Header Ads



குருநாகல் மாவட்ட முஸ்லிம்களின் தற்போதைய நிலை என்ன..?


(குருநாகல் பிரதேச பிராந்திய அரசியல்வாதியும், சிங்கள - முஸ்லிம் ஒற்றுமைக்கு முன்நின்று உழைப்பவரும், பிரதேசத்தில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களை முறியடிப்பதில் பங்காற்றுபவருமான அப்துல் சத்தார் www.jaffnamuslim.com  இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியே இது) 

இ. அம்மார்

இன்று இலங்கை முஸ்லிம்களுக்கு பௌத்த இனவாதிகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களில் நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும்  குருநாகல் மாவட்டத்தில் கடந்த வாரங்களில் நடந்த சம்பவங்கள் முஸ்லிம்களை மிகவும் மோசமான மனோநிலைக்கு தள்ளுமளவுக்கு ஒரு பீதி நிலையை ஏற்படுத்தி இருந்தது தற்போதைய நிலை என்ன?

ஆம். உண்மையிலேயே குருநாகல் மாவட்டத்தில் இன்று முஸ்லிம்கள் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் மோசமான சூழ்நிலையையிட்டு நான் மிகவும் மனம் வருந்துகின்றேன். இந்த மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மை சிங்கள மக்களோடு பல காலங்கள்  ஒற்றுமையாக வாழ்ந்து வந்ததை நாம் மறக்க முடியாது. என்றாலும் இன்று திட்டமிடப்பட்ட சில விசமிகளின் நடவடிக்கைகளால் இன்று அடுத்த நிமிடம்  என்ன நடக்குமோ என்று முஸ்லிம்கள் அஞ்சுமளவுக்கு நிலமைகள் மாறியுள்ளன. என்றாலும் இந்தப்பிரச்சினைகளையும் வரக்கூடிய அபாயங்களையும் முஸ்லிம்களோ அல்லது முஸ்லிம் இயக்கங்களோ இன்னும் உணராமல் இருப்பது கவலைக்குரியதாகும்.

முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து விளக்க முடியுமா?

ஆரம்பத்தில் சில இனவாதிகள் குருநாகல் நகரில் ஆரிய சிங்கள வத்த என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசலில் நிர்வாகிகளை எத்கந்த விஹாரைக்கு அழைத்துச் சென்று பலவந்தமாக இனிமேல் மேற்படி பள்ளிவாசலில் தொழுகை நடத்தக் கூடாது என்று கடிதம் ஒன்றில் நிர்வாகிகளின் கையொப்பத்தை பெற்றனர். இந்த விடயம் எனக்கு கேள்வியுற்ற போது உடனடியாக குருநாகல்  பிரதிப் பொலிஸ் மா அதிபரோடு இந்த விடயம் குறித்து முறைப்பாடு செய்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ததன் மூலம் இவர்களின் இந்த விடயம் கைகூடவில்லை. 

அதன் பின் கடந்த நோன்பு காலத்தில் தெதுருஓயகம அல் அக்ரம் மஸ்ஜிதுக்கு முன்னால் மஃரிப் தொழுகைக்கு பின்பு ஒரு பௌத்த குழுவுடன் வந்த பிக்கு ஒருவர் பலவந்தமாக பிரித்தோதி பிரச்சினைகளை உண்டு பண்ணிய சந்தர்ப்பத்தில் எனக்கு இது சம்மந்தமாக தெரியவந்தபோது குருநாகல் பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திசாநாயக தலைமையில் பாதுகாப்பு பிரிவினரோடு ஸ்தலத்திற்கு சென்று சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்த குழுவினரை அகற்றி உடனடியாக தராவீஹ் இல் இருந்து மீண்டும் தொழுகை ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது.
அதன் பின்பு கடந்த மாதத்தில் பிக்கு ஒருவரின் சாரதி, முஸ்லிம் இரு இளைஞர்களால் பறகஹதெனியவில் தாக்கப்பட்ட சம்பவத்தை வைத்து பறகஹதெனிய நகரில் பிக்குகள் உட்பட குழுக்கள் வந்து தொடர்ந்து இரண்டு நாட்கள் முஸ்லிம் கடைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி அங்கிருந்த சிங்களவர்களை முஸ்லிம் கடைகளுக்குச் செல்ல வேண்டாம் என ஏசி விரட்டினர்.

