸ்டானா நகரமே ஒன்று கூடி விழா எடுத்துக் கொண்டாடியது. அத்தோடு நகரின் முகப்பில் கொக்கு ஒன்று சிறிய நீல நிறத்தூளியில் இருக்கும் குழந்தையையை தனது அலகில் தூக்கியவாறு இருக்கும் சிலையை வைத்துள்ளனர் நகர மக்கள்.

No comments

Powered by Blogger.