Header Ads



அளுத்கமவில் எந்தவொரு பெளத்த மதகுருமாரும் உயிரிழக்கவில்லை - பொலிஸ்மா அதிபர்

பொய்யான வதந்திகளைப் பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸ்மா அதிபர் என். கே. இளங்கக்கோன் இரு தரப்பையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பேருவளை அளுத்கம பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 

அளுத்கமவில் எந்தவொரு பெளத்த மதகுருமாரும் உயிரிழக்கவில்லை. இது தொடர்பில் வெளிவரும் பொய்யான வதந்திகளை மக்கள் நம்பக்கூடாது எனவும் அவர் வேண்டு கோள் விடுத்தார்.

களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே பொலிஸ்மா அதிபர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார். 

கடந்த சில தினங்களாக அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்களில் இரு இனங்களுக்கிடையிலான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதற்கு உண்மைக்குப் புறம்பான பொய் வதந்திகளே காரணமாகும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

அளுத்கம குறுந்துவத்தை விகாரையைச் சேர்ந்த சமித்த தேரர் கடந்த 12ம் திகதி பத்ராகொட பிரதேசத்துக்கு வானில் பயணிக்கும்போது வழியில் சென்ற இரு முஸ்லிம் இளைஞர்களுக்கும் வான் சாரதிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் கைகலப்பில் முடிவுற்றது. இச்சம்பவத்தினால் வானில் பயணித்த தேரரும் காயத்துக்கு உள்ளானார். 

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் முஸ்லிம் இளைஞர்களை கைது செய்ததுடன் நீதி மன்றத்தில் ஆஜர் செய்தனர். காயமடைந்த சமித்த தேரர் வைத்திய சாலையில் தங்கி சிகிச்சைபெற்று குணமடைந்த நிலையில் நேற்று முன்தினம் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்.

இவரை வரவேற்பதற்காக அளுத்கம நகரில் பாரிய வரவேற்பு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமிந்த தேரர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டபோது தர்கா நகர் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகில் கல் மற்றும் பொல்லுகள் வீசப்பட்டுள்ளன. 

இதனைத் தொடர்ந்தே மோதல் சம்பவம் விரிவடைந்தது. இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட இந்த மோதலில் 29 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி களுத்துறை, நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டனர்.

இவர்களில் இரண்டு முஸ்லிம் இனத்தவர்களே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நிலைமை கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவது தொடர்பாக பிரதமர் தலைமையிலான விசேட கூட்டமொன்று களுத்துறை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடத்தப்பட்டது. மேலும் இனங்களுக் கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் பல குழுக்களையும் நியமித்துள்ளார். 

மோதல் சம்பவத்தில் 6 பொலிஸார் காயங்களுக்கு உள்ளாகி கொழும்பு பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிலர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார். 

2 comments:

  1. பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு கட்டுப்படுத்தும் அதிகாரத்தை பாதுகாப்புச்செயலாளன் இன்னும் தராமல் இருக்கும் போது உங்களால் கைகட்டி வேடிக்கை பார்க மட்டும்தான் முடிய்ம்.

    ReplyDelete

Powered by Blogger.