அதனைத் தொடர்ந்து 24 -01-2013 அன்று குளியாப்பிட்டி நகரில் மாத்தளை வெதஹாமதுருவோ என்பவரின் கீழ் இயங்கும் ஹெலசிஹலஹிரு என்ற அமைப்பின் ஏற்பாட்டில் பிக்குகள் உட்பட சுமார் 150 பேர் அடங்கிய குழுவொன்று ஹலாலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இதில் பன்றியின் படத்தின் மேல் அல்லாஹ் என்ற திருவசனம் எழுதப்பட்டிருப்பதாக குருநாகல் மாவட்ட ஜம்மியதுல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெஹ் சித்தீக் அவர்கள் எனக்கு முறைப்பட்டதையிட்டு உடனடியாக இது சம்மந்தமாக ஜனாதிபதியோடு நேரடியாக தொலைபேசியில் முறைப்பாடு செய்ததுடன் மாகாண சபை உறுப்பினர் நஷருடன் இணைந்து குளியாப்பிட்டிக்கு சென்று குளியாப்பிட்டிய பொலிஸ் அத்தியட்சகர் கருணாநாயக்க , குளியாப்பிட்டிய நகர முதலவர் லக்ஷமன் அதிகாரி குளியாப்பிட்டிய அஸ்வத்தும விஹாரையின் சில தேரர்களை சந்தித்து இந்தப் பிரச்சினை சம்மந்தமாக இதன் பின்னர் இப்படியான பிரச்சினைகள் நடைபெறாது என்று உறுதியளித்தனர்.  நான் குளியாப்பிட்டிக்கு சென்ற போது பொலிசாரினால் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

உண்மையிலேயே இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பாவிக்கப்பட்ட பாதாதைகள் சம்மந்தமாகவோ எதிர் நடவடிக்கை சம்மந்தமாகவோ குளியாப்பிட்டியவிலுள்ள பல முஸ்லிம்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது ஒரு முஸ்மாயினும் இந்த சம்பவம் பற்றி விபரம் சொல்லவில்லை அல்லது அறிந்திருக்கவில்லை. அதன் பின்பு மிகவும் கடத்திற்கு மத்தியில் இரவு சுமார் 8.00 மணி அளவில் ஒரு சிங்கள சகோதரரிடமிருந்து தான் இந்த ஆர்ப்பாட்டத்தின் படங்களையும் வீடியோவினையும் பெற்ற கொள்ள முடிந்தது. இவைகளைப் பார்க்கும் போதுதான் எங்கள் இரத்தம் கொதிக்குமளவுக்கு அவ்வார்ப்பாட்டத்தில் அல்லாஹ் என்ற சொல்லை அவமதிக்கக் கூடிய அவதூறான காட்சிகளை காண முடிந்தது. இது சம்மந்தமாக எழுத்து மூலமாக ஜனாதிபதிக்கு நான் தெரியப்படுத்தினேன்.

இவ்வாரம் நாரம்மலை நகரில் உள்ள முஸ்லிம் கடைகளுக்கு மார்ச் 31 ம் திகதிக்குள் மரண அச்சுறுத்தல் விடுத்து கடிதங்கள் அனுப்பப்பட்டதுடன் அதிகாலையில் இருவர் இனந்தெரியா நபர்களால் வேறு இடங்களில் தாக்கப்பட்டனர். மறுநாள் முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளின் உடமைகள் சேதமாக்கப்பட்டன. இது சம்மந்தமாக பொலிஸ் தலைமையகத்திலுள்ள விசேட பிரிவுக்கும் நாரம்மல பொலிஸ் நிலையத்திற்கும் என்னால் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தோடு நோலிமிட் நிறுவனத்திற்கு சொந்தமான விளம்பரப் பதாதையொன்று தீக்கரையாக்கபட்டுள்ளது. 

இவைகளுக்கு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குருநாகல் மாவட்டத்தின் முக்கிய முஸ்லிம் அரசியல் என்ற வகையில் கூறுவது என்ன?

இந்தப் பிரச்சினைகள் சம்மந்தமாக அவ்வப்போது பாதுகாப்பு அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு நிலைமைகளை சுமுகத்திற்கு கொண்டு வந்துள்ளேன். இருந்தாலும் முஸ்லிம்கள் ஏதோ ஒரு காரணமாக இப்படியான பிரச்சினைகள் வரும் போது உரியவர்களை அணுகாதது ஒரு மனம் வருந்தக் கூடிய விடயம். இந்தப் பிரச்சினைகளின் போது பாதுகாப்பு அதிகாரிகள் அதுபோல் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் முஸ்லிம்களுக்காக எனக்களிக்கும் ஆதரவு மறக்க முடியாதது.

முஸ்லிம் மக்கள் மத்தியில் ந்த இனவாதிகளுக்கு அரசாங்க ஆதரவு இருப்பதாக பரவலாகச் சந்தேகிக்கப்படுகிறது. முஸ்லிம் என்ற வகையில் இதற்குரிய உங்கள் பதில் என்ன?

30 வருட யுத்தத்தால் வந்த கசப்புக்களை அரசாங்கமும் பெரும்பான்மை மக்களும் இன்னும் மறக்கவில்லை. இன்னோரு யுத்தத்திற்கு இவர்கள் தயாருமில்லை. ஆதலால் உங்கள் யூகம் தவறானது. இலங்கையின் மீது பிளவுகளை உண்டு பண்ணி எம்மீது யுத்தத்தை திணித்த மேற்கத்திய நாடுகள் இன்னும் இந்த சதிகளிலிருந்து ஓய வில்லை. சில பௌத்த பிக்குகளை கூலிக்கமர்த்தி முஸ்லிம்களின் மீது வீணாக சிங்கள அல்லது பௌத்த வெறுப்பலைகளை உண்டு பண்ணி நாட்டில் மீண்டும் ஒரு இரத்த ஆற்றை ஓட்டுவதற்கு தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

கடந்த ஜெனிவா மாநாட்டில் மனித உரிமை மீறல்கள் சம்மந்தமாக இலங்கை தோற்கடிக்கப்பட்டபொழுது அதிகமான முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மாநாட்டில் இலங்கையை அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு முஸ்லிம் நாடுகளை பயன்படுத்தும் நோக்குடன் இலங்கையில் சிங்கள முஸ்லிம் இனக்கலவரத்தை தூண்டுவதற்கு உரிய ஏற்பாடே இந்த நடவடிக்கைகளாகும். இது சம்மந்தமாக ஆதாரபூர்வமான தகவல்கள் இன்று வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பௌத்த அமைப்புக்களால் ஹலால் சம்மந்தமாக அல்லது முஸ்லிம்களின் நிலமை சம்மந்தமாக ஒப்புவிக்கும் அளவுக்கு உண்மைகள் எடுத்துக் கூறப்பட்டாலும் இவர்களின் நோக்கம் முஸ்லிம் இனக்கலவரத்தை தூண்டுவதாக இருப்பதால் இவைகளை ஏற்றுக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் முஸ்லிம்களுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவைகளைத் தடுப்பதற்காகத்தான் பொலிஸ் தலைமையகத்தில் சமயங்களுக்குரிய சகவாழ்வை சீர்குழைக்கும் நடவடிக்கைகள் சம்மந்தமாக முறைபாடு செய்வதற்கு விசேட பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கலாம்.

இங்கு குருநாகல் மாவட்டத்தில் முக்கியமான தலைமை பௌத்த பிக்குகள் உட்பட பெரும்பான்மை சிங்கள மக்களும் நாம் மிகவும் நெருக்கமாகவும் அந்நியொன்னியமாகவும் பழகுவார்கள். இவர்களிடத்தில் எங்களைப் பற்றி நல்லபிப்பிராயம் உள்ளது. இங்கு நடந்த ஒவ்வொரு பிரச்சினைகளும் வெளிமாவட்டத்திலிருந்து வருகை தந்தவர்களால்தான் செய்யப்பட்டது. அத்தோடு எமது பிரச்சினைகள் அணுகும் முறைகளை நாங்கள் அறியாமல் இருக்கிறோம். தேவையற்ற பிரச்சினைகளுக்காக முஸ்லிம்கள் இன்று பிளவுபட்டுள்ளோம். எங்கள் நாட்டில் நாங்கள் உழைத்து சாப்பிட்டு வாழ்ந்த காலம் எங்களுக்குள் பிளவுகள். பிரிவுகள் இருக்கவில்லை. ஒவ்வவொரு முஸ்லிம் நாடுகளை சார்ந்து கொண்டு நாங்கள் பிரிந்துள்ளதால் இன்று எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அபாயாகரமான சந்தர்ப்பத்தில் கூட நாங்கள் பித்துப் பிடித்தவர்களாக எங்கள் இயக்க அல்லது அரசியல் கொள்கைகளுக்காக கூறுபட்டுள்ளோம். இந்த சவாலை வெற்றிகொள்வதற்கு எங்களுக்குள்ள ஒரே ஆயுதம் ஒற்றுமைதான்.

அப்படி முஸ்லிம்களுக்கு குருநாகல் மாவட்டத்தில் பிரச்சினை ஒன்று வராது என்பதற்கு உங்கள் உறுதி மொழி என்ன? 

முஸ்லிம் சமூகம் ஒரு கோழைச் சமூகமல்ல. அடிக்கும் போது நாங்கள் ஒடுவதற்கு இந்த நாட்டிற்கு நாங்கள் அந்நியவர்களும் அல்ல. நான் எப்பொழுதும் முஸ்லிம் பிரச்சினைகளில் மிகவும் விழிப்பாக இருக்கிறேன். இந்த அரசாங்கத்தை பிரதிநிதித்துபவன் என்ற வகையில் இந்த நாட்டில் மீண்டும் ஒரு இனக்கலவரம் ஏற்படாது என்பதை உறுதியாகக் கூறுகிறேன். எங்கள் மீது இருக்கும் சந்தேகங்களுக்கு கேள்வி எழும்பும்பொழுது சந்தேகங்கள் வரும் போது நாங்கள் அவைகளுக்கு அஞ்சாமல் முகம் கொடுக்க வேண்டும். எதிரிக்கு அஞ்சாமல் தைரியத்தோடு வெற்றி கொண்டவர்கள் எமது மூதாதையர்கள். சரியான வழியில் இஸ்லாமிய நடவடிக்கைகள் சம்மந்தமாக உரிய விளக்கங்கள் அளிக்கப்படாதது இன்றைய பிரச்சினைகளுக்கு மூல காரணமாகும். ஹலால் சம்மந்தமாகக் கூட சரியான முறையில் பொது பல சேனாவுக்கோ அல்லது அடுத்தவர்களுக்கோ சரியாக விளக்கமளிக்கப்பட்டால் ஹலால் இன்றி எதையும் எவரும் அணுக மாட்டார்கள். இந்த பிரச்சினையில் நபி நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளின் படி நாங்கள் இன்னும் இந்தப் பிரச்சினையை அணுக வில்லை என்பதே என்னுடை தனிப்பட்ட கருத்தாகும்.

அத்தோடு விசேடமாக எங்களுக்கென்று ஊடகங்கள் இல்லாதது இஸ்லாத்தைத் தெரிந்த உலமாக்களுக்கு இந்த நாட்டின் சிங்கள பேசக் கூடிய பௌத்தர்களுக்கு இஸ்லாம் என்னவென்று சரியாக உணர்த்தாதது ஒரு முக்கிய காரணமாகும். எங்களுக்கென்று ஒரு ஊடக அமைப்பு இருந்திருக்குமேயானால் இந்தப் பிரச்சினையை மிக இலகுவாகத் தீர்க்க முடியும். இன்று சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் கூட ஒரு விஷமாக இந்தப் பிரச்சினை ஊட்டப்பட்டுள்ளது. முக்கியமாக சிங்கள அறநெறிப் பாடசாலைகளில் முஸ்லிம்களைப் பற்றிய மோசமான கருத்துக்கள் சிறுவர்களுக்குக் கூடப் போதிக்கப்படுகிறது என்றாலும் எங்களுக்கு பயன்தரக் கூடிய ஜும்ஆ பிரசங்கங்கள் சமூகத்திற்கு பிரயோசனப்படாத முறையில் நிகழ்த்தப்படுவது வருந்தத் தக்கதாகும். அனைத்து பிரச்சினைகளையும் கருத்து முரண்பாடுகளையும் மறந்து முஸ்லிம்களே நாம் ஒன்றுபடுவோம்.



3 comments:

  1. போற்றத்தக்க பேட்டி திரு ;சத்தார் அவர்கள் பாராட்டுக்குரியவர்

    ReplyDelete
  2. Great Man … Great Job!
    Thanks to Muslims for being patient.

    ReplyDelete
  3. யார் என்னதான் சொன்னாலும் இந்தப்பிரச்சினைக்கு மூலகாரணமாக இருப்பது அரசாங்கமே, சரி 30 வருடகால் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த அரசு இன்னுமொரு யுத்தத்திற்கோ அழிவிற்கோ தயாரில்லையென்றால் ஏன் பொதுபலசேன அமைப்பிற்கு இன்னும் அரசு சரியான பதிலொன்றையோ அல்லது கட்டுப்பாட்டையோ வழ்ங்க மறுக்கிறது.. அப்படியானால் அதன் அர்த்தம் என்ன? இதற்கு அரசாங்கம் பதிலளிக்குமா. பிள்ளையும் கிள்ளி தொட்டிலும் ஆட்டும் அரசாங்கம்தான் இது. உலகத்தரம் வாய்ந்த போராளிகளான் தமிழீழ விடுதலைப்புலிகளை அடியோடு அழித்த அரசுக்கு இது எந்தளவு... யார் இதற்கு பதில் சொல்லப்போகிறார்....

    ReplyDelete

Powered by Blogger.