Header Ads



'மன்னிக்கவும் முஸ்லிம்களை, நாங்கள் பணியமர்த்துவதில்லை'

'மன்னிக்கவும் முஸ்லிம்களை நாங்கள் பணியமர்த்துவதில்லை'. பிரபல வைர வியாபார நிறுவனத்தில் வேலைக்கு விண்ணபித்தவருக்கு அந்நிறுவனம் அனுப்பிய ஒற்றை வரி பதில்தான் இது.

"என்னை பணியமர்த்த வேண்டாம் என அவர்கள் நினைத்திருந்தால், அதற்கு அவர்கள் வேறு ஏதாவது பதில் சொல்லியிருக்கலாம்" என கூறுகிறார் பாதிக்கப்பட்ட ஜெசான் அலி கான்.

ஜெசான் அலி கான், ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் அண்மையில் (India)  மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் நிறுவனத்தில் பணியில் சேர விண்ணப்பித்திருக்கிறார்.

இவருடன் சேர்ந்து இவரது நண்பர்கள் பலரும் விண்ணப்பித்திருக்கின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு பணியும் உறுதியாகிவிட்டது. ஆனால், ஜெசானின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

அது குறித்து அவர் நம்மிடம் ( தி இந்து - ஆங்கிலம் ) கூறும்போது, "எனது நண்பர்களுடன் இணைந்து ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்தேன். அடுத்த 20-வது நிமிடத்தில் எனக்கு மின்னஞ்சலில் பதில் வந்தது. அதில், "உங்கள் விண்ணப்பத்துக்கு நன்றி. மன்னிக்கவும் முஸ்லிம்களை நாங்கள் பணியமர்த்துவதில்லை" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதைப் படித்துவிட்டு நான் அதிர்ந்து போனேன். என்னை பணியமர்த்த வேண்டாம் என அவர்கள் நினைத்திருந்தால், அதற்கு அவர்கள் வேறு ஏதாவது பதில் சொல்லியிருக்கலாம்" என்றார்.

ஜெசான் தனது மன வருத்தத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்ய, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தை சமூக வலைத்தளவாசிகள் சரமாரி வசை பாடினர். இதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை தலைவர் மகேந்திரா எஸ்.தேஷ்முக், வருத்தம் தெரிவித்து ஜெசானுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அக்கடிதத்தில், "பாலினம், மதம், ஜாதி அடிப்படையில் மனிதர்களிடம் எங்கள் நிறுவனம் பாகுபாடு பார்ப்பதில்லை என்பதை தெளிவுபடுத்து விரும்புகிறேன். உங்களுக்கு ஏதாவது மன வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்காக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், குறிப்பிட்ட அந்த மின்னஞ்சலை எங்கள் நிறுவனத்தில் பயிற்சியாளாராக இருக்கும் தீபிகா டிகேவால் தவறுதலாக அனுப்பப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

2 comments:

  1. ஏன் இங்கு கூட முஸ்லிம் என்ற காரணத்தால் நிராகரிக்கப்பட்ட பலர் இருக்கிறார்கள்

    ReplyDelete
  2. அநீதிகளை எதிர்ப்பது சிறந்தவிடயம்தான். ஆனால், பாதிக்கப்படுபவர்களாக நாம் இருக்கும் நேரத்தில் மட்டும்தான் இதைப் புரியவேண்டும் என்பதில்லை.

    மனிதர்களை பால், இனம், நிறம், பின்பற்றும் ஆன்மீக நம்பிக்கை ஆகியவற்றைக் கொண்டு தகுதிகாண்பது தவறானது-இதை யார் செய்தாலும்தான்.

    இவ்வாறு கூறும் இதே கணத்தில்..

    ஒருவர் தமது மதத்தை பின்பற்றுவதில்லை எனும் காரணத்திற்காக அந்நியப்படுத்தப்படும் எத்தனையோ தொழிலாளிகளின் நிலைமைகள் கண்முன் நிழலாடுகின்றன. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில்.

    ReplyDelete

Powered by Blogger